12.11.13

விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.

விவேகானந்தரின் கவிதைகளை வாசித்து வந்தபோது, என்னை உலுக்கியது விவேகானந்தரின் முடிவு பெறாத ஒரு கவிதை.

அவரின் சொற்களிலோ, எழுத்துக்களிலோ கண்டிராத ஒரு அதிர்ச்சியூட்டும் அவநம்பிக்கை தொனிக்கும் பாடல் . ஒருவேளை, அவர் சிகாகோவில் சமய மாநாட்டில் பேசுவதற்கு முந்தைய கட்டத்தில் அமெரிக்காவில் யார் உதவியுமற்றுத் தெருக்களில் திரிந்தபோதோ அல்லது அவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயண நிதி போதாமையால் கைவிடப்பட்ட போதோ எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கத் தோன்றுகிறது.

அந்த முடிவுறாத கவிதை:

எத்தனை எத்தனை வாழ்க்கை தோறும்
வாசலில் நான் காத்துக் கிடக்கிறேன்;
ஆனால் அவை திறக்கவில்லை;

இடைவிடாத ப்ரார்த்தனைகள் செய்துசெய்து
என் நாக்கு வறண்டு விட்டது;

ஒளிக்கிரணம் ஒன்றைத் தேடி
இருளின் ஊடே பார்த்துப்பார்த்துப்
என் கண்கள் சோர்ந்து விட்டன;

இதயம் இருளில் பயந்து தடுமாறுகிறது;
நம்பிக்கை எல்லாம் பரந்து விட்டது.

வாழ்க்கையின் கூரான உச்சிமுனையில்
நின்றுகொண்டு பள்ளத்தை நான் பார்க்கிறேன்;

அங்கே-
வாழ்க்கை, மரணம் இவற்றின்
துன்பமும், துயரமும்,
பைத்திய வெறியும், வீண் போராட்டங்களும்,
முட்டாள்த்தனங்களும் எல்லாம்
கட்டற்று உலவுகின்றன.

காண நான் நடுங்குகின்ற இந்தக் காட்சி
இருட்பள்ளத்தின் ஒருபுறம் தெரிகிறது;

சுவரின் மறுபுறமோ...........

[முடிவுறவில்லை]

######

விவேகானந்தர் இயற்றிய இன்னொரு பிரபலமான பாடல் ”சமாதி” என்ற தலைப்பில் அமைந்திருப்பது. வங்காளி மொழியில் ஜேசுதாஸ் சலீல் சௌத்ரியின் இசையில் பாடியிருக்கும் அந்தத் தருணம் அற்புதமானது.

தவிரவும் விவேகானந்தர்-ஜேசுதாஸ்-சலீல் சௌத்ரி என்ற அபூர்வமான முக்கோணத்தின் அதிசயக் கலவை இது. தாய்மொழி மலையாளம் என்பதால், வங்காளி உச்சரிப்பில் பிழை இருப்பதாய் பாரம்பர்யமாய் விவேகானந்தரின் பாடல்களைப் பாடுவோரும், கேட்போரும் குறை சொன்னபோதும், எனக்கு இந்தப் பாடல் கேட்க உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.


விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றி ஜீ.வி.ஐயர் இயக்கிய “விவேகானந்தா” திரைப்படத்தில் வந்த பாடல் இது.

ஸ்ரீமதி. சௌந்தரா கைலாசம் அவர்களின்  மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்தேன்.

சூரியன் இல்லை; சந்திரன் இல்லை;
சுடரும் ஒளியும் மறைந்ததுவே!
பாருலகத்தின் சாயலை ஒத்தவை
பரந்த வெளியில் மிதந்ததுவோ!

உள்முகமொடுங்கிய உளத்தின் வெறுமையில்
ஓடும் அகிலம் மிதக்கிறதே!
துள்ளி எழும்பிடும்; மிதக்கும்; அமிழ்வுறும்;
தொடரும் மறுபடி ’நான்’ அதனில்!

மெல்லவே மெல்லவே சாயைகள் பற்பல
மீண்டன மூலக் கருப்பையுளே!
‘உள்ளேன் நான்! உள்ளேன் நான்!’ எனும் நீரோட்டமே
ஓடியதே தொரு முடிவின்றி!

ஒழுகலும் நின்றிட வெறுமையுள் வெறுமையாய்
உலகம் அடங்கிக் கலந்ததுவே!
மொழிவதும் இல்லை; நினைப்பதும் இல்லை;
முற்றும் உணர்பவனே உணர்பவன்.

#####

8 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அவரின் சொற்களிலோ, எழுத்துக்களிலோ கண்டிராத ஒரு அதிர்ச்சியூட்டும் அவநம்பிக்கை தொனிக்கும் பாடல் . ஒருவேளை, அவர் சிகாகோவில் சமய மாநாட்டில் பேசுவதற்கு முந்தைய கட்டத்தில் அமெரிக்காவில் யார் உதவியுமற்றுத் தெருக்களில் திரிந்தபோதோ அல்லது அவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயண நிதி போதாமையால் கைவிடப்பட்ட போதோ எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கத் தோன்றுகிறது.//

முடிவுறாக் கவிதையைப் படித்ததும், தங்கள் யூகம் சரியே எனத் தோன்றுகிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எனக்கும் தங்களின் யூகம் சரியென்றே தோன்றுகிறது

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முடிவுறா கவிதையின் கரு சிந்திக்கவைக்கிறது..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை.

G.M Balasubramaniam சொன்னது…


பல அரிய சேதிகளைத் தேடிப் பிடித்து பதிவிடுவது இப்போது சுந்தர்ஜியின் பாணியாகி விட்டது. வாழ்த்துக்கள்.

vasan சொன்னது…

உலகையே மாற்ற துணிந்த அந்த மாமனிதனின் மற்றொரு தரிசனம். இருண்டு அடிமைபட்டுகிடக்கும் அடிமைகளின் கண்கள் வழியே பார்த்த பார்வையாய் இருக்கலாம். கனவில் இருந்து பட்டென விழித்து முற்றுபெறாத எச்சமாய் கசப்பை சுவைத்தபடி வேப்பிலை இடித்த உரலாய். (பாரதியின் உருவில் நரேந்திரனாய் )

sury siva சொன்னது…

முடிவுறாக் கவிதை என்று நீங்கள் எழுதியிருப்பது

பற்றி நான் எனது வங்காள மொழி நண்பர்களிடம் கேட்டு இருக்கிறேன்.

உண்மையில் இது அவ்வளவு தான்.

ஆன்மா வுக்கு முடிவு என்பது இல்லை.

அது தொடர்ந்து இருந்து கொண்டே தான் உள்ளது.

அதை உணர்த்துவதுதான் இக்கவிதை.

ஒவ்வொரு பிறவியிலும் நாம் ஒவ்வொரு தாயின் வயிற்றிலும் பிறந்து ஒவ்வொரு வீட்டிலும் வசித்து ஒவ்வொரு தான்யங்களையும் உண்டு,......

இதற்கெல்லாம் முடிவு எங்கே ?

அடுத்து அந்த பாடல்.

இந்த சங்கர் ச வுக்கும் விஷம் ஷ வுக்கும் அதாவது between s and sh இடையே அந்த மொழியின் ஷ அல்லது ச (சங்கர் ச ) இருக்கிறது.

பிரணாப் முகர்ஜி கூட நேஷன் என்று நாம் சொல்வதை எப்படி உச்சரிக்கிறார் என்று கவனியுங்கள்.

அது இருக்கட்டும்.

ஒரு கவிதையின் உயிர் அதன் உச்சரிப்பில் தான் உள்ளதா என்ன ?

அது பரப்பிடும் நல் உணர்வுகளில் தானே ?

சுப்பு தாத்தா.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி. இதெல்லாம் பாமரனாகிய நான் எப்படி அறிவேன் தங்களின் முயற்சியின்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...