மெழுகின் வெளிச்சத்தில்
இசை உருகிக்கொண்டிருந்த
ஓர் இரவைப் பற்றி
என்னால் சொல்லவும்
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
திறந்த சாளரத்தின்
வழியே தவ்விச் செல்லும்
ஓர் அணிலின்
பாய்ச்சலாய் இசை.
அப்படிச் சொன்னபின் தெரிகிறது
அது தெரியாமல்
பூட்டிய வீட்டுக்குள் வந்து தவிக்கும்
ஓர் தவளையைப் போலவும் என்று.
இசைக்கப்படாத இடைவெளிகளில்
தப்பிச் சென்றும் திகிலூட்டும் பாம்பையும்-
இசைத்து முடிகையில்
வெளிச்சத்தின் கிளைகளில்
முட்டிமோதி மடியும் விட்டிலையும்-
நினைவு கூர்ந்தபடியே
இருளில் கரைந்தும்
உயிர்த்திருந்தது இசை
மெழுகோடு மெழுகாய்.
19 கருத்துகள்:
அன்பு அண்ணா
எரிந்த இரவில்
எறிந்த இசை
பிரிந்த உறவில்
புரிந்த உண்மைபோல்
மெல்லியதாய்
இழையோடும்
இயல்பான கவிதை
இன்பக் கவிதை
அன்பு சுந்தர்ஜி, மெல்லிய வெளிச்சத்தில் இசை கேட்பது சுகானுபவம்.அப்படி கேட்கும்போது இசையின் ப்ரவாகத்தை சில நிகழ்வுகள் போல் நிகழ்வதுபோல் ஒப்பிட்டு ரசிப்பது நல்ல கவித்தன்மை.
மூடிய கதவுகளுக்குள் அகப்பட்ட தவளை எங்கோ நெருடுகிராற்போல் தோன்றுகிறது, பாராட்டுக்கள்.
அணிலாய்,தவளையாய், பாம்பாய் ஜாலம் காட்டி மெழுகுவர்த்தி தீபமாய் பிரகாசிக்கும் கவிதைக்குப் பாராட்டுக்கள்.
ஆஹா! அணில், தவளை, பாம்பு, விட்டில்பூச்சி மெழுகாய் எரியும் இந்த இரவுக்கவிதையில் பகல் போல நல்ல வெளிச்சம் உள்ளது. பாராட்டுக்கள்.
சிறந்த விஷயங்களைப் பேசவே முடியாது. தவிக்க மட்டுமே முடியும். கவிதை எழுப்பும் இசை வெளியும், மிக சிறப்பான உங்கள் மொழியும் அப்படித்தான். நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் எழுத்து வேறு வடிவம் பெற்றது போல இருக்கிறது.
இசையின் சுகந்தம் மெல்லப் படரும் சுகானுபவதில், தன்னையே அதன் கதிக்கு ஒப்புக்கொடுத்து விடும் ஒர் மென்மையான ரசிகனால் மட்டுமே இக்கவிதை இயற்ற இயலும். நானும் உம்மோடு சற்று மிதந்தேன்.
இப்போதைய அக்னி வெயிலின் உக்ரத்தை தணிப்பதாய் உங்கள் கவிதையும் இசையும் என்பதை கூறாமல் கூற வைக்கும் கவிதையில், அணிலும் தவளையும் பாம்பும் விட்டிலும் ஒளிரும் மெழுகில் ஜ்வலிக்கின்றன ஜி.
இசை கேட்டு தவித்த மனம் ...இல்லை தவிக்க வைத்த இசை ....
இசை எது வேணாலும் செய்யும் தானே
இரவில் மெழுகுவர்த்தி ஒளிச்சுடர் போல இசைச்சுடர் பிரகாசிக்கிறது.. உருகி வடிந்த மெழுகு போல இசையில் கசிந்த மனசு.. அப்படியே அந்த சூழ்நிலைக்குக் கொண்டு போன கவிதை.. சபாஷ்
மனமும் உருகத்துவங்குகிறது இக்கவிதையை வாசித்து முடிக்கையில்
உருகி உருகி ஓடிகொண்டிருக்கும் ஆனாலும் கரையாத மெழுகு அது....
மிக சிறப்பான கவிதை ஜி
Fantastic:)
இரவு.
மெழுகுவர்த்தி.
இசை.
தளும்பிக் கொண்டிருக்கிறது
உங்கள் கவிதை.
முடிந்த வரை இனிய தமிழில் பின்னூட்டம் இடும் அழகு கலந்துகட்டிப் பின்னூட்டமிடும் அன்பர்கள் மத்தியில் ஒரு முன்னூட்டம் ராஜு.
மெல்லிய வெளிச்சம் இசையின் தளத்தை உயர்த்திவிடுகிறது.
சில நேரங்கள் இசை தவளையாய் தவ்விக்குதிப்பதாய் எனக்குத் தோன்றும்.
எல்லா ஜீவராசிகளோடும் இசையும் உயிர்ப்பதாய் எனக்கு ஒரு தோற்றமயக்கம் உண்டு இராஜராஜேஸ்வரி. நன்றி.
இரவுக்கவிதையின் மெழுகொளியில் பகலைக் கண்ட கோபு சார் நிஜமாவே ஒரு வைகோ போன்ற நம்பிக்கை மனிதர்தான்.
இந்த இடத்தில் ஒரு ஓ போட ஆசைப்படுகிறேன்.
ஒரு ரசிகனோடு மிதந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான் மோகன்ஜி. வெகுகாலம் ஆகிறது நானும் மிதந்து.
நல்ல அவதானிப்பு மிருணா.
வடிவம் குறித்த ப்ரக்ஞையோடும் இந்தக் கவிதையை எழுதினேன்.
மேன்மையான அனுபவங்கள் வார்த்தைகளில் அடங்காதவைதான்.நன்றி.
கருத்துரையிடுக