29.8.12

கோபாலி! சீக்கிரமா வாங்க!

என் நண்பர்களுள் மிக நெருக்கமானவரும், வழித்துணையுமான தஞ்சாவூர்க்கவிராயர் (கோபாலி) இதய அறுவை சிகிச்சைக்காக இன்று மெட்ராஸ் மெடிகல் மிஷனில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்கான நாளும், நேரமும் அவரின் உடல்நிலை (சர்க்கரையும், ரத்த அழுத்தமும்) கண்காணிக்கப்பட்ட பின் முடிவாக இருக்கிறது.

நவீன மருத்துவத்தில் இவ்விதமான சிகிச்சைகள் தற்போது மிகுந்த லாவகத்துடனும், கண்காணிப்புடனும் நடைபெறும் இவ்வேளையில் இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அவர் பரிபூரண நலம் பெற்று மீண்டும் எழுதத் துவங்கும் நாளை நான் ஆவலுடன் எதிர்நோகியிருக்கிறேன்.

கடந்த பத்து நாட்களில் அவரோடு என்னால் நிறைய நேரங்களில் உடனிருக்க முடிந்தது. பாரதியின் கட்டுரைகள், சார்வாகன், நகுலன், க.நா.சு, வள்ளலார் போன்றோரின் எழுத்துக்களை நான் வாசிக்க அவர் கேட்டுக்கொண்டிருந்தார். கர்ணன் திரைப்படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்னைப் பாடச் சொன்னார். அவர் வீட்டில் வந்து தங்கிச் செல்லும் பறவைகளைப் பற்றி, குறித்த நேரத்தில் இரைக்காகக் கிளம்பி வரும் ஐந்து கட்டெறும்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்துவந்த பின் நாம் இருவரும் ஒரு பயணம் மேற்கொள்ளவேண்டும் எனவும், சின்ன அளவில் ஒரு ஹோட்டல் நடத்திப் பார்க்கவேண்டும் எனவும் என்னிடம் ஆசைப்பட்டார்.

அவர் மனைவி அவருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று ஆஞ்சியோக்ராம் முடிந்து தெரிவித்தவுடன் தேம்பி அழுதது இன்னும் என் மனதிலேயே உறைந்திருக்கிறது.

தன் எழுத்துக்கள் மூலம் இந்தச் சமூகத்துக்கு சிகிச்சைகள் தந்து, வாழ்வின் ரசத்தைப் பருக வைக்கும் இந்த எளிமையான கலைஞன், மீண்டும் புது உற்சாகத்துடனும் ஆரோக்யத்துடனும் திரும்பி வரவேண்டி என் இஷ்ட தெய்வம் சுவாமிமலை முருகனின் பாதங்களில் பணிகிறேன்.

மருத்துவமனையின் வெளிப்புறம் உங்களுக்காகக் காத்து நிற்கிறேன் கோபாலி. சீக்கிரமா வாங்க!

14 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

வெற்றிகரமாகச் சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்.

இராமசாமி கண்ணன் சொன்னது…

என்னுடைய பிரார்த்தனைகளும் சுந்தர்ஜி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விரைவில் குணமடைந்து நல்லபடியாகவே திரும்பி வருவார் என நம்பி நாமும் பிரார்த்திப்போம்.

இன்றைய மருத்துவ விஞ்ஞானம் நன்கு முன்னேறித்தான் உள்ளது.

கவலைப்படாமல் தைர்யமாக
இருங்கோ ஜி.

GOPU

ரமணன். சொன்னது…

அவசியம் வருவார். ஆரோக்கியமாக வருவார். அற்புதமான கவிதைகளைத் தருவார். ஆண்டவன் அருளைப் பெறுவார். அகப்பயணத்தில் ஆழ்வார்.

அன்புடன்,
ரமணன்.

ஆர்.வி.எஸ். சொன்னது…

அந்த ஜெய’காந்த’ மீசைக்காரர் மீண்டு வர ப்ரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
ஆர்.வி.எஸ்.

இரசிகை சொன்னது…


sundarji yudan sernthu naangalum kaathirukirom..prarththanaikaludan.

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி அவர்களே! கோபாலி தான் தஞ்சாவூர் கவிராயரா! ஆஹா! மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அவரை முன்னிலும் செயலூக்கம் முள்ளவராக நம்மிடையே கொண்டுதரும்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

எல் கே சொன்னது…

விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

ரிஷபன் சொன்னது…

அவருக்கு நிறைய வேலை இருக்கு.. என் கூட அரட்டை பாக்கி இருக்கு.. கவிதைகள் இன்னும் இருக்கு.. கதைகளும் கூட..

நம் இதயம் அல்லவா அவர்.. எல்லாத் துடிப்புகளும் அவர் நலனுக்காக.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிராயர் குணமடைய எனது பிரார்த்தனைகளும்...

அப்பாதுரை சொன்னது…

கொஞ்சமும் எதிர்பாராத செய்தி. நீங்கள் சொல்லியிருப்பது போல இந்நாளில் இத்தகைய சிகிச்சைகள் சாதாரணம். இவருக்கா சிகிச்சை நடந்தது என்று ஆறே வாரத்தில் வியப்பீக்ரள்.
அவருக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

மாலி சொன்னது…

இவ்விதமான சிகிச்சைகள் தற்போது மிகுந்த லாவகத்துடனும், கண்காணிப்புடனும் நடைபெறும் இவ்வேளையில், இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அவர் பரிபூரண நலம் பெற்று மீண்டும் எழுதத் துவங்கும் நாளை, மாதங்கியும், நானும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.

எங்கள் இஷ்டதெய்வத்தைப் பிரார்த்திக்கிறோம்.

நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவர். நன்கு குணமாகி
கூடிய சீக்கிரமே தேங்காய்ச்சட்னியோடு நெய்ப்பொங்கல் சாப்பிடுவார்.கவலை வேண்டாம்.

மிக்க அன்புடன் ,
மாலி .

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

இருதய அறுவை சிகிச்சை மட்டிலுமே அல்ல, எந்த சிகிச்சையும் இலேசான மனத்தோடும், உள்ளார்ந்த நம்பிக்கையோடும் அணுகப்படவேண்டியது தான்.

முதல் கதை எழுதி அனுப்பியவர் பத்திரிகை ஆசிரியர் கருத்துக்காகக் காத்திருக்கும்போது, அதற்குள் அஞ்சல்காரர் மணியார்டர் வந்திருக்கிறது என்று அழைக்கக் கேட்கும் இன்ப அதிர்ச்சி சிலருக்கும் வாய்க்கும் அல்லவா..கவிராயர் அப்படி அவராகவே நேரடியாக நமக்கு அஞ்சல் போட்டு, நான் வந்தாச்சு, அவங்கவங்க வேலையைப் பாருங்கப்பா என்று சொல்லவும் கூடும்.

உங்களோடு நானும் அவருக்கான வாழ்த்துக்களோடு.

எஸ் வி வேணுகோபாலன்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...