பெரும்பான்மையோர் எண்ணிக் கொண்டிருப்பது போல மநு ஸ்ம்ருதி என்பது கலியுகத்துக்கான சட்டமன்று. முக்கியமான 18 ஸ்ம்ருதிகளில் அது முக்கியமானது. கிருத யுகத்தைச் சார்ந்தது.
யாக்ஞவல்கியரின் ஸ்ம்ருதி த்ரேதா யுகத்துக்கும், சங்கர் மற்றும் லிகிதர் ஆகியோர் இயற்றிய சட்டங்கள் த்வாபர யுகத்துக்குமானவை.
கலியுகத்திற்கு உருவாக்கப்பட்டது பராசர ஸ்ம்ருதி. அது இயற்றப்பட்டு 5114 வருடங்களுக்கும் மேலாகின்றது. காலத்தின் மாற்றத்தினால் அது என்றோ காலாவதியாகி விட்டது. சட்டங்கள் பின்பற்றப்படாத போது எரிக்க வேண்டிய சிரமத்தை யாருக்கும் கொடுக்காமல் காலமே அதை எரித்து விடுகிறது.
இன்றைய மனிதனுக்கான ஸ்ம்ருதி நாளை வர இருக்கும் ஒரு யோகியால் உருவாக்கப்படும். அதுவும் ஒருநாள் காலாவதியாகும்.
#####
நீங்கள் தேடுவது எல்லாம் உபநிடதங்களில் மட்டுமே கிடைக்கும். தவிரவும் அத்வைத சிந்தனையின் வேரே உபநிடதங்களில் இருந்துதான் கிளைக்கின்றன.அங்கு வர்ணங்கள் கிடையாது. மதம் கிடையாது. இனம் கிடையாது. அதன் போதனையில் நாம் இப்போது
வழிபட்டுக்கொண்டிருக்கும் கடவுளே கிடையாது. கம்யூனிசத்தில் இருந்து மேஜிகல் ரியலிஸம் வரை எல்லாம் அதிலிருந்து வந்தவைதான். எல்லாம் ஒன்றே. உபநிடதங்களை உணர்ந்து கொண்டு விட்டால் மெய்யறிவுக்கு வேறு எதுவும் தேவையில்லை.
#####
கீழே இருக்கும் என் இரண்டு கவிதைகளையும் கூகுளிடம் கொடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். நன்றாக வந்தால் ருஷ்யனிலும், செக்கிலும் மொழிபெயர்க்க ஆசை.
நான்:
======
அவளோடு வாழ முடியாது
போயிற்று.
இவளோடு விலகமுடியாது
போயிற்று.
எளிதில்லை
வாழ்வதும் பிரிவதும்.
கூகுள்:
=======
She can not live with
Broke.
With her vilakamutiyatu
Broke.
Easy
And separating lives.
மறுபடியும் அசராமல் நான்:
========================
பெருங்கடலாய்
விரிந்து கிடக்கிறது
வெற்றுத்தாளின் ஆழ்பரப்பு.
மொழியால் கடக்கிறேன் நான்.
பேரமைதியால் கடக்கிறது சிற்றெறும்பு.
கூகுள்:
======
Ocean
Whereas expands
Alparappu of plain paper.
I was passing by the language.
Cirrerumpu passed to the silence.
ஓடி வந்துவிட்டேன் தலை சுற்றி.
#########
நவீனம் என்பது எழுதும் காலத்தால் அல்ல. நிலைக்கும் காலத்தால், உட்பொருளால் தீர்மானமாவது. நவீனத்தின் மொழியோ கைக்கெட்டாத தொலைவு அதன் சிறகடித்துப் பறக்கிறது.
இன்றைக்கும் வாசிக்குபோது கிளர்ச்சியூட்டும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் தொடங்கி, அளவில் சிறிய திருக்குறள், சிலப்பதிகாரம் வழியே உட்புகுந்து, கடைசியாய் பாரதியுடன் அது முடிகிறது.
பாரதிக்குப் பின் நவீனமான எழுத்து எது? என்பதை முடிவு செய்யக் காலத்தின் எடைக்கற்கள் போதுமானதாக இல்லை. அதைக் காலம் உருவாக்கிகொள்ளும்.
தீவிரமான நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், யானைகள் உலவும் காட்டில் நாமும் உலவுகிறோம் என்ற வகையில் அதே காட்டின் வன விலங்குகள்தான்.
######
பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே
வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில்
பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில்
எல்லாரும் செய்வினையாலே.
தனிப்பாடல் திரட்டில் அமைந்துள்ள இந்த வெண்பா சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயரால் பாடப்பட்டது. இந்தப் பாடல் அவரின் சமகாலக் கவிஞரான முத்துராமலிங்க சேதுபதியின் கேள்விக்குப் பதிலாக அமைந்த பாடலாகக் கருதப்படுகிறது.
பாடலின் பொருள்:
உலகத்தில் இன்ப, துன்பங்களைப் படரும்படி பிரமன் விதித்திருக்கிறானே? இதன் காரணமென்ன சொல் கவிஞரில் சிறந்தவனே?
ஏராளமான மாடுகள் உள்ள தொழுவில் கன்று அதன் தாயைச் சரியாய் இனங்கண்டு அடைவது போல அவரவர் செய்த நல்வினை, தீவினைகள் அவரவரை பிரமன் விதித்த விதி தீண்டுகிறது.
கன்று நூற்றுக்கணக்கான பசுக்களில் தன் தாயை அடைதல் போல வினைகள் மனிதர்களை அடைகின்றன என்று உவமித்த கவிஞருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்தானே?
#########
துயரத்தின் ஆழத்தில் சுவாசிக்கத் திணறித் தவிக்கும் நாட்களில் மனமுருகிக் கடவுளின் முன்னே மண்டியிட்டுப் ப்ரார்த்திக்கும் மொழி எது?
உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இயலாத யாருமற்ற நாட்களில் உங்கள் மனதோடு நீங்கள் பேசிக்கொள்ளும் மொழி எது?
எதிர்பாராது ஒரு விபத்தில் சிக்கி, வலியால் துடிக்கும்போது உங்கள் உதடுகள் உச்சரிக்கும் மொழி எது?
அதுதான் உங்கள் தாய்மொழியாய் இருக்கும்.
நாம் பேசும் பிழையான செத்த தமிழையும், அதை விடப் பிழையான ஓட்டை உடைசல் ஆங்கிலத்தையும் பார்த்து, இரு மொழியையும் நன்கு பாவிப்பவர்கள் ஏளனமாக மனதுக்குள் சிரிக்கிறார்கள்.
நமது அரசுகளின் ஆட்டுமந்தைக் கல்வியினால் பெரும்பான்மையானவர்கள் இந்தத் தகுதி பெற்றிருப்பதால், ருசித்துச் சுவைத்து தன் தாய்மொழியைப் பாவிப்பவர்கள் கோமாளிகளாகக் கோமாளிகளால் கருதப்படுகிறார்கள்.
பொருளையும், இன்பத்தையும் அநுபவிக்கத் தன் மொழியை விட்டுக் கொடுப்பவனும், அவமதிப்பவனும் கயவனுக்கு ஒப்பானவன். அவனுக்கு அறம் பற்றியும், வீடுபேறு பற்றியும் அறியும் பாக்கியம் நேராது.
#########
2013-14ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டின் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி.
போன வருடம் இந்தியாவில் சுமார் 10 லட்சம் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. தோராயமாக 5 லட்சம் ஒரு காரின் விலையாகக் கொண்டால் மொத்த விற்பனை 50 ஆயிரம் கோடி. [http://www.knowindia.net/
காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்புவது தவிர பார்க்கிங்கிலேயே நிற்பது இதில் பாதி.
நம் நாட்டில் உற்பத்தி செய்து, இங்கேயே விற்று, எலும்புத்துண்டுகளை வீசி விட்டு, லாபத்தை அள்ளிச் செல்கின்றன உலகின் அத்தனை வாகன உற்பத்தி நிறுவனங்களும்.
யாருக்கு அக்கறை இருக்கிறது இந்த தேசத்தின் எதிர்காலத்தின் மீது?
இது போல கோக், பெப்ஸி தொடங்கி ஒவ்வொரு துறையின் வியாபாரத்தையும் கணக்கெடுத்தால் தலைசுற்றும்.
நாம் மும்முரமாகப் படித்து முடித்து மேற்குப் பக்கமாகக் குடியேறி, ’எங்கு பார்த்தாலும் வறுமை, நாற்றம். இந்தியாவைப் போல மோசமான நாடு எதுவுமில்லை ’ என்று சொல்லும் அணியுடனோ,
அல்லது மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஒழிக்க முயலாமல் ‘2020ல் வல்லரசாகி உலகையே நம் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்’ என்று கதறும் அணியிலோ சேர்ந்து கொண்டு விடலாம்.
நடுவில் சத்தமில்லாமல் நாட்டை நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமாக அதற்குள் விற்றுத் தீர்த்திருப்பார்கள். இந்தியாவின் நீர் ஆதாரத்தைக் கொள்ளையடித்த பெப்ஸியின் இந்த்ரா நூயி போன்றவர்கள் பெரிய சாதனையாளர்களாய் கருதப்படுவார்கள்.[http://en.wikipedia.org/wiki/
சிதம்பரமும், அஹுலுவாலியாவைக் காட்டிலும், மாதம் பத்தாயிரம் சம்பாதித்து யாரிடமும் கடன் வாங்காமல் புன்னகையுடன் வாழ்க்கையை தினமும் எதிர்கொள்கிறானே பாமரன், அவனிடம் நம்பிக்கையாய் இந்த நாட்டை ஒப்படைக்கலாம்.
##########
குழந்தைகள் பொய்யில் மெய் தேடுகின்றன. நாம் மெய்யில் பொய் தேடுகின்றோம். அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் நடிக்கிறோம். அதுதான் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி.
###########
தனக்கும் பிறருக்குமான
இடைவெளியைத்
தீர்மானிப்பவனாக இருக்கிறான் மனிதன்.
தனக்கும் பிறருக்குமான
நெருக்கத்தைத் தீர்மானிப்பவைகளாக
இருக்கின்றன விலங்குகள்.
மனிதன் மனதில்
மறைந்திருக்கும் மிருகம்
எப்போதுமே கூர்மையான
நகங்களுடனும், பற்களுடனும்
விழிப்போடு காத்திருக்கிறது.
மிருகத்தின் நினைவில்
வாழும் மனிதம்
கருணை கசியும்
அதன் கண்களில்
வாலசைவில்,
ஒரு தொடுதலுக்காகத்
தயங்கி நிற்கிறது
தவிப்போடு எப்போதும்.
###########
அன்பு மிக எளியது - ஒரு பைசா போல. அது பெருகப் பெருகச் செலாவணியாகும். சிறுகச் சிறுகச் செலாவணியாகாது மதிப்பிழக்கும்.
5 கருத்துகள்:
குழந்தைகள் பொய்யில் மெய் தேடுகின்றன. நாம் மெய்யில் பொய் தேடுகின்றோம். அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் நடிக்கிறோம். அதுதான் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி.
very informative,,!
குழந்தைகள் பற்றிய கருத்து அருமை.
எல்லாமே நன்று.
கூகிள் ரசிக்க வைத்தது.
//தீவிரமான நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், யானைகள் உலவும் காட்டில் நாமும் உலவுகிறோம் என்ற வகையில் அதே காட்டின் வன விலங்குகள்தான்.//
அருமை, ரஸித்தேன்.
அருமைஐயா நன்றி
/பொருளையும், இன்பத்தையும் அநுபவிக்கத் தன் மொழியை விட்டுக் கொடுப்பவனும், அவமதிப்பவனும் கயவனுக்கு ஒப்பானவன். அவனுக்கு அறம் பற்றியும், வீடுபேறு பற்றியும் அறியும் பாக்கியம் நேராது./
'அறம்' பாடி இருக்கிறீகள் சுந்தர்ஜி.
அரசியலையும், சுரண்டலையும் வாழ்க்கை நெறியையும், விலங்கையும் மனிதத்தையும்
எப்படி குறுகத்தறித்து முழுமையாய் போர்த்திவிடுகிறீர்கள்?
கருத்துரையிடுக