9.5.13

நீர்ப் பறவைகள் - காதம்பரி

சின்ன வயதிலிருந்தே எனக்கு விளையாட்டுக்களில் எந்தவிதமான ஈடுபாடும் இருந்ததில்லை. மற்ற சிறுவர்கள் சடுகுடு, கிட்டிப்புள், பாண்டி, கால்பந்து முதலிய விளையாட்டுக்களில் மெய்மறந்து முனைந்திருக்கும்போது நான் தனியாக உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன்.

வீட்டுக்குள் அமர்ந்தபடி விளையாடக்கூடிய தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, சீட்டாட்டம், செஸ் இவைகளிலும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ‘பிறரோடு கூட்டுச் சேர்ந்து விளையாடாமல் தனியே இருக்கும் குழந்தைகள், பிற்காலத்தில் மிகவும் துன்பப் படுவார்கள்’ என்று தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள் முழங்குகிறார்கள். அது உண்மைதான் என்பது அனுபவத்திலிருந்து தெரிகிறது.

தெருவில் உள்ள பிள்ளைகளுடன் கூடிக் கும்மாளம் அடித்து விளையாடாவிட்டாலும் பாதகமில்லை. பள்ளிக்கூடத்தில் வகுப்பு மாணவர்கள் விளையாடும் ஆட்டங்களில் இருந்து ஒதுங்கி இருப்பது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழாமல் இல்லை.

நான் படித்த தேசிய உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுக்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பாடங்களில் நிறைய மதிப்பெண்கள் பெறுவதையே பெரிய சாதனையாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருதினார்கள்.

விளையாட்டு மைதானம் இருந்தது. விளையாட்டு ஆசிரியரும் இருந்தார். கட்டாய விளையாட்டுக்கான வகுப்புகளும் இருந்தன. இருந்தபோதிலும் பெரும்பாலான மாணாக்கர்கள் புத்தகங்களைக் கட்டிக்கொண்டுதான் அழுதோம்.

உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையே ஆண்டுதோறும் நடக்கும் போட்டிப் பந்தயங்களில் எங்கள் பள்ளி மாணவர்கள் எப்போதும் தோற்றுத்தான் போவார்கள். எந்தப் பரிசும், கேடயமும் வாங்கியதே இல்லை. அப்போதெல்லாம் அவமானமாக இருக்கும்.

ஆனால் பள்ளி இறுதித் தேர்வில், நாங்கள் நூறு சத விகிதம் தேறிச் சாதனை படைப்போம். மதிப்பெண்கள் பெறுவதில் முன்னணியில் நிற்போம். ஐந்நூறுக்கு முந்நூற்றறுபது வாங்கிய நான், சராசரி மாணவனாகத்தான் கருதப்பட்டேன் என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் போல ஆயிரத்து இருநூற்றுக்கு ஆயிரத்து நூற்று எண்பது மார்க் வாங்குவது எல்லாம் அப்போது நடக்காது. சாட்சாத் ஸாமுவேல் ஜான்சனே எழுதினால் கூட இங்கிலீஷ் வாத்தியார் எழுபதுக்கு மேல் போடமாட்டார். கவிச்சக்ரவர்த்தி கம்பனே எழுதினால் கூட தமிழ்ப்பண்டிதர் கோபால கிருஷ்ணபிள்ளை எழுபதுக்கு மேல் கொடுக்கமாட்டார். கணிதத்தில் சுளையாகஎண்பதிலிருந்து நூறு வரை வாக்குவோம். பொது விஞ்ஞானம், சமூகவியல் இவைகளில் எண்பதுக்குக் குறையாமல் வாங்கமுடியும். கல்விக் கடவுள் கலைமகளே எழுதினால் கூட எங்கள் பள்ளியில் நானூறு மார்க் வாங்குவது சந்தேகம்தான்!

எதிர்கால இந்தியாவுக்குத் தேவையான குமாஸ்தாக்களையும், வாத்தியார்களையும், அதிகாரிகளையும் எங்கள் புத்தகத் தொழிற்சாலை கூட்டம் கூட்டமாக உற்பத்தி செய்து வந்தது. அதில் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே பெருமை வேறு!

கட்டாய விளையாட்டுக்குரிய வேலையாட்களில் ஒருவனாக மைதானத்துக்கு நாலு மணிக்கே நானும் சென்று விடுவேன். கையில் ஈயம் பூசப்பட்ட பித்தளை டிஃபன் பாக்ஸ் ஒன்று ஆடிக்கொண்டிருக்கும். வயிற்றைப் பசி கிள்ளும். மதியம் சாப்பிட்ட தயிர்சாதம் எப்போதோ ஜீரணம் ஆகி, வயிறு காலியாகத்தான் இருக்கும். விளையாட விருப்பம் இருந்தால் கூட விளையாட முடியாது.

களைத்துப்போய் புளியமர நிழலில் சோர்ந்து உட்கார்ந்த வண்ணம் வேடிக்கை பார்ப்பேன். சில நாட்களில் நூல் நிலையத்திலிருந்து வாங்கிவந்த நாவல்களைப் படிப்பதுண்டு. சில மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் மறுநாளுக்குரிய வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருப்பார்கள். விளையாடுபவர்கள் மிகச் சிலர்தான்.

ட்ரில் மாஸ்டர் ஜஸ்டின் கனகராஜ் ஸார் ரொம்பக் கறார் பேர்வழி. ராணுவத்திலிருந்து பணிஓய்வு பெற்றவர். கட்டுப்பாடும், மிடுக்கும் நிறைந்தவர். இருந்தபோதிலும் இதயமும் உள்ளவர்.

எல்லோரும் விளையாடும்போது, புளியமரத்தடியில் சாய்ந்துகொண்டு சரத்சந்திரர் நாவல்களையும், காண்டேகர் நாவல்களையும் படிக்கும் என்னை வினோதமாகப் பார்ப்பார் கனகராஜ் ஸார்.

”நீ ஏன் விளையாடுவதில்லை?” என்று கேட்டார் ஒருமுறை.

நான் பணிவுடன், “இரண்டு காரணங்கள் சார்! விளையாடுவதற்குத் தெம்பு இல்லை. மேலும் விளையாட விருப்பமும் இல்லை” என்று பதில் கூறினேன்.

”அப்போ வீட்டுப்பாடத்தையாவது படி அல்லது எழுது. கோமளம் குமரி ஆன கதை எல்லாம் படித்து என்ன செய்யப் போகிறாய்?” என்று அக்கறையுடன் கேட்டார்.

“ஸார்! நான் எழுத்தாளனாகப் போகிறேன். அதனால் பெரிய எழுத்தாளர்களுடைய நூல்களைப் படிக்கிறேன்” என்று பவ்யமாகப் பதிலளித்தேன். அவரும் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

விளையாட்டு வாத்தியாரின் மறைமுகமான ஆதரவுடன் நிறைய நாவல்களை மாலை நேரங்களில் படித்துத் தள்ளினேன்.

இன்னொரு நாள் கனகராஜ் ஸார் என்னிடம் வந்தார்.

”ஏம்ப்பா! நீ எங்கேருந்து வரே?” என்று விசாரித்தார்.

“சேந்தங்குடி அக்ரஹாரத்திலேருந்து வரேன்” என்றேன்.

“அது எங்கே இருக்கு?”

”காவேரிக்கு முக்கால் மைல் வடக்கிலே இருக்கு ஸார்! நம்ம ஸ்கூல்லேருந்து ஒண்ணரை மைல் இருக்கும்”

‘உங்க தெருப்பக்கம் குளம் ஏதாவது இருக்கா?”

“ஏன் ஸார் கேக்கறீங்க? ரெண்டு குளம் இருக்கு ஸார்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

“அப்படியா? தண்ணி நெறைய இருக்குமா?  நல்லாக் குளிச்சிட்டுத் துணிகளுக்கு சவுக்காரம் போடலாமா? என்று கேட்டார் ஆவலுடன்.

“ஜோராக் குளிக்கலாம் ஸார். ஆனா சவுக்காரம் போட்டுத் துணி துவைக்க முடியாதுங்க. காவல்காரன் ரத்தினம் கன்னாபின்னான்னு வைவான். வாயில வந்தபடியெல்லாம் திட்டுவான் ஸார்! எண்ணெய் தேச்சும் குளிக்க முடியாது” என்றேன் பரபரப்புடன்.

“அப்ப சவுக்காரம் போட முடியாதுங்கறே?” என்று இழுத்தார் ஏமாற்றத்துடன்.

“இல்லே சார். நான் சொன்னது கோவில் திருக்குளம். இன்னொரு பெரிய குளமும் இருக்கு. அதுக்குப் பேரு கிள்ளைக் குளம். அங்கே நிறையப் பேரு துணி தோய்ப்பாங்க. எண்ணெய் தேய்ச்சும் குளிக்கலாம்” என்றேன்.

“சரி. வர்ற ஞாயிற்றுக் கிழமை ஒங்க வீட்டுக்கு வரேன். குளங்களை எல்லாம் காட்டறயா?” என்று கேட்டார்.

நான் மிகவும் மகிழ்ச்சியுடன், “வாங்க ஸார். எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க!” என்று மொழிந்தேன்.

எங்கள் ஊர்க் குளங்களைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்ல வேண்டும்.

சிவன் கோயிலுக்கு எதிரே உள்ள குளம் குப்பன்குளம் என்றழைக்கப்படும் திருக்குளம் எப்போதும் தண்ணீர் நிரம்பி ஓரளவு சுத்தமாக இருக்கும். நிறைய மீன்கள் வளர்க்கப்படுவதால் தண்ணீரின் தூய்மை பராமரிக்கப்பட்டது. அழகிய சிமெண்ட் படித்துறைகள் இரண்டு நன்றாக தனித்தனியாகக் குளிக்க வசதியாகக் கட்டப்பட்டிருந்தன.

குளத்தில் ஆங்காங்கே அல்லி பூத்துக் குலுங்கும். பச்சைப்பசேல் என்ற வட்டமான இலைகளுடன் அல்லிக்கொடிகள் முக்கால் பகுதிக்கு மேல் படர்ந்திருந்தன. பல வண்ணங்களில் தும்பிகள் இங்குமங்கும் பறந்து அல்லி மலர்களில் அமரும் அழகை நான் இமை கொட்டாது பார்த்து ரசிப்பேன்.

முழுநிலாக் காயும் பௌர்ணமி இரவுகளில் சிவன் கோயில் வாயிற்படிகளில் மௌனமாக அமர்ந்து நெடுநேரம் குளத்தின் மேற்பரப்பைப் பார்த்தபடி கனவுலகில் சஞ்சரிப்பது உண்டு. பொன்முலாம் பூசிய அந்தத் திருக்குளம் என்னை என்னவெல்லாமோ செய்யும். மனனோகனக் கற்பனைகள் அடிமனதில் தோன்றி என்னைப் பாடாய்ப் படுத்தும்.

இன்னொரு குளமாகிய கிள்ளைக்குளம் நூறு மீட்டர் தொலைவில்தான் இருந்தது. அளவில் இன்னும் பெரியது. அதிக ஆழம் இல்லாதது. குளத்தைச் சுற்றிலும் பாறாங்கற்கள் இங்கும் அங்குமாகக் கிடக்கும். மயிலாடுதுறை வாழ் சலவைத் தொழிலாளர்கள் தமது அழுக்கு மூட்டைகளை அங்கேதான் தோய்த்துச் சுத்தம் செய்வார்கள். அவர்கள் கருங்கல்லிலே துணிகளை ஓங்கி அடித்துத் தூய்மைப் படுத்தும் சத்தத்திலே நான் ஆதி தாளம், திஸ்ர ஏக தாளம், இத்தனை லயக் கோலங்களையும் கேட்டு ரசிப்பேன்.

போதும் போதாத்தற்குக் கிள்ளைக் குளம் முழுவதும் கொக்குகளும், மடையான்களும் கோரைப் புற்களின் இடையிடையே அமர்ந்து மீன் பிடிக்கத் தவம் செய்யும்.

வானத்தில் உலவும் மஞ்சுத் திரள்கள் திட்டுத் திட்டாகக் குளத்தின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும். குளத்தின் வடமேற்கு மூலையில் இருந்த ஒரு மணல் மேட்டில் நெடிதுயர்ந்து நின்ற பனைமரங்களின் சொற்ப நிழலில் அமர்ந்த வண்ணம் கூட்டமாய்ப் பறக்கும் மடையான்களைப் பார்த்துப் பரவசமடைவேன்.

ஓ! அது சொர்க்கலோகத்தின் ஆசார வாசல்; சௌந்தர்யபுரத்தின் சோபனவாசல்!

டுத்த ஞாயிற்றுக்கிழமை கனகராஜ் ஸார் தனது புத்தம்புது ராலே சைக்கிளில் ஏறிக்கொண்டு என் இல்லத்துக்கு மாலை மூன்று மணிக்கு வந்தார்.

எனது அப்பா அவரை அன்புடனும், மரியாதையுடனும் வரவேற்றார். திண்ணையில் அமர்ந்த அவருக்குச் சூடான வாழைக்காய் பஜ்ஜியும், சுவையான நரசுஸ் காஃபியும் தந்து நாங்கள் உபசரித்து மகிழ்ந்தோம்.

“ஒங்க பையன் கெட்டிக்காரன்தான். ஆனா எப்பப் பார்த்தாலும் படிச்சுக்கிட்டே இருக்கக்கூடாதுன்னு சொல்லுங்க. விளையாடவே மாட்டேங்கிறான்” என்றார் சிரித்துக்கொண்டே.

“காலையிலே சாப்பிடறதோட சரி. மத்தியானம் டிஃபன் போதலை. சாயந்திரம் களைச்சுப் போயிடறதுன்னு சொல்றான். வெளையாட முடியலை, நீங்க பெருந்தன்மையா விட்டுடறீங்கன்னு சொல்லி நெகிழ்ந்து போறான்” என்றார் அப்பா.

“ஏதோ நம்மாலே முடிஞ்ச சின்ன உதவி. அப்ப வரட்டுங்களா?” என்று கனகராஜ் ஸார் கிளம்பிவிட்டார். நான் சைக்கிளின் பின் ஸீட்டில் உட்கார்ந்து கொண்டேன்.

முதலில் குப்பன் குளத்துக்கு அழைத்துக் கொண்டு போனேன். அல்லிகள் அழகு செய்த அத்தடாகத்தைக் கண்டு ஆசிரியர் பிரமித்து நின்றார். “இன்னொரு சமயம் வந்து குளிக்கறேன்” என்றார்.

அதன் பிறகு குளத்தின் கிழக்குக் கரை வழியாகப் போனோம். பிரும்மாண்டமான இரண்டு ஆலமரங்கள் அங்கே உண்டு. அவற்றின் நிழலில் மாட்டுக்கிடையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பசுங்கன்றுகளும், இளம் பசுக்களும், எருது காளைகளும் படுத்துக்கொண்டு நிதானமாக அசை போட்டன. அவற்றின் இடையே வளைந்தும், நெளிந்தும் சைக்கிள் சென்றது. கனகராஜ் ஸார் வியப்புடன் பார்த்துக் கொண்டே கவனமாகச் சைக்கிளை ஓட்டினார்.

”ஒங்க ஊர்ல இது மாதிரி குளம் உண்டா ஸார்?” என்று ஆவலுடன் விசாரித்தேன்.

“எனக்கு ராமநாதபுரம் ஜில்லாப்பா. தண்ணி இல்லாத காடு. எங்கே பார்த்தாலும் ஒரே வறட்சியா இருக்கும்” என்று ஏக்கத்துடன் சொன்னார்.

பிறகு, “இன்னொரு குளம் சொன்னாயே? எங்கே இருக்கு அது?” என்று அக்கறையுடன் கேட்டார்.

“அதுதான் ஸார் கிள்ளைக்குளம். அங்கேதான் இப்போ போறோம்” என்றேன்.

விரைவில் அங்கே போய் இறங்கினோம்.

“அட! மடையான், நீர்க்காக்கா எல்லாம் கூட இருக்குதே” என்றார் உற்சாகத்துடன்.

“ஆமாம் ஸார். வானத்திலே மப்பும் மந்தாரமுமா இருள் சூழ்ந்து மழை வரமாதிரி இருக்கும் போது, இந்த மடையான் எல்லாம் சாரி சாரியா, வெள்ளை வெளேர்னு விமானப்படை விமானங்க மாதிரிப் பறக்கும். அதைக் காணக் கண்கோடி வேணும் ஸார்” என்று பெருமிதத்துடன் சொன்னேன்.

“ஆமாம். ரொம்ப நல்லாத்தான் இருக்கும்” என்று இழுத்தார் கனகராஜ் ஸார்.

பத்து நிமிஷம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி விட்டோம். நான் வீட்டுக்குப் போய் நடந்ததைச் சொன்னேன்.

“ராமநாதபுரம் பக்கமெல்லாம் எப்பவும் பஞ்சம்தான். அவாளுக்குத் தஞ்சாவூர் ஜில்லாக் காவேரிக்கரைப் பச்சையைக் கண்டா ஆச்சர்யமாகத்தான் இருக்கும்” என்றார் என் அப்பா.

ரு வாரம் சென்றது.

அன்றும் ஞாயிற்றுக்கிழமைதான். நான் கல்கியின் சிவகாமியின் சபதத்தின் நான்காவது பாகத்தை அனுபவித்துப் படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்காரரின் ரேடியோவிலிருந்து மைசூர் சௌடையாவின் வயலின் தேனிசையாகப் பொழிந்து கொண்டிருந்தது.

திடீரென்று டமார் டமார் என்று வேட்டுச் சத்தம் தொடர்ந்து ஏழெட்டு முறை கேட்டது. சில விநாடிகள் கழித்து எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த குளத்தங்கரை வாதா மரத்தின் கிளைகளில் ஒவ்வொன்றாக மடையான்கள் வந்திறங்கின. என்ன இது? என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம் மறுபடியும் தொடர் வேட்டுச் ச்த்தங்கள் செவிப்பறையைப் பிளந்தன.

தெருவோடு போன பைத்தியம் நாணா,”கொக்கு சுடறான் கிள்ளைக் குளத்திலே” என்று தனக்குத் தானே பேசியபடி சென்றான்.

வெறிபிடித்தவன் போலக் கிள்ளைக் குளத்துக்கு ஓடினேன். கால் முழுவதும் நெருஞ்சி முட்கள் குத்தி ரத்தம் வடிந்ததைப் பொருட்படுத்தாமல் ஓடினேன்.

குளத்தங்கரையில் ஒரு கல்யாண முருங்கை மரத்தின் அடியில் ட்ரில் மாஸ்டரும், இன்னும் சில நபர்களும் வேட்டைத் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். மாயூரம் நகர் கூறை நாட்டைச் சேர்ந்த எங்கள் பள்ளி மாணவர்கள் சிலர், குளத்தில் இறங்கி நடந்து கோரைப் புற்களின் நடுநடுவே குற்றுயிரும், குலையுயிருமாகத் துடித்துக் கொண்டிருந்த நீர்ப்பறவைகளைத் தலைகீழாகப் பிடித்துத் தூக்கி வந்தார்கள். அவற்றின் வெள்ளை நிற உடல்களில் இருந்து உதிரம் சொட்டிக் கொண்டிருந்தது. ட்ரில் மாஸ்டரின் காலடியில் ஒரு கோணிப்பை கிடந்தது. அதிலிருந்தும் ரத்தம் வடிந்தது. என் இதயத்திலிருந்தும் ரத்தம் வடிந்ததை உணர்ந்தேன்.

”ஸார்! நீங்க செய்யறது அநியாயம். மகாப் பாவம்” என்று வெறியுடன் கத்தினேன். கனகராஜ் ஸாரும், மற்றவர்களும் சிரித்தார்கள். அத்தனை பேரையும் கொன்று குவித்துவிட வேண்டும் போல் தோன்றியது எனக்கு.

அந்த நீர்ப்பறவைகளின் சாவுக்கு நான்தான் மறைமுகமான காரணம் என்று இப்போதும் குற்ற உணர்வு என் நெஞ்சைச் சுடுகிறது.

10 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நீர்ப் பறவைகள்- எதிர்பாராத முடிவு அய்யா. அழகை ரசிப்பார் என்று பார்த்தால்,.... மனம் கணக்கிறது அய்யா.

Anonymous சொன்னது…

உங்களது இந்த பதிவு விகடனில் வெளி வரும் "மறக்கவே நினைக்கிறேன்" தொடரை நினைவு படுத்துகிறது
- நாகசுப்பிரமணியன்

அப்பாதுரை சொன்னது…

பூவைப் பார்த்து ரசிக்கையில் கிளை முறிந்து மண்டையில் விழுந்தது போல்.. சட்டென்ற திருப்பம் வயிற்றைக் கலக்கிவிட்டது. எளிய நடையை எளிமையாக எடை போட்டிருக்கக் கூடாது :)

அப்பாதுரை சொன்னது…

மடயான் என்றால் நாரையா?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஜெயக்குமார்.

நன்றி நாக்ஸ்.

நாரைதான் அப்பாதுரை. தஞ்சாவூர் சிதம்பரம் பகுதிகளில் இந்த மடையான் பெயர் ப்ரபலம்.

கீத மஞ்சரி சொன்னது…

மனத்தை அறுக்கும் முடிவு. சலவைத் தொழிலாளர்களின் துணி துவைக்கும் சத்தத்திலும் சுதந்திரமாய் ஆனந்தமாய் வாழ்ந்த அப்பறவைகளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து (பார்த்துதான்... காட்சியைக் கண்முன் நிறுத்துகிறதே எழுத்து!) மனம் துடிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Vassan சொன்னது…

புவியியல் ரீதியில் அருகாமையில் காழியில் வளர்ந்தவன் நான். குளம், குட்டை ,ஆறு என பித்தாக அலைந்தவன், பொடியனாக. சேந்தங்குடி பக்கத்தில் ஆனந்தண்டவபுரத்திலும் அழகான அல்லிக்குளம் உண்டு. குலதெய்வம் கோவில் பக்கத்தில்.

நிற்க.

மாயவரம் உடற்பயிற்சி ஆசிரியர் கனகராஜ் போல, நான் படிக்காத எல் எம் ஸி - சீர்காழி பள்ளியில் பீடர், ஜோசப் நடராஜன் ஆசிரியர்கள். மொடையான், மொடையான் பூ போடு! என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள், மார்கழி மாதத்தில் மடையான், பழந்திண்ணி வவ்வால் என சுட்டுத் தள்ளுவார்கள்.

இப்படி பழங்கதையை எண்ணிப் பார்க்க உதவிய உங்களுக்கும் உங்கள் பதிவுக்கும் நன்றி.

அமேரிக்காவில் தமிழன்/வாசன்

அப்பாதுரை சொன்னது…

இந்த லேஅவுட் நன்றாக இருக்கிறது.

G.M Balasubramaniam சொன்னது…

நல்ல நடை. அழகான எழுத்தோட்டம். ஆனால் திகில் கதையாக முடித்தது எதிர்பார்க்காதது. you are different சுந்தர்ஜி.

geethasmbsvm6 சொன்னது…

//“ஆமாம் ஸார். வானத்திலே மப்பும் மந்தாரமுமா இருள் சூழ்ந்து மழை வரமாதிரி இருக்கும் போது, இந்த மடையான் எல்லாம் சாரி சாரியா, வெள்ளை வெளேர்னு விமானப்படை விமானங்க மாதிரிப் பறக்கும். அதைக் காணக் கண்கோடி வேணும் ஸார்” என்று பெருமிதத்துடன் சொன்னேன்.//

அருமையான காட்சி தான். கல்யாணம் ஆகி வந்து முத முதல்லே என் நாத்தனார் மடையான்னு சொன்னதைக் கேட்டு முதல்லே ஒண்ணும் புரியலை. அப்புறம் தான் நாரையைச் சொல்கிறாங்கனு புரிஞ்சது. சிரிப்பு வந்தது. இப்போப் பழகிப் போச்சு இந்தத் தஞ்சை ஜில்லா வழக்குச் சொற்களை எம்பளது லக்ஷம் தரத்துக்கும் மேல் கேட்டு! :))))))

//“ஆமாம். ரொம்ப நல்லாத்தான் இருக்கும்” என்று இழுத்தார் கனகராஜ் ஸார்.//

ஏதோ செய்யப் போறார்னு மனசிலே பட்டது. கடைசியிலே அதிர்ச்சியாயிடுச்சு. ஊர்ப் பஞ்சாயத்திலே சொல்லித் தடுத்திருக்கலாமே. எங்க வீட்டில் வேப்பமரத்தில் வந்து தங்கும் அணில், காக்கைகள், மற்றப் பறவைகளை இப்படித் தான் கவண் கல்லை வைச்சு அடிப்பாங்க. பயங்கரமாச் சண்டை போட்டுத் துரத்தி விடுவேன். :(((( என்னமோ மனிதர்கள்!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...