26.5.13

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை


 
திருச்சூர் பூரத் திருநாளுக்கு வரிசையாக முகபடாம் அணிந்த யானைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்த்ததுண்டா?

லக்ஷக்கணக்கான மக்கள் சூழ அசைந்துவரும் திருவாரூர் தியாகராஜரின் தேர்த்திருவிழாவில் நீங்கள் கலந்துகொண்டதுண்டா?

கும்பமேளாவில் குவிந்திருக்கும் கூட்டத்தின் நடுவில் சிக்கி, எந்த வழியில் முன்னேறிச் செல்வது என்று தெரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

நிற்பவர்கள் யாரென்ற அக்கறையின்றி, ஓயாது புரளும் அலைகளுடன் சங்குகள், சிப்பிகள் என்று சலித்துக்கொண்டிருக்கும் ஒரு மஹாசமுத்திரத்தின் கரையில் நெடுநேரம் நின்றதுண்டா?

கிட்டத்தட்ட டி.எம்.சௌந்தர்ராஜனின் பாடல்களோடு உறவுகொண்டவர்களுக்கு மேலேயுள்ள காட்சிகள் அநுபவங்களாகியிருக்கும்.

திரும்புகிற இடமெல்லாம் தன்னையே ப்ரதிபலிக்கிற ஒரு கண்ணாடி அறைக்குள் நின்று, வெளியேற வழிதெரியாது முட்டிக்கொள்ளும் அநுபவமும் பலருக்கு நேர்ந்திருக்கும்.

அவரின் இறுதிப் பாடலை முடிவு செய்ய முடியாது அதலபாதாளம் மட்டும் தொங்கும் ஒரு நீள்கயிறு, அவரின் இசைஅநுபவத்தின் மாயமும், மயக்கமும்.

எல்லோர் வாழ்வின் உன்னதமான, மகிழ்ச்சியான, துயர் சூழ்ந்த, மனம் சோர்ந்த, வலியால் துடித்த தருணங்களை எல்லாம், தன் குரலால் தொட்ட அந்த மாபெரும் கலைஞனின் உடலும், எல்லோருடையதையும் போல இன்னும் சிறிது நேரத்தில் தீயால் தொடப் பட்டிருக்கும். ஒரு பிடி சாம்பலாய் மாறி இருக்கும்.

ஆனால் அந்த ஒரு பிடி சாம்பல் எல்லோருடையதையும் போல அல்லாமல், என்னென்ன மாயங்களை எல்லாம் நிகழ்த்திவிட்டுப் போயிருக்கிறது?

ஆகாயத்தைப் பற்றி, ஒரு காட்டைப் பற்றி, ஒரு சமுத்திரத்தைப் பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளைப் பற்றி நீங்கள் என்ன எழுதிவிட முடியும்? அல்லது அப்படி எழுதிவிடுவதுதான் இறுதியானதாகி விடுமா?

அது குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்துக் கதை சொன்னாற் போலவும், செம்புக்குள்ளே கங்கையை அடைக்க முயல்வதும் போலத்தான். நீங்கள் உங்கள் கட்டுரையை முடித்தபின், நிச்சயம் இன்னொரு பத்துப்பாடல்களைப் பற்றிக் குறிப்பிட விட்டுப் போயிருப்பீர்கள்.

என் தாத்தா ரசித்திருக்கிறார். உங்கள் அப்பா ரசித்திருக்கிறார். நாம் திளைத்திருக்கிறோம். நம் பிள்ளைகள் பிள்ளைக்குத் தந்தை ஒருவன்பாடுகின்றன. அவனுடைய கடைசித் தம்பியின் மகன் தூங்காதே தம்பி தூங்காதேயைப் பாடுகிறான். 

இந்தக் காற்று இன்னும் எத்தனை எத்தனை பேரின் மனங்களின் அடிமணலில் சுனைநீராய் ஊறும் என்று யார் சொல்ல இருக்கிறீர்கள்? நீண்ட நாட்களாய் அவை இருந்தன. நாமெல்லாம் போன பின்னும் அவை சுற்றித்திரியும்.

இன்றைக்கு ஏனோ என் நினைவில் படரும் பாடல் மீனாக்ஷியின் மேல் பதித்த வைரம் - சஹானாவில் இழைத்த, “இன்னமும் திருவுள்ளமே இரங்காதாதான். திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

நடுவில் மனதில் ஏதோ கீறும் எண்ணம் பிசிறடிக்கிறது – ‘ஒரு புபேன் ஹஸாரிகாவுக்கோ, ஒரு பங்கஜ் மல்லிக்குக்கோ, ஒரு மன்னா தேவுக்கோ, ஒரு முகேஷுக்கோ அளிக்கப்பட்ட அங்கீகாரம் இந்தக் கலைஞனுக்கு அளிக்கப்படவில்லையேஎன. 

ஆனால் புறக்கணிப்புகளை உதிர்த்து, தங்கள் பாதையில் போய் இறுதிவரை சாதித்துக்கொண்டிருந்த கலைஞர்கள்தான், காலத்தால் தன் மடியில் சீராட்டித் தாலாட்டப்படுகிறார்கள்.   

நான் தேடித் தேடித் திரிந்து கேட்டது போலவேதான் நீங்கள் ஒவ்வொருவரும் கேட்டிருப்பீர்கள். ஒவ்வொரு பாடலுடனும் ஒவ்வொரு அனுபவம் பின்னப்பட்டிருக்கும். கேட்டுத் திளையுங்கள். அதுதான் அந்த மஹா கலைஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. 

பிரிவின் உப்பு கன்னங்களை நனைக்க, காற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அந்த சாகாவரம் பெற்ற இசை வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கட்டும். 

8 கருத்துகள்:

vasan சொன்னது…

எத்த‌னை எத்த‌னை பாட‌ல்க‌ள்!!
அத்தனையும் உம்மூச்சு.
எம‌ன‌, அத்த‌னையையும் என் செய்வான்?
நீங்க‌ள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்க‌ள் ஐயா.

G.M Balasubramaniam சொன்னது…

தமிழ்த் திரையிசைப் பாடல்கள் இருக்கும் வரை இந்தக் கலைஞனின் பெயர் நீடிக்கும். கூடவே தனிப்பாடலென்றும் பக்திப்பாடல்கள் என்றும் அவை யாவும் மனசை விட்டு நீங்காதவை. நிறை வாழ்வு வாழ்ந்தவருக்கு அவருக்கு மக்கள் மனதில் இருக்கும் மதிப்பே அங்கீகாரம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவ்வுலகம் இருக்கும் வரை அவரின் குரல் மறையாது...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பிரிவின் உப்பு கன்னங்களை நனைக்க, காற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அந்த சாகாவரம் பெற்ற இசை வாசிக்கப்பட்டுக்கொண்டிருக்கட்டும்.

ஆன்மா சாந்தியடையட்டும்..!

ரிஷபன் சொன்னது…

யாரென்று தெரியாமலே நாம் பல ஆனந்தங்களை அவர்தம் கலை மூலம் அடையப் பெறுகிறோம்..
பாடகர்களும் சரி.. எழுத்தாளர்களும் சரி.. இன்ன பிற கலைஞர்களும்..


ஒவ்வொரு பாடலுடனும் ஒவ்வொரு அனுபவம் பின்னப்பட்டிருக்கும். கேட்டுத் திளையுங்கள். அதுதான் அந்த மஹா கலைஞனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

சரியான வார்த்தை.

கீத மஞ்சரி சொன்னது…

ஒவ்வொரு பாடலிலும் ஓராயிரம் நினைவுகளின் பொதி. கட்டவிழ்த்தால் காலமெல்லாம் மணக்கும் சந்தனப்பொதி. உணர்ந்தவற்றை எழுதவியலும் வரம் உங்களுக்கு அற்புதமாய் வாய்த்திருக்கிறது.

மந்திரக் குரலோன் பற்றி என்ன சொல்ல? உள்ளம் உருகுதையா என்று பாடி கடவுள் நம்பிக்கையற்ற என் கணவரை கசிந்துருகச் செய்பவர் அல்லவா அவர்!

அப்பாதுரை சொன்னது…

உணர்ந்து எழுதியிருக்கும் அஞ்சலி ஒரு வேளை அவர் மரணம் அசல் தானோ என்று எண்ண வைத்தது.

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலை நான் கேட்டதேயில்லை. தேடிப் பார்க்கிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...