ஹகுய்ன்.
இதுதான் அந்த ஸென் துறவியின் பெயர். அக்கம்பக்கத்திலெல்லாம் அவருடைய தூய்மையான வாழ்க்கைக்கு நற்பெயர் பெற்று வாழ்ந்துவந்தார்.
அவருடைய மடாலயத்துக்குப் பக்கத்தில் ஒரு உணவு விடுதி வைத்து நடத்தி வந்த பெற்றோருக்கு மிக அழகான ஒரு ஜப்பானியப் பெண் இருந்தாள்.
திடீரென ஒருநாள் அவர்கள் வீட்டில் ஒரே கூச்சல். அந்த இளம் பெண் கர்ப்பமுற்றிருந்த விவரம் அவள் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது.
கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று பலவந்தமாய்ப் பலமுறை கேட்டும் வாயைத் திறக்க மறுத்துவிட்டாள் அந்தப் பெண். மிக நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் அவள் அந்தத் துறவி ஹகுய்னின் பேரைச் சொன்னாள்.
படு பயங்கரக் கோபத்துடன் நேரே அந்தத் துறவியிடம் போனார்கள். நடந்ததைச் சொல்லி அவர் மேல் பழி சுமத்தினார்கள். எல்லாவற்றையும் பொறுமையுடனும் புன்சிரிப்புடனும் கேட்ட அந்தத் துறவி “அப்படியா நடந்தது?” என்று மட்டுமே சொன்னார்.
பேறுகாலம் முடிந்து குழந்தையும் பிறந்தது. குழந்தையை எடுத்துக் கொண்டுவந்து ஹகுய்னிடம் ஒப்படைத்தார்கள். துறவியின் இந்தச் செய்கையைக் கேள்விப்பட்டதிலிருந்தே மக்களின் மரியாதையை இழந்து யாரின் கவனிப்பும் இன்றி தன் போக்கில் எப்போதும் போல் வாழ்ந்து வந்தார் சிறிதும் சலனமின்றி.
குழந்தைக்குக் காட்ட வேண்டிய எல்லா அக்கறையையும் கவனமாய்ப் பின்பற்றினார் அந்தத் துறவி.அந்தக் குழந்தைக்குப் பால் புகட்டுவதில் தொடங்கித் தாலாட்டி உறங்க வைப்பது வரைக்கும்-மூத்திரத் துணிகளை மாற்றி மலசுத்தி செய்வது வரைக்கும் இரவிலும் பகலிலும் ஒரு தாயுமானவனாகத் தன்னை மாற்றிக்கொண்டார் அந்தத் துறவி.
ஒரு ஆண்டு உதிர்ந்திருந்தது. அந்தக் குழந்தையின் தாயால் அதற்கு மேலும் தன் மனதோடு போராட முடியாது போகவே தன் பெற்றோர்களிடம் அந்தக் குழந்தையின் உண்மையான தகப்பன் மீன் அங்காடியில் வேலை செய்யும் ஒரு இளைஞனே என்ற உண்மையைச் சொல்லி ஏதும் அறியா அந்தத் துறவியைப் பழித்ததற்காக அழுதாள்.
அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் என்ன ஏது என்று விசாரிக்காமல் தாங்கள் செய்த தவறு எத்தனை மன வருத்தத்தையும் அவப்பெயரையும் அவருக்குத் தந்திருக்கும் என்று அந்தத் துறவியின் முன்னால் நின்று நெடுநேரம் தங்கள் தவறை எடுத்துரைத்துத் தங்களை மன்னித்தேயாக வேண்டும் என்றும் அந்தக் குழந்தையைத் தாங்களே எடுத்துச் செல்வதாகவும் மன்றாடினார்கள்.
இத்தனையையும் அதே பொறுமையுடனும் புன்னகையுடனும் கேட்டபடியிருந்த அந்தத் துறவி,” அப்படியா நடந்தது?” என்று கேட்டபடியே உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மென்மையாய்த் தூக்கி வந்து அவர்களிடம் ஒப்படைத்தார்.
முழு நிலவு
மேகத்தின்
மோகத்தால்
மறைந்துவிட
கண்கள்
காத்திருக்கும்
களியூட்டும்
நிலவுக்காய்.
மேகம் நழுவும்
அவிழும்
மறைத்த
தன் செயல்
வெட்கி.
மீண்ட நிலவு
பால் பொழியும்
என்றென்றும்
சலனமின்றி.
12 கருத்துகள்:
அற்புதமான கருத்தை உள்ளடக்கிய கதை
எனக்கு அவர் குற்றத்தை ஏற்று கொண்ட போதோ
அந்த குழந்தையை வளர்த்த போதோ
எனக்கு துறவியாய் தெரியவில்லை
அந்த குழந்தையை மென்மையாய் தூக்கி
கொடுத்தபோதுதான்
துறவியாய்
தூய்மையாய்
துணிவாய்
தெரிந்தார்
இதை மிக சமீபத்தில் படித்தேன் யாருடைய தளம் என்று மறந்து விட்டேன். கீழே உங்கள் வரிகளும் அருமை
தாமரை இலை நீர் என்ற தலைப்பிற்கு இதைவிட அருமையான கதையை அளித்திருக்க முடியுமா என்பது சந்தேகமே..
நல்ல கதை எழுதியிருக்கும் விதமும் அருமை
ஆனாலும் அதை தொடர்ந்து வருகிற கவிதைதான்
அதிக தாக்கத்தை ஏற்படுத்திப்போகிறது
கவிதையின் சிறப்பே அதுதான்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இத்தனை பொறுமை...முடியுமா?மனதில் குற்றம் இல்லாவிட்டால் முடியுமோ !
எல்.கே.க்காக இது.
வாசிப்பிற்கு நன்றி எல்.கே.
இது பால் ரெப்ஸ் தொகுத்த ஆங்கில நூலிலிருந்து.(ZEN FLESH.ZEN BONES).
மொத்தம் 101 ஸென் கதைகள் இதிலுண்டு.
நம் சூழலுக்குப் பொருந்தும் அல்லது புரியும் கதைகளை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கிறேன்.
”தாமரை இலை நீர்” என்ற தலைப்பு மிகவும் அருமை. ஒட்டவே ஒட்டாது. எதற்குமே சலனம் அடையாத கதையில் வரும் துறவி போலவே. ஏற்கனவே கேள்விப்பட்ட கதையே என்றாலும், தாங்கள் கூறும்போது அதில் ஏறும் எடையும் சுவையும் போக்கும் நன்கு புரிபடுகிறது. எல்லாவற்றையும் விட அந்தக்கடைசியில் கொடுத்திருக்கும் கவிதை ஆஹா என்னப்பொருத்தம் ... நமக்குள் இந்தப்பொருத்தம் ... என்ற எம்.ஜி.ஆர். படப்பாடல் போல சூப்பர் சார்.
//மீண்ட நிலவு
பால் பொழியும்
என்றென்றும்
சலனமின்றி. //
பொழிந்த பாலில் நனைந்துள்ளேன் நானும். பாராட்டுக்கள். அன்புடன் vgk
யார் என்ன சொன்னாலும், நினைத்தாலும் நம் வழி சரியென்றால் அதிலேயே தொடர்வது..
சபாஷ்.. சரியான கருத்து!
நாலு நாள் வர மறந்துவிட்டேன். எவ்வளவு நல்ல கதைகள்! மறுபடி தினமும் வருவேன்!
/நம் சூழலுக்குப் பொருந்தும் அல்லது புரியும் கதைகளை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கிறேன்.//
நன்றி சார்
பக்குவம் வர என்ன செய்ய வேண்டும்?
கடைசியில் உங்க டச்ல ஒரு கவிதை...அற்புதம்...
ஞானிகள் இதுபோல நடந்துகொள்வார்கள். அஞ்ஞானிகள் இந்த சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஏதாவது ஜென் கதை இருக்கிறதா ஜி?
வழக்கம் போல தலைப்பு படம் கண்களை ஈர்க்கிறது. நன்றி. ;-))
கருத்துரையிடுக