4.5.11

நெல்லூர் கோமளவிலாஸ்


இப்பத்தான் மாதிரி இருக்கு.

அது 1990 .யாருக்காவது தண்டனை கொடுக்கணும்னா மெட்ராஸிலிருந்து(சென்னை கிடையாது) நெல்லூருக்கு பஸ்ல ரெண்டு தடவ போயிட்டு வரச் சொன்னா திருப்பியும் அந்தத் தப்பைப் பண்ணமாட்டாங்க. KVR பஸ் செர்வீஸ்னு ப்ளூ கலர்ல பேஸின் ப்ரிட்ஜ்லருந்து ரெண்டு பஸ் அகால வேளைல கிளம்பி ஆடி ஆடி 5 மணி நேரத்துல 130 கி.மி.யைத் தாண்டி இறக்கி விடுவாங்க.

போகும் வழியிலேயே தமிழ்க் கடலை தெலுகு சணக்காயலுவாகி சந்தேகத்தை ஏற்படுத்தி கடலை போடவிடாமல் தடுத்து விடும். வழியெங்கும் வாழைப்பழம்-முறுக்கு-சுண்டல்-எப்படிச் செய்திருப்பார்கள் என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் பெரிய ஓட்டை அதிரசம் போன்ற வயிற்றுக்கு குறி வச்சு சேதாரம் உண்டு பண்ணும் பட்சண-பழ வகைகள் தலைக்கு எண்ணை வைத்துக்குளிக்காமல் வியாபாரத்துக்கு வரும் பெருமக்களால் விற்கப்படும். எந்த ஊரில் பஸ் நின்றாலும் உள்ளே ஏறும் பயணிகள்- பெண்களும்- முன் பின் சக்கரத்தின் வழியே உள்ளே தாவி லாவகமாக இருக்கைகளை அடையும் காட்சி இன்னும் நினைவிலிருக்கிறது.

வழியில் நிறுத்தும் சாயாக் கடைகளில் பலஹீனமாக தெலுகில் சினிமா சங்கீதத்தை ரேடியோ முனக என்.டி.ஆரும்-ஸ்ரீதேவியும் விப்ஜியாரில் படு க்ளோஸப்பில் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருக்கும் போஸ்டரின் கீழே பென்ச்சில் அமர்ந்து சூடான அந்த டீயை கவனமாகக் குடிக்காவிட்டால் மேலேயே துப்பி விடுவார்கள்.

தடா-நாயுடுபேட்டா-சூலூருபேட்டா-வழியாக ஒரு வழியாக நெல்லூரு வந்து சேரும். வரிசையாகக் குதிரை வண்டிகள்-ரிக்‌ஷாக்கள் எங்கே எங்கே என்று கேட்க விபரம் தெரிந்தவர்கள் கோமள விலாஸ் என்றும் தெரியாதவர்கள் ஒரு செருப்பைத் தொலைத்தவனின் முகபாவத்துடனும் பஸ் ஸ்டாண்டை விட்டுக் கிளம்புவார்கள்.

ட்ரங்க் ரோடில் அந்தப் பிரபல கோமள விலாஸ். போர்டிங்-லாட்ஜிங் ரெண்டும் உண்டு.ஹோட்டலுக்கு மேலே லாட்ஜிங்.லாட்ஜிங் அமைப்பு அந்தக் கால சினிமாக்களை ஞாபகப்படுத்தும் திண்ணை அமைப்புடைய இரும்புக்கட்டில்கள்-மண் கூஜா-அறையின் தங்கும் விதிகள் கொண்ட ஒரு ப்ரேம்-ரெண்டு ஜன்னல்கள்-

மரியாதையில்லாமல் கூப்பிடுவதைப் பொருட்படுத்தாது சிரித்தபடி சேவகம் செய்யும் ரூம் பையன்கள்-ரெண்டு ரூபாய் கொடுத்தால் துணிமணிகளையும் துவைத்துப் போட்டு சாயங்காலம் மடித்துகொடுத்து விடுவான்கள்-தடதடவென த்ண்ணீர் கொட்டும் காமன் பாத்ரூம்கள்-சிலதில் கொக்கி இருக்காது.பாட்டுதான் கொக்கி. ஒரு குளியல் போட்டு ரெடியாகும் போது ஊரையே தூக்கும் சமையல் மணம் நம்மையும் தூக்கும்.

அது கோமள விலாஸின் காலைச் சாப்பாட்டின் மணம். தரை தவிர மாடியும் உண்டு.வாசலில் மாட்டு வண்டியில் உமி வந்து இறங்கும் ஒவ்வொரு வேளையும்.ஒரு நாளைக்கு ரெண்டு நேரமும் சாப்பாடுதான்.சிற்றுண்டி கிடையாது.சமையல் உமியும் விறகும் கொண்டுதான்.சமையல் வாயு வராத நேரம்.

தரையிலும் பெரிய பித்தளை அண்டா பதித்திருப்பார்கள்.சாதத்தை அதிலிருந்தே எடுத்துப் பரிமாறுவார்கள். கூட்டம் அலை மோதும். சாப்பாடு பத்தோ பன்னிரண்டு ரூபாயோ. பாலக்காட்டைச் சேர்ந்தவர்களால் 1936ல் துவக்கப்பட்டு இன்றும் பின் தலைமுறைகளால் கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களோடு தொடர்கிறது இவர்கள் பயணம்.

ஒரு நீள இலையைப் பொதுவாக நுனியை இடப்பக்கமாகப் போட்டுத்தான் சாப்பிடுவோம். அங்கேதான் செங்குத்தாக நுனி மேலும் அடி கீழுமாக இலையைப் போட்டு சாப்பிடுபவர்களைப் பார்த்தேன். முதலில் கூட்டு-கறி-ஒரு துகையல் பரிமாறப்பட்டு ஆவி பறக்கும் சாதம் அந்த ஊர் தண்ணீரின் சுவையுடன் பொலபொலவென்று இலையில் வஞ்சனையில்லாமல் கொட்டுவார்கள்.அதன் பின் பருப்புப்பொடி-கொங்குரா சட்னி-வற்றல் குழம்பு-மஜ்ஜிக புள்ஸு(மோர்க்குழம்பு) இதயெல்லாம் தாண்டி புள்ஸுக்கு (சாம்பாருக்கு) வருவதற்குள் வயிறு நிரம்பி விடுகிறது இப்போது. சாம்பார்-ரசம்-கவிழ்த்தவுடன் விழாது அடம் பிடிக்கும் எருமைத்தயிர்-மஜ்ஜிக (மோர்)அப்பளம்-பாயசம்-ஊறுகாய் என்று மெனு அத்தனையும் சாப்பிட்டு முடித்தபின் எதுவும் செய்யத்தோன்றாது.

மற்ற ஹோட்டல்களிலெல்லாம் இன்னும் அதிக அயிட்டங்கள் இருந்தாலும் பரிமாறுபவர்களின் மனது இதுபோலன்றி மாறிவிட்டது. எல்லாவற்றிலும் லாபத்தின் நிழல் விழுந்து இயல்பான உபசரணை குறைந்து விட்டது.

அவர்களின் பிஞ்சுக் கத்தரிக்காயுடன் சின்ன வெங்காயம் இணைந்த புளிக்கூட்டு மிகப் பிரசித்தம். பருப்பு உருண்டையிட்ட மோர்க்குழம்பும்-அலாதி வாசனையுடன் மணக்கும் சாம்பாரும்-ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துகையல்களும் இன்றும் என் மனதின் சுவை நரம்புகளில் தங்கியிருக்கிறது. எதிர்க் கடையில் ஒரு ஸெட் வெற்றிலை பாக்கு போட்டுக் கடித்தபின் கிடைக்கும் லாகிரிக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும் என்னால்?

சாம்பார் காலியான பின்னும்-ரசம் காலியாகிப்போன பின்னும்-என்ன இருக்கிறதோ அதைப்போடுங்கள் என்று சொல்லி சாப்பிட்டுப் போகும் காட்சியையும் நான் வேறெங்கும் பார்த்ததில்லை.

சாப்பாட்டுப் பிரியர்களிடமெல்லாம் எப்போதும் நான் பரிந்துரைக்கும் முதல் இடம் நெல்லூர் கோமள விலாஸ். அதற்கு ஈடாக இத்தனை நாளில் நான் எங்கும் சாப்பிட்டதில்லை. சாப்பிடுவதற்கு மட்டுமே ஒருமுறை என் குடும்பத்துடனும் மற்றொரு முறை என் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு போன அனுபவங்களும் உண்டு.

திருவிழா மாதிரி ஊரெங்கும் சினிமா த்யேட்டர்கள்-விதவிதமான கோயில்கள்-சத்தமான ஸ்பீக்கர்களோடு சந்தை-அதீத ஒப்பனையுடன் பெண்கள்-ஆளரவமற்ற கடற்கரை-தெருவெங்கும் சாத்துக்குடிச் சாறு பிழியும் மிஷின்கள்-ஒரு ஓரமாய்க் கழைக்கூத்தாடி-

மற்றொரு தெருவில் பாம்பு-கீரிச் சண்டைக் காட்சி-இரவுகளில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தாதுபுஷ்டி-இனவிருத்தி லேகியம்-சிட்டுக்குருவி லேகியம்-தங்கபஸ்பம்-சமாச்சாரங்களில் களைகட்டும் நெல்லூரை விட்டுப்பிரியும் போது மனதில் ஏதோ பழகிய காதலியை முறை மாமனிடம் விட்டுப் பிரியும் தொண்டைக்கமறல் எப்போதும் எனக்கேற்படும்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எத்தனையோ இடங்களில் சாப்பிட்டு அலுத்தபின்னும் நினைத்தவுடன் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும் உன்னை மறக்கமுடியவில்லை என்னால்.

என்னை நினைவு வைத்திருக்கிறாயா கோமள விலாஸ்?

(இது ஒரு மீள்பதிவு. இரசிகை,ஹேமா, ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி மற்றும் பத்மா இவர்களின் பின்னூட்டங்களுடன். தவற விட்டவர்களுக்காக இன்னொரு முறை)



இரசிகை said...
:)
சுந்தர்ஜி said...
:)ரசிகை.
ஹேமா said...
வாழையிலையைச் செங்குத்தாகப் போட்டுச் சாப்பிடும் முறையொன்று இருக்கிறதா ?புதுமைதான்.
//ஒரு நீள இலையைப்...... ......முடியும் என்னால்?//
இந்தப் பந்தியில் சாப்பாட்டை ஆலாபனை செய்த லாவகம் பசியைத் தூண்டிவிட்டது சுந்தர்ஜி.
சாப்பாடு போலவே சொன்ன விதமும் அசத்தல்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
ரொம்ப ப்ரமாதம்..மாயவரம் காளிகாகுடி ஹோட்டல்..திருச்சி ஆதிகுடி..அடை அவியல் இதைப் போல எனக்கும் பதிவு பண்ண ஆவல்..முடியுமா,உங்களைப் போல்..!!!
சுந்தர்ஜி said...
சாப்பிட்டதற்கு நன்றி ஹேமா.
காளியாகுடியும்-ஆதிகுடியும் துணை செய்யும்.என்னை விட நன்றாக எழுத உங்களால் முடியும் ராமமூர்த்தி ஸார்.காத்திருக்கிறேன் ஆவலாக.
பத்மா said...
தலைக்கு எண்ணை வைத்துக்குளிக்காமல் வியாபாரத்துக்கு வரும் பெருமக்களால்
ஹஹஹா
பாட்டுதான் கொக்கி.
ஐயோ பாவம் ...யார் பாவம்? அதான் தெரில :))
அவர்களின் பிஞ்சுக் கத்தரிக்காயுடன் சின்ன வெங்காயம் இணைந்த புளிக்கூட்டு மிகப் பிரசித்தம்
இதை சிதம்பரத்தில் கொஸ்து என்பார்கள் ..சாப்பிட்டு இருக்கீங்களா ? சம்பா கொஸ்து?
ஏதோ பழகிய காதலியை முறை மாமனிடம் விட்டுப் பிரியும் தொண்டைக்கமறல் எப்போதும் எனக்கேற்படும்.
இது ரொம்ப நல்லாயிருக்கே ...
எங்க colleague ஒருத்தர் நெல்லூர் .இதை படித்தவுடன் அவருடன் இதைப்பற்றி பேசினேன். .அவரும் மிகவும் சிலாகித்து பேசினார். எங்கள் food map இல் இப்போது நெல்லூரும் உண்டு . நன்றி விருந்துக்கு ...
சுந்தர்ஜி said...
ரொம்ப நன்றி பத்மா. அது கொத்ஸு.கொஸ்து இல்லை.சம்பா கொத்ஸு சாப்பிட்டிருக்கிறேன்.அது எதனோடும் துணைக்கு வரும்.கோமள விலாஸின் இந்தப்புளிக்கூட்டின் சுவை வேறெங்கும் நான் கண்டதில்லை.

11 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நெல்லூர் கோமளவிலாஸுக்கே திரு. சுந்தர்ஜி அவர்களுடன் சென்று அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் செலவிலேயே தாம்பூலம் தரித்தது போல ஒருவித கிக் ஏற்பட்டது. பாண்டிச்சேரிக்காரர் அல்லவா எழுதியிருக்கிறார். கிக்குக்கு என்ன குறைச்சல் ...... அன்புடன் vgk

Ramani சொன்னது…

சூழல் வர்ணிப்பு அந்தக் காலத்தை
எங்கள் கண்முன் நிறுத்தியது
சமையல் வர்ணிப்பு வாயில் நீறூர
வைத்துவிட்டது
அந்தக் காலத்தில் நானும் இதுபோல
பிரஸித்திபெற்ற கடைகளை எல்லாம்
தேடிப்போய் சாப்பிட்டு இருக்கிறேன்
சமையல் ருசி என்பது மட்டும் இல்லை
பரிமாறுபவன் கை தாராளம்
இப்போது எண்ணிப்பார்க்கும் போது கூட
ஆச்சரியப்படவைக்கிறது
தயவு செய்து இதுபோன்ற பதிவுகளை
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
பழைய நினைவுகளை கிளறிச் செல்லும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

நெல்லூர் செல்ல நேர்ந்தால் உங்கள் நினைவு கட்டாயம் வரும் ஜி..அழகிய நடை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அடடா படிக்காம மிஸ் பண்ணிட்டேனே… நாக்கில் ஜலம் ஊறுகிறது. சில மாதங்களுக்கு முன் நெல்லூர் சென்ற போது தெரிந்திருந்தால் அங்கும் சென்று பார்த்திருப்பேன்… ஆந்திரா சமையல் எனக்கும் பிடிக்கும் – அவர்களது கண்ணில் கண்ணீர் வரும் காரத்தினைத் தவிர….

Matangi Mawley சொன்னது…

Aahaa! cha... ippadeenna ezhuthanum! :)

enga trichy 'chathram bus stand' Raghunath Hotel (athukku innoru branch irukku... theppa kulam pakkathla... that's not so good...) Rava Dosa ninaivirkku varuthu...

nellore ponaa kandippaa etti paaththuttu varen! :)

suuuuuperb!!!

A.R.RAJAGOPALAN சொன்னது…

வயிறும் , மனதும் இன்று கண்களாலேயே நிரம்பி ததும்புகின்றது ,
சிநேக செல்ல மனைவியே கேசை பற்றவை திரும்ப ..............

உங்களின் எழுத்து நடை ஏழாம் சுவை , அற்புதம் , அமர்க்களம் , ஆனந்தம் சுந்தர்ஜி

வானம்பாடிகள் சொன்னது…

வாழை இலை குறுக்காப் போடுறது ஆந்திராவில் பழக்கம்தான். ஒரு கலியாணத்துக்கு முன்னாடியே போய்ட்டு முதல்ல தென்னங்குருத்தோலை வந்ததும் மிரண்டு போய்ட்டேன். அப்புறம் பார்த்தா நம்ம ஊர்ல வாழைமரம் கட்ரா மாதிரி அங்க தென்னமட்டை:))

RVS சொன்னது…

நெல்லூர் கோமளாஸ் ல சாப்டதை எச்சக் கையோட அப்படியே சொன்னா மாதிரி இருக்கு ஜி! அற்புதம். ;-))

G.M Balasubramaniam சொன்னது…

நினைவுகளில் நீந்துகையில் ஒரு தனி சுகம். சுந்தர்ஜி. உங்களுடன் சேர்ந்து அநுபவித்தேன்.

வித்யாஷ‌ங்கர் சொன்னது…

நல்ல ரசனையோடு எழதப்பட்ட கட்டுரை மனசு கோமலவிலசை தேடுது

இசைக்கவி ரமணன் சொன்னது…

வெகுவாக ரசித்தேன்! எனக்குப் பெரும் பசியே வந்துவிட்டது. சரி, இப்போதும் இருக்கிறதா கோ.வி.?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...