விவேக சிந்தாமணி படித்திருப்பீர்கள்.
யாரால் இயற்றப்பட்டது என்று கண்டுகொள்ள முடியாத பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. "அமரம்பேடு கிருஷ்ணசாமி முதலியார் அவர்களாற்றமது, கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடத்திற் கலர் டயிட்டில் பேஜ் மாத்திரம் பதிப்பிக்கப்பட்டது - 1914; அணா 3" என்ற முகாந்திரத்தோடு மூலமும், உரையும் இணைந்த பதிப்பு. அற்புதம் இது.
யாத்திரைக்கு அவசியமானவை எவையெவை என்று பட்டியலிட்டிருக்கும் முகம் தெரியாத அந்தக் கவிஞர் ஒரு ரசிகர்.
தண்டுல மிளகின் றூள்புளியுப்பு தாளிதம் பாத்திரமிதேஷ்டம்
தாம்புநீர் தேற்ற மூன்றுகோலாடைசக்கிமுக்கி கைராந்தல்
கண்டகங் காண்பான் பூஜைமுஸ்தீது கழல்குடையேவல் சிற்றுண்டி
கம்பளியூசி நூலடைக்கா யிலையை கரண்டகம் கண்ட மேற்றங்கி
துண்டமூறியதாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத் திருத்தித் தொகுத்து பற்பலவினு மமைத்துப்
பெண்டுகடு ணையோ டெய்து வாகனனாய் பெருநிலை நீர்நிழல்விறகு
பிரஜையர் தங்குமிடஞ் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே.
பாடலின் பட்டியலில் இடம்பெற்றவை: [அந்த 1914ம் ஆண்டின் உரையில்]
அரிசி, மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித பதார்த்த கறிவடகம், கயிறு, தண்ணீர் அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள், சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கை ராந்தல், அறிவான் கண்ணாடி, பூஜைக்குரிய சாமான்கள், பாதரட்சை, குடை, ஏவலாள், சிற்றுண்டி அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி நூல், வெற்றிலையாதி வைக்கும் பை, கரண்டகம், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டுகள், கரண்டி, நல்லெண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி, இலை முதலாகச் சொல்லப்பட்ட வகைகளெல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பலவகைகளுஞ் சேகரித்து ஸ்திரீகள் துணையோடு சரியான வாகனத்தோடு பெருத்த நிலைமையான ஜலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள் தங்கும் இடம் கண்டு சமைத்துண்டு, பிரயாணஞ் செய்தல் யாத்திரைக் கழகாகும் என்றவாறு.
இதுபோல பாரதிதாசனும், இந்தப் பாடலின் உந்துதலால் எழுதியிருக்கக் கூடிய பாடலை முன்னமேயே பகிர்ந்திருக்கிறேன் என ஓர் நினைவு. இப்போது பொருத்தமாய் இருக்கலாமென மீண்டும் இணைக்கிறேன்.
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜா தாள்பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.
காலங்கள் செல்லச் செல்ல பயணங்களுக்கான ஆயத்தங்கள் வெகுவாக மாறிவிட்டன. விவேக சிந்தாமணியின் பாடல் எழுதப்பட்டது பணமிருந்தும் எதையும் நினைத்தவுடன் வாங்க முடியாத, திட்டமிடலின் கூர்முனை வெளிப்பட்ட, திட்டமிடலை மீறிய தடங்கல்களை சாதுர்யமாகக் கடந்து அதன் பயனை ருசிக்க வைத்த காலம். இன்றைக்கு எதையும் நம்மால் பிளாஸ்டிக் அட்டையால் வாங்க முடியுமென்னும் லாவகம் வந்துவிட்டது. ஆனாலும் பயணங்களின் ருசி அதில் இல்லை. எதிர்பாராதவைகளை எதிர்பார்க்க, சமாளிக்க, பின் அசை போட்டு மகிழ எதுவும் மிஞ்சுவதில்லை.
2 கருத்துகள்:
நித்திரை இனி நிதம் இல்லை என நேரம் ஒன்று வருகையிலே
பத்திரம் என்ற சொல்லுக்கொரு பொருளில்லை எனும் போதினிலே
சத்திரங்கள் சாத்திரங்கள் முடிந்துவிட்ட காலத்திலே
யாத்திரைகள் தனியே தான் துணை இல்லை.
உணர்வோம் யாம்.
சுப்பு தாத்தா
www.subbuthatha72.blogspot.com
பயணம் செய்வதைவிட பயணத்திற்குத் தயாராவதே ஒரு பெரு மகிழ்வான நிகழ்வுதானே. அதைக் கூட ஒரு பாடலாக பாடியிருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கின்றது ஐயா. நன்றி
கருத்துரையிடுக