ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயனத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயனம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு.
ஆகையால், ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவாகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த கிருஷ்ணபக்ஷம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி, பக்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும்.
ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீகிருஷ்ணாவதாரக் காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. அவனுடைய பெயரும் "கிருஷ்ணன். "கிருஷ்ணன் என்றால், "கறுப்பு என்று பொருள்.
------------------------------------------
கதவைப் பூட்டிக்கொண்டு கிளம்பும்போது திடீரென்று அறிமுகம் இல்லாத ஒரு வயதான பெரியவர் வந்து கதவைத் திற. உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றுமோ அதேதான் கோபாலனுக்கும் தோன்றியது. குழப்பத்துடன் அவரிடம் ”நீங்க யாருன்னு தெரியலையே?” என்றான்.
நீங்கள் யூகிக்கமுடியாத ஒரு ஞானப்பொலிவு அவர் முகத்தில். எழுபதிருக்கலாம். அசர வைக்கும் ஒளிவீசும் கண்கள். நிச்சயம் ஆறடி உயரமிருப்பார். நெற்றியின் மையத்தில் சந்தனமும் அதன் நடுவில் அரக்கு நிறக் குங்குமமும். கழுத்தில் ருத்ராக்ஷம் நீங்கள் எதிர்பார்த்தபடியே. மேற்கில் விழ இருக்கிற தகதகக்கும் சூரியனைப் போல காவி நிற ஆடையில் மினுங்கினார்.
”என்னப்பா ரொம்பவும் யோஜிக்கறே? ஒனக்கு ஒரு நல்ல சேதி கொண்டு வந்திருக்கேன். பூட்டியிருந்த கதவொண்ணு திறக்கப்போறது”
தெருவில் சுற்றிலும் ஆள் நடமாட்டமில்லை. கோபாலனின் மனைவி ஊருக்கு அவள் அம்மா வீட்டிற்குப் போயிருக்கிறாள். வெளியில் காஃபி சாப்பிட்டுவரலாம் என்று கிளம்பியபோது இந்த சம்பாஷணை.
அந்த வருடத்தின் வெயிலைப் போலவே வாழ்க்கையும் வறுத்தெடுத்தது. தொழிலில் எதிர்பாராத முடக்கமும் சரிவும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாசம் பூத்த வழுக்குப்பாறையாய். எந்தப் பிடிமானமும் இல்லாமல் காற்று தள்ளிக் கொண்டு போகும் சருகு போல மிதந்து போய்க்கொண்டிருந்தான் கோபாலன். மிகவும் யோசித்து, தன் அத்தனை சாமர்த்தியங்களையும் நம்பி இத்தொழிலை விரிவுபடுத்தியிருந்தான். வங்கியின் மேலாளர் தொடங்கி அரசு நிறுவனங்கள் வரைக்கும் கேட்ட எல்லா உதவிகளும் சட்டென்று கிடைத்தன. இயந்திரங்கள் வாங்கப் போன இடத்திலும் முதல் சந்திப்பிலேயே சாதகமான தொடர்புகளும் கிடைத்தன.
ஆனால் எத்தனை சாதகமாக தொழிலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிந்ததோ அத்தனைக்கு அத்தனை அது பாதகமாகப் போய் முடிந்தது. ஒரு மாதத்தில் திரும்ப வேண்டிய தவணை இரண்டு மூன்று மாதங்களாகியும் திரும்பாமல், புதிய தவணைகளும் சேர்ந்து கொள்ள கொள்முதல் செய்த இடத்திற்கும் வங்கிக்கும் பதில் சொல்ல வழியில்லாது போய் கடன் கண்ணை மூடித் திறப்பதற்குள் கழுத்து வரை ஏறி நின்றது. தவணையை வசூலிக்கப் போன இடத்தில் அந்த நிறுவனத்தின் நிதிநிலைமை திவாலாகி மஞ்சள் நோட்டீஸ் வரை சென்றுவிட பெரிய சறுக்கலின் துவக்கத்தில் இருந்த கோபாலன் அதல பாதாளத்தில் வீழ்ந்தான். இதுவரை இருந்த சாமர்த்தியமெல்லாம் மறந்து திடீரெனப் பழக்கமில்லாத தொழிலில் சிக்கித் திணறுவது போலத் தோன்றியது கோபாலனுக்கு.
பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டை, கார்களை விற்று எல்லாக் கடன்களையும் அடைத்தான். கையில் சொற்பக் காசுடன் பழகிய ஊரை விட்டு கொல்லும் நினைவுகளை மறக்க இந்த ஊருக்கு வந்தான். நம்பிக்கை. வழுக்கும் அடர்பாசி பரவிய தரையில் காலூன்றி முன் நகரும் நம்பிக்கை. அதுதான் அவனை இன்னும் நகர்த்திக் கொண்டிருக்கிறது. கோயில் யாத்திரை என்று ஆளே மாறியிருந்தான்.
”உங்களுக்கு எது ஆறுதல் தருதோ அப்படியே செய்யுங்க. உங்க கைல இருக்கற பணத்தைக் கொண்டு என்னால ஒரு வருடம் குடும்பம் நடத்த முடியும். வாடகைக்கும் செலவுக்கும் இது போதும்.இத்தனை நாள் தொழில் தொழில்னு கஷ்டப் பட்டு லோலோன்னு அலைஞ்சீங்க. கடவுளாப் பாத்து இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுத்து, உங்க வேகத்தைக் கட்டுப்படுத்தி, தொழிலைக் கைவிட்டுட்டு, அவனை நினைச்சு நீங்க கோயில் குளம்னு அவன் பின்னாடியே சுத்தணும்னு இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கானோன்னும் எனக்குத் தோணுதுங்க. கொஞ்ச நாள் எதுவும் செய்யாமல் அமைதியா சஞ்சலமில்லாம ஓய்வெடுத்துக்குங்க. மிச்சதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று அசரீரி மாதிரி கோபாலனுக்கு ஒத்தடம் கொடுத்தாள் வாசுகி- அவன் மனைவி.
அவனும் அது சரிதான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். நகரும் ஒவ்வொரு நாளும் கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்குமாய் ஊசலாடிக்கொண்டிருந்தது. காலத்தின் உக்ரத்தைத் தாங்கமுடியவில்லை.
கதவைத் தள்ளிக்கொண்டு ”உள்ளே வாங்க” என்றான்.
”நான் எப்பவோ உள்ளே வந்துட்டேன். நீதாம்ப்பா இன்னும் வெளீலயே நிக்கற” என்றார் பெரியவர்.
இப்படிப் பூடகமாகப் பேசும் மனிதர்களை கோபாலனுக்குப் பிடிக்கும். அவர்களின் புதிரை விடுவித்து விடை தேடுவதில் ஒரு அளவில்லாத சுவாரஸ்யம்.
உட்கார இடம் தேடியது பெரியவரின் கண்கள். நாற்காலியை நகர்த்தி உட்காரச் சொன்னான்.
“குடிக்க கொஞ்சம் ஜலம் கொடேன்” என்றார்.அவர் குரலில் இருந்த வாத்ஸல்யம் கோபாலனுக்கு அவரிடம் நெருக்கத்தை உண்டாக்கியது.அவரின் உத்தரவுகள் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிவிடுபவன் போல இருந்தான்.
முகத்தைத் துடைத்துக் கொண்டே “ஊதுவத்தி இருக்கா?” என்றார்.
“கம்ப்யூட்டர் சாம்பிராணிதான் இருக்கு. பரவால்லியா?”
”எதேஷ்ட்டம். ஒண்ணு ஏத்தி வை. நைவேதனத்துக்கு திராக்ஷை வெச்சுருக்கியா?”
அதைத் தேட முடியாது. எந்த டப்பாவில் வைத்திருக்கிறாளோ? தெரியாது.
வேகமாக எதிர்க்கடையில் சென்று வாங்கி வந்தான்.
”இப்படி ஸ்வாமிகிட்ட கூட ஒரு இருபத்திஒரு ரூபாயும் வெச்சுட்டு ஒக்காரு”
அவர் எதைப் பற்றிப் பேசப்போகிறார் என்று அவனால் யூகிக்க முடியாவிட்டாலும் அவரின் வார்த்தைகள் தனக்கு ஏதோ செய்தி கொண்டுவந்திருப்பதாக அவன் உள்மனது சொல்லியது.
“என்ன யோஜிக்கற? நான் பேசப் போறத கவனமாக் கேட்டுக்கோ. அதை மனசால வாங்கிக்கோ.புரியறதா?”
எதிரில் கண்களை ஒரு நிமிடம் மூடி மனதை சலனப் படாமல் ஒரு புள்ளியில் குவித்துக்கொண்டான்.
”ஃபோனையெல்லாம் நான் பேசும் போது நோண்டக்கூடாது. ஆஃப் பண்ணிடு இப்பவே”
”மொபைல் ஃபோன் நான் வெச்சுக்கறதுல்ல” என்று சொல்லியபடியே ரிசீவரைக் கீழே எடுத்து வைத்தான்.
”உனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?ன்னு எனக்குத் தெரியாது. ஆனா நான் சொல்லப் போற விஷயத்தை நீ நம்பணும்”
தலையாட்டினான்.
அவர் பேச ஆரம்பித்த உடன் மனதில் தோன்றிய சந்தேகங்களோடு பேச முற்பட்டான் கோபாலன்.
“நான் பேசி முடிக்கும் வரை நீ எதுவும் பேசக்கூடாது. உன்னுடைய சந்தேகங்கள், கொக்கி போல் உன்னைக் குடையும் கேள்விகள் இவையெல்லாம் நான் பேசி முடிக்கும்போது பதில்களாய் மாறியிருக்கும். ஆகையினால் வாய்க்குப் பதிலாக மனதையும் காதுகளையும் திறந்து வை” என்று சொல்லவே அனிச்சையாய்க் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டான்.
”ஒரு பிரம்புக்கூடை நிரம்ப மாம்பழங்களை அடுக்கி வைத்திருந்தாய். அந்த ஜென்மத்தில் நீ ஒரு படகோட்டி. ஒரு ராஜநாகம் அந்தக் கூடைக்குள் புகுந்துகொண்டது உனக்குத் தெரியாது. அது அலாதியான பசியோடு படுத்திருந்தது. அதன் வால் நுனி பட்டு மாம்பழங்கள் வலியால் துடிக்க ஆரம்பித்தன. ராஜநாகமோ தன் பசிக்கு அந்த மாம்பழங்களால் பயனில்லை என்றுணர்ந்து அவற்றை பெருச்சாளிகளாக மாற்றி ஒவ்வொன்றாகத் தின்ன ஆரம்பித்தது.
மாம்பழங்களைத் தேடிவந்த உன்னால் வெற்றுக் கூடையையும் அதில் தூங்கிக்கொண்டிருந்த நாகத்தையும்தான் பார்க்க முடிந்தது. பழத்தைக் காணோம். அந்தப் பாம்புதான் மாம்பழங்களைச் சாப்பிட்டிருக்கவேண்டும் என்ற கோபத்தில் துடுப்பால் ஓங்கி அடிக்க அந்த ராஜநாகம் பெரிதாய்ப் படமெடுத்து சீறியது. பத்து நிமிடம் போராடி அதைக் கொன்று பக்கத்தில் கடற்கரையில் குழி தோண்டிப் புதைத்துவிட்டாய். அதைத் தேடிவந்த எல்லா நாகங்களும் பாம்புகளைப் பயமுறுத்தும் உன் வியர்வை மணத்தால் பயந்து திரும்பி ஓடி மறைந்தன.”
“உன்னுடைய மனைவிதான் அந்த ராஜநாகம். போன ஜன்மத்தின் வாசனை உன்னைத் தொடர்கிறது. போன ஜன்மத்தில் உன்னால்தான் இறந்துபோனோம் என்பது அவளுக்குத் தெரியாது. அந்த ராஜநாகத்தைக் கொன்றது விதியின் கட்டளைதான் என்றாலும் அதற்கான சாபம்தான் உனக்கு இந்த ஜன்மத்தில் குழந்தைகள் பிறவாமல் போனது. இந்தப் பிறவியில் உனக்கு புத்திர பாக்கியம் கிடையாது.
ஆனாலும் உன் சாபம் நீங்க ஒரு காரியம் செய். உன் ஊருக்குத் தென்கிழக்கே நாற்பது மைல் தொலைவில் யாராலும் வழிபடாத ஒரு நாகரின் கோயில் இருக்கிறது. ஒரு பௌர்ணமியன்று இரவில் அந்தக் கோயிலுக்குச் சென்று ஒரு வாழைப் பழத் தாரும் ஒரு படிப் பசும்பாலும் அந்தக் கோயிலின் உள்பிரஹாரத்தில் இருக்கும் அரசமரத்தின் அடியில் வைத்துவிட்டு நாகராஜாவே! என் சாபத்தை நீக்கிவிடு என்று சொல்லிவிட்டு வாசலில் இருக்கும் குளக்கரை மண்டபத்தில் படுத்துறங்கு. மறுநாள் காலையில் குளத்தில் குளித்துவிட்டு அரசமரத்துக்குச் சென்று பார்க்க மஞ்சள் நிறத்தில் மகிழம்பூ இருந்தால் உன் சாபம் நிவர்த்தியாகி விட்டதாக நீ எண்ணலாம். ஒரு வேளை செம்பருத்திப் பூ இருந்தால் உன் சாபம் தீர்க்க என்னாலும் முடியாது என்று பொருள்.”
கோபாலனுக்குத் தான் எங்கிருக்கிறோம் என்று புரிந்துகொள்ளவே கொஞ்ச நேரம் பிடித்தது. வீட்டிற்குப் பக்கத்திலிருந்து வரும் வாடிக்கையான மாவரைக்கும் இயந்திரத்தின் சப்தம் கேட்கத் தொடங்கியிருந்தது. தெருவில் ஆட்டோக்கள் இரைந்தபடி போய்க்கொண்டிருந்தன. வீட்டின் கடிகார முட்கள் நகர்வது கூடக் கேட்கும்படியான நிசப்தம். அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் பெரியவர்.
(தொடரும்)
8 கருத்துகள்:
//”நான் எப்பவோ உள்ளே வந்துட்டேன். நீதாம்ப்பா இன்னும் வெளீலயே நிக்கற” என்றார் பெரியவர்.
//
நல்ல சுவையான, விறுவிறுப்பான ஆரம்பம்.
தொடருங்கள்.
சுந்தர்ஜியின் புதிய பரிமாணம்
அருமையான துவக்கம் நிறைய எதிர்பார்ப்புகளை
உண்டாக்கிப் போகிறது.அடுத்த பதிவை
ஆவலுடன் எதிர்பார்த்து...
இம்மாதிரி கதைகளீன் சுவாரசியமே அமானுஷ்யத்தின் மீதான நம் ஈடுபாடுதான். ஆரம்பம் ஆர்வம் தூண்டுகிறது.
நல்ல ஆரம்பம். தொடர்ந்து படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
பாசிபூத்த பாதையில் பயணம் தொடங்கி இருக்கிறது, "காலடி"யை நம்பிய நடையும், இளமையில் கிடைத்த நட்பணுபவங்களின் நம்பிக்கையும் பயணத்தை இனிதாய் பயனுள்ளதாய் ஆக்கும். பின்னாலேயே தொடர்ந்து வருகிறோம் சுந்தர்ஜி.
தட்சிணாயனம் நிஜமாகவே ஒரு சுவாரஸ்யமான திரைக்கதைத் தொடக்கம் போல் வந்துள்ளது.இதே எனர்ஜியுடன் தொடருங்கள் சுந்தர்ஜி.வாழ்த்துக்கள், தமிழ்கூறு நல்லுலகிற்கு ஒரு மாறுபட்ட நாவல் கிடைக்க.அவ்வப்போது வாசித்து என் எண்ணங்களைப் பகிர்வேன். நேசமிகு எஸ்.ராஜகுமாரன் 26 04 2012
இன்றுதான் நான் உள்நுழைந்துள்ளேன் ஜி! கண்களும் மனசும் திறந்திருக்க...
கருத்துரையிடுக