ஒரு அரசன் அவனுடைய அமைச்சர் மற்றும் சில வீரர்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். ஒரு சந்தர்ப்பத்தில் மூவரும் வழி தவறித் தனித்துப் பிரிந்தனர். வழி தேடித் திரிந்தனர்.
ஒரு மரத்தடியில் பார்வையற்ற ஒரு முனிவர் அமர்ந்திருந்தார்.
முதலில் அவ்வழியே வந்த ஒரு வீரன் அவரிடம் வந்து குதிரைமீது உட்கார்ந்தவாறே அம்முனிவர் பார்வையற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு-
"ஏய் குருடா!இந்தப் பக்கம் மனிதர்கள் யாரும் வந்த காலடியோசையைக் கேட்டாயா?" என்றான்.
முனிவர் அதற்கு "இல்லையே வீரனே!" என்றார். அவன் போய்விட்டான்.
அடுத்தது அமைச்சர் வந்தார். குதிரையை விட்டுக் கீழிறங்கி நின்று,
"கண் பார்வையற்ற முனிவரே! இந்தப் பக்கம் மனிதர்களின் காலடியோசை ஏதும் கேட்டதா?" என்றார்.
அதற்கு முனிவர் "யார்? அமைச்சரா? சற்று முன்பு வீரன் ஒருவன்தான் வந்தான்" என்றார்.
அமைச்சர் போய் விட்டார்.
சற்று நேரத்தில் அரசன் வந்தான்.
அவன் குதிரையை விட்டுக் கீழிறங்கி, முனிவர் முன்பு மண்டியிட்டு "மகரிஷி அவர்களே! தயவு செய்து இங்கே மனிதக் காலடியோசை ஏதும் கேட்டதா? என்பதைத் தெரிவித்து உதவ வேண்டும்" என்றான்.
அதற்கு முனிவர் "முதலில் ஒரு வீரனும், பிறகு அமைச்சரும் வந்தனர். இப்போது அரசர் நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றார்.
அரசன் விடை பெற்றான்.
சற்று நேரத்தில் மூவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர்.
மூவருக்கும் ஆச்சர்யம். 'பார்வையற்ற முனிவர் எப்படி ஓவ்வொருவரையும் இனம் கண்டு கொண்டார்? என்பதுதான்.'
முனிவரிடமே வந்து கேட்டனர்.
முனிவர் சொன்னார்:
குதிரை மீது அமர்ந்தவாறே 'ஏ குருடா' என்றவன் வீரன்.
இறங்கி நின்று 'பார்வையற்ற முனிவரே' என்றவர் அமைச்சர்.
மண்டியிட்டு 'மகரிஷி அவர்களே' என்றவர் அரசர் என்றார்.
பார்வையற்றவருக்குப்
பார்வையைக்
கொடுத்துப்
பாதை காட்டுகிறது
பணிவின் சுகந்தம்.
பார்வையுள்ளவனைக்
குருடனாக்கிப்
பாதையின் பள்ளத்தில்
தள்ளுகிறது
பணியாமையின்
ஈட்டி.
11 கருத்துகள்:
அவரவர் தரத்திற்கேற்ப வினாக்கள்..
விவரித்த விதம் முதல் தரம்!
//பார்வையற்றவருக்குப்பார்வையைக் கொடுத்துப்பாதை காட்டுகிறதுபணிவின் சுகந்தம்.
பார்வையுள்ளவனைக்குருடனாக்கிப்பாதையின் பள்ளத்தில்தள்ளுகிறது பணியாமை//
நல்ல கருத்துள்ள கதை. பாராட்டுக்கள்.
தடம். ரொம்ப திடம். ரொம்ப தரம். அவசியமானது இன்றைய காலச்சூழலுக்கு. யாருக்குமானது இது. தரமறிந்தால் தடம் புரியும் தடையின்றிப் பயணிக்கலாம் யாரும் தரமாய் கடைசிவரை. அருமை சுந்தர்ஜி.
அமர்க்களம் ஜி! இதேபோல தொடருங்கள்... அனைத்தும் ஜென் கதைகள் போல் உள்ளது. அவரவர் எச்சத்தால் அறியப்படும். சரியா ஜி? ;-))
வெள்ளத்தனைய மலர்நீட்டம்...
அழகான பதிவு சுந்தர்ஜி !
அற்புதமான கருத்தையும் பணிவின் மகாத்மியத்தையும் சொன்ன உன்னத கதை
அதை தொடர்ந்து வந்த அண்ணாவின் கவிதை மகுடம்
அடக்கம்.பணிவு நன்மையே தருகிறது !
நல்ல குட்டிக் கதை. பணிவை வைத்து அவர்கள் தரத்தை எடை போடலாம்
குதிரை காமன் ஃபாக்டர். குரலும் பணிவும் அடையாளங்கள்முனிவர் தரம் தெரிந்தவர். கண்ணிருந்தும் தரம் தெரியாதவரை என்னென்று சொல்ல.
நீங்கள் பகிர்ந்து வரும் கதையும் அதற்கேற்ப வடிக்கும் கவிதையும் அருமை ஜி! ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன....
தாங்கள் அறிந்தவை எங்களுக்கும் அறிவைத் தருகிறது. நன்றி ஜி.வளரும் பிள்ளைகளுக்கு தினமொரு கதையாய் சொல்லப் பொருத்தமானது.இன்றைய காலச்சூழலுக்கு யாருக்குமானது.
கருத்துரையிடுக