வனவாசத்தின் நடுவே தனக்கு உண்டான தாகத்தைத் தணிக்க சரயு நதியின் கரையில் மண்ணில் வில்லைக் கிடத்திவிட்டு அருகில் அம்பைக் குத்தி வைத்துவிட்டு ராமன் நீர் பருக ஆற்றில் இறங்கினான்.
தன் தாகமெல்லாம் தணிந்து மறுபடியும் கரையில் விட்டுச் சென்ற அம்பையும் வில்லையும் மீட்கக் குனிந்தபோது கண்ட காட்சி அவன் மனதைக் கரைத்தது.
கால்களை உடைத்தபடியே தன் உயிரின் கடைசிச் சொட்டை குருதியுடன் சிந்தியபடி அம்பு தைத்திருக்க ஒரு தேரையைக் கண்டான் ராமன்.
சீதையைத் தேடிக் காட்டில் அலைந்து கொண்டிருந்தவனின் மனநிலையை யாரால் யூகிக்க முடியும்? யார் தன் வாழ்நாளின் இறுதிவரை துணையென நம்பினானோ அவளே இல்லாது பகிர யாருமற்று இரவும் பகலும் அவனை வதைப்பதை அவன் மட்டுமே அறிவான்.
அந்த மனநிலையில் அந்தத் தேரையின் உயிர்வதை ராமனை எப்படி வதைத்திருக்கும்?
அம்பு தைக்க நேரும்போது ஒரு குரல் கொடுத்திருந்தால் போதுமே? என்னையுமறியாமல் இந்த உயிர்வதை நேர்ந்திருக்காதே? என்ன செய்வேன்? எது உன்னைக் குரலெழுப்ப விடாது தடுத்ததோ புரியவில்லையே? என்று தேரையிடம் மனம் கசிந்து வருந்தினான் ராமன்.
யார் என்னைத் துன்புறுத்தினாலும் உன் பெயரை நானழைப்பேன் ராமா! நீயே என்னைத் துன்புறுத்தும் போது யார் பெயரால் அழைப்பேன் ராமா?
உலகமே என்னை தண்டிக்கும்போதும் தாமரைக்கொப்பான உன் திருவடிகளில் சரணடைவேன். தண்டனையே உன்னால் எனும் போது வேறு யாருண்டு என் வசம்?
கடவுள் என்னோடு இருக்க யாரென்னை வதைக்க?
கடவுளே என்னை வதைக்க யாரென்னைக் காக்க? என்றது தேரை.
வேறேதும்
வழியின்றி
உயிர் துறந்தது
தேரை.
வேறேதும்
வழியின்றி
உயிர் சுமந்தான்
ராமன்.
10 கருத்துகள்:
கடவுள் என்னோடு இருக்க யாரென்னை வதைக்க?
கடவுளே என்னை வதைக்க யாரென்னைக் காக்க? என்றது தேரை.
வேறேதும்
வழியின்றி
உயிர் துறந்தது
தேரை.
வேறேதும்
வழியின்றி
உயிர் சுமந்தான்
ராமன்.
இதிகாசங்கள் தானே அப்போதைய ஜென் நமக்கு!
தெரிந்தோ தெரியாமலோ தேரைக்கு ஸ்ரீ இராமனால் மோட்சம்.
தேரை சொன்னது நல்லதொரு செய்தி.
அடி தாங்கும் உள்ளம் இது ,,,,
இடி தாங்குமா என்ற சிவாஜி
படப்பாடல் ஞாபகத்துக்கு வந்தது.
நல்ல பதிவு.
நல்ல கதை ...
திக்கற்றவருக்கும் துணை இருக்கும் தெய்வமே கைவிட்டால் ?
காரணமில்லாமல் தண்டிக்கப்படும் நேரங்களில் அதை அந்த ஆண்டவனே அறியாமல் செய்கிறான் என்று தேற்றிக் கொள்ளவேண்டியதுதான் போலும்.
பாறையை
பெண்ணாகிய ராமன்
தாரையையும்
தேரையையும்
அழவிட்டதன் பின்னணி என்ன
பாரையும்
ஆளும் பலம் கொண்ட ராமன்
இப்படி தன்மேல்
சேறை
பூசிக்கொண்டதன் நியாயம் என்ன
இதிகாசங்கள் தானே அப்போதைய ஜென் நமக்கு!
சரியாகச் சொன்னீர்கள் நிலாமகள்.
நம்மைக் காப்பவனும் அவனே . சில சமயம் வதைப்பவனும் அவனே.
கம்பஇராமாயணம் நடத்திய நினைவு வருகிறது. அடிக்கடி இந்தக் கதையை மாணவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். அவசியம் அனைவரும் அறியவேண்டிய கதைகள் நிறைய இருக்கினற்ன இராமாயணத்தில்.அருமை சுந்தர்ஜி.
உயிர் துறந்ததையும் , உயிர் சுமந்ததையும் அழகாக இரண்டுமே ஒரே வலி என்பது போல் சொல்லியிருக்கிறீர்கள். வெகு அற்புதம்.
அவதார புருஷன்,
எட்டில், தேரையை அம்பால் குத்தி உயிர் உண்டவன்,
ஒன்பதில், தேரைத் தாழ்த்தி கர்ணன் அம்பிலிருந்து
மைத்துணனின் உயிர் காக்கிறான் .
அவன் செய்வது பெரியவர்கள் செய்வது போல!
கருத்துரையிடுக