6.6.12

7. ஸ்ரீமுக - தக்ஷிணாயனம்.


---------------------
வாங்மாதுர்யாத் ஸர்வலோக ப்ரியத்வம்
வாக்யபாருஷ்யாத் ஸர்வலோகாப்ரியத்வம் 
கோ வா லோகே கீகிலஸ் யோபகார:
கோ வா லோகே கார்தபஸ்யாபகார:


குயிலிடத்தில் அதன் இனிய சொல்லினால் எல்லோருக்கும் ஆசையும், கழுதையிடத்தில் அதன் கொடூரமான கத்தலால் வெறுப்பும் உண்டாவது போல எல்லா ஜனங்களுக்கும் இனிய சொற்களால் ஆசையும், கடுஞ்சொற்களால் வெறுப்பும் ஏற்படுகின்றன.


(நீதி சாஸ்த்ரம்)
----------------------------------------------------------------------------------------------------------------------------------

பெருமாள்புரம் தனலக்ஷ்மிய உங்களுக்குத் தெரியாது. அவளைப் பெருமாள்புரம் லக்ஷ்மியம்மான்னு சொன்னாதான் ஊர்ல எல்லாருக்கும் புரியும். அவளைப் பத்திச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு.

அவளுக்கு ஞாபக சக்தி ரொம்ப ஜாஸ்தி. உதாரணத்துக்கு நீங்க இருவது வருஷத்துக்கு முன்னால முடிஞ்சுபோன ஒரு சம்பவத்தை நினைச்சுப் பாத்தா அத்தனை சுவாரஸ்யமா இருக்குமான்னு சொல்லத் தெரியல.

ஆனா அதுவே லக்ஷ்மியாயிருந்தா அன்னிக்கு ரத ஸப்தமின்னும், அன்னிக்கு சமையல் பீன்ஸ் பருப்பு உசிலியும், அரைச்சுவிட்ட பூசனிக்காய் சாம்பாரும், பருப்பு வடையும், கலத்துக்கு மரிசீனிக்கிழங்கு அப்பளமும் பொரிச்சுப்போட்டதையும் சொல்றதோட அன்னிக்கு அரக்கு நிறமும் மஞ்சள் பார்டர் போட்ட புடவையை தான் கட்டிக்கொண்டதையும் சொல்லிக் கேக்கும்போது பகவானே எனக்கு ஏன் ரெண்டு காதுமட்டும் குடுத்தேன்னு பொலம்பத் தோணும். அத்தனை சுவாரஸ்யமான ஜோடிப்பும், ஞாபக சக்தியும்.

அவளோட சுவாரஸ்யமான பக்கங்களை நான் சொல்ல முயற்சிக்கறதும், அது எழுத்துக்குள்ள அடங்காம பிடிவாதமா நழுவி நழுவி கைக்குள்ள அடங்காம பாவ்லா காட்றதும் இன்னிக்கு மட்டுமில்லை. ரொம்ப நாளாவே பெரும் ப்ரயத்தனம்தான். எனக்கு அவளத்தனை ஞாபக சக்தி கிடையாது. இத்தனை தூரம் கதை சொல்லிட்டு இன்னும் அவதான் என் ஆம்படையா ன்னு அறிமுகப்படுத்தாம நாம் பாட்டுக்குத் தேமேன்னு போயிண்டிருக்கறதுலேருந்தே நீங்க யூகிச்சிண்டிருப்பேள்.

அதுனால நீங்க எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். நான் எப்படி எப்படி எழுதிண்டு போறேனோ அந்தப் போக்கிலேயே வாசிச்சுண்டு போக வேண்டியது. அத்தனைதான். இந்த நாவல், கதை, கட்டுரை அப்படில்லாம் சொல்றாளே அதுமாதிரியெல்லாம் எனக்கு எழுத வராது.

-----------------------------------------------------------

தினமும் கார்த்தால ப்ரும்ம முஹூர்த்தத்துல அதான் உள்ளங்கை கண்ணுக்குத் தெரியாம இருட்டு மிச்சமிருக்கும் வேளைல கிணத்துல மடமடன்னு இரைச்சு ஊத்திண்டு மொடமொடக்கற வேஷ்டியைச் சுத்திண்டு தெருமுனைல இருக்கற சிவன் கோயிலுக்குப் போய் ஒரு ஆவர்த்தனம் ருத்ரம் சமகம் சொன்னப்பறம்தான் நாக்கில் ஜலம் கூடப் படலாம். எங்கப்பா காலத்துலருந்து அப்பிடி ஒரு பழக்கம்.

அவளுக்கோ இந்தக் கோயில் பூஜை புனஸ்காரங்கள் இந்த மாதிரி விஷயங்களில்லெல்லாம் அத்தனை ஈடுபாடு கெடையாது. அதுக்காக அவ நம்பிக்கை இல்லாத ஜாதியும் கிடையாது. எதாவது கஷ்டம்னு வந்துட்டா வாயாற ஹே அம்பிகே என்ன ஏன் சோதிக்கறடியம்மா?ன்னு நேரடியா ஹாட்லைன்ல பேசிக்கற ஜன்மம். எல்லாம் சரியா ஓடிண்டிருந்தா உள்ளுக்குள்ளேயே உபாசனை எல்லாம் இருக்கும். ஆனா சொன்னா தப்பா எடுத்துக்கலன்னா சொல்றேன். அவ பாக்றதுக்கு நேரே அம்பாளே ப்ரத்யக்ஷம் ஆனா மாதிரிதான் இருப்பா. என்னடா பொண்டாட்டிக்கு இப்படி ஒரு ஐஸ் வெக்கறானேன்னு நெனச்சா நெனச்சிக்கோங்கோ. எனக்கெந்தக் கவலையுமில்லை.

பார்த்தேளா! எங்க ஆரம்பிச்சு எங்க போயிண்டிருக்கு கதை? சொல்ல வந்த விஷயம் என்னன்னா அவளோட ஞாபக சக்தி பத்தித்தான் சொல்ல வந்தேன்.

-------------------------------------------

ஒரு தடவை எங்கேயோ போயிட்டு வரச்சே பாக்கப் பச்சுனு இருக்கேன்னு ஒரு கிலோ வெண்டைக்காய் வாங்கிண்டு வந்துசேர்ந்தேன். ஒரு காயைக் கூட ஒடிச்சுப்பாக்க வேண்டியதில்லை. சில நேரம் அதெல்லாம் பார்வைக்கே தெரிஞ்சுடும். அப்பிடி ஒரு காய்ப்பு. ஒரு கிலோவையும் கொண்டுவந்து சொளகுல கொட்டிட்டு ஏ தனம்! இங்க வந்து பாரேன் இந்த வெண்டைக்காயை! குழந்தையோட வெரல் மாதிரி எப்பிடி ஒரு தவப்பிஞ்சுன்னு கூப்பிட்றேன். உடனே வர்றாளா பாருங்கோளேன். ஆடி அசைஞ்சு இந்தோ வந்துட்டேன்னா சொல்லி ரெண்டு நிமிஷம் ஆயிடுத்து.

ஆவணியாவட்டமும் வரலெக்ஷ்மி நோன்பும் இந்த தடவை சேர்ந்து வரது கவனிச்சேளா! ன்னு ஒரு உபரி தகவலோட குளித்த தலையின் நுனியில் தொங்கும் வெள்ளைத் துண்டோட அவ வந்த போது ஒரு க்ஷணம் எனக்கு வெண்டைக்காய் ரெண்டாம் பக்ஷமாயிடுத்து. இப்படித்தான் என்னைக் கட்டிப்போட்டு வெச்சிருக்கா. அவள அப்படியே கட்டிண்டு மோப்பம் பிடிக்கணும்னு ஆசையா இருக்கும்.

அப்பிடி நெனைச்ச நிமிஷமே அம்மான்னு ஓடி வந்து யாராவது நிப்பன் வாசல்ல. க்ராதஹி! மனுஷனுக்கு மனசுல காமம் பொங்கிண்டிருக்குன்னு புரிஞ்சுண்டவளா ‘சட்டுனு எப்பிடித் தப்பிச்சேம் பாத்தேளாங்கற’ மாதிரி என்னை அல்பமா ஒரு பார்வையை வீசிட்டு மான் மாதிரித் துள்ளி மறைஞ்சு போயிடுவா. சித்த நாழிக்கப்பறம் காஃபியோட வந்தவளுக்கு நான் வழிஞ்சுண்டு நிக்கறதப் பாத்து ஒரு சிரிப்புப் பிச்சுக்கும் பாருங்கோ! அலாதி சிரிப்பு.

----------------------------------------------

ஊஞ்சல் ஆடிண்டு இருக்கு. அவ இல்லை. போய்ச்சேந்துட்டா நாப்பது வயசுலயே. நாந்தான் இப்படி எண்பதாகியும் ஒவ்வொரு வேளையும் அவளைப் பத்தி நெனச்சிண்டு பொழுத ஓட்டிண்டிருக்கேன். அன்னிக்கு வெண்டக்காய் வாங்கிண்டு வந்தேனா! ஒடனே சொல்றா ஒரு கிலோன்னா 103 வெண்டைக்காய் நிக்கணும். இல்லன்னா அவனோட எடை தப்புன்னு, அப்பவும் பொழுது போகாம எண்ணினேன். நம்புங்கோ.103 வெண்டைக்காய் இருந்தது. இது மாதிரியே உருளைக்கிழங்குல தொடங்கி கத்தரிக்காய் வரைக்கும் எல்லாக் காய்கறிகளோடயும் எல்லா வஸ்துக்களோடயும் அவளுக்குன்னு ஒரு கணக்கு உண்டு.

இதெல்லாம் பெரிசில்லன்னா. பலாப்பழத்துக்குள்ள எத்தனை சுளை இருக்குன்னு பழத்தை அறுக்காமலே என்னால சொல்ல முடியும்.பாக்கறேளா!

’தூங்கு பலாவின் சுளையறிய வேண்டுமென்றால்
காம்பருகே நிற்கும் கதிர்முள்ளைப் - பாங்குடனே
எட்டெட்டால் மாறி இருநால்வர்க்கீய
திட்டெனத் தோன்றும் சுளை’ ன்னு ஒரு பாட்டு உண்டுன்னா.

புரிஞ்சிண்டிருப்பேள்னு நினைக்கிறேன். பலாப்பழக் காம்பைச் சுத்தி இருக்கற முள் 10ன்னு வெச்சுக்குங்கோ. அதை 64ஆல் பெருக்கினா 640. அதை எட்டால வகுத்தா வரக்கூடிய 80தான் சுளையோட எண்ணிக்கை. நீங்க வேணும்னா அடுத்த தடவை பலாப்பழத்தை வெட்றதுக்கு முன்னாடி ப்ரயோகிச்சுப் பாருங்கோ.

நான் பண்ணின முதல் வேலை ஆத்துல காய்ச்சுத் தொங்கின பலாவை வெட்டிப் பாத்து லக்ஷ்மி சொன்னது சரிதான்னு தெரிஞ்சுண்டதுதான். எனக்கு வந்த சந்தோஷத்துல அவளுக்கு ஒரு ஜோடி வளையல் வாங்கிக்கொடுத்தேன் கண்ணம்மா கண்ணம்மான்னு உருகிண்டே.

-----------------------------------------------------

தூக்கமுடியாதைக்கு ஒரு பெரிய பூசணிக்காயைச் சுமந்துண்டு உள்ளே நுழையறேன். இறக்கிவெச்சுட்டு அங்கவஸ்த்திரத்தால மொகத்தை ஒத்திண்டு அப்பாடான்னு லக்ஷ்மி கொடுத்த மோரைக் குடிச்சுட்டு நிமிந்தா போட்டாளே ஒரு குண்டு ‘இந்தப் பூசணிக்காயை வெட்டாமலே உள்ளுக்குள்ள எத்த்னை விதை இருக்குன்னு என்னால சொல்லமுடியும்’னு. ஆன்னு வாயைப் பொளந்துண்டு அவளையே பாத்துண்டு நிக்கறேன் ப்ரமிச்சுப்போய்.

கீத்தெண்ணி முற்றித்துக் கீழாறிலே பெருக்கி
வேற்றைந்தி னால்மீன மிகப்பெருக்கி - ஏத்ததொரு
ஆதரித்தக் கீற்றை அரைசெய்து முற்றிக்க
பூசணிக்காய் தோன்றும் விதை.

அப்பிடின்னா என்றேன் லக்ஷ்மியைப் பாத்து வியப்படங்காம.

ஒரு பூசணிக்கு 10 கீத்து இருந்தா அதை 3ஆல் பெருக்க 30 கிடைக்கும். அதை 6ஆல் பெருக்க 180. மறுபடி 5ஆல் பெருக்கினா 900. அதில் பாதி 450. இதை 3ஆல் பெருக்கினால் 1350 வரும். ஆக 10 கீத்து இருக்கற பூசணிக்காய்க்கு விதை 1350தான். இருக்கா இல்லையான்னு இந்த பூசணியை வெட்டும்போது உங்களுக்குக் காட்றேன். சரியான்னா?

எங்கேருந்து இதெல்லாம் தெரிஞ்சுண்டிருக்கா இந்தப் பொண்ணரசி?

இந்தத் தடவை என்னோட சந்தோஷத்துக்காக தினம் தினம் கோபூஜை பண்ண அவ ஆசைப்படி ஒரு பசுமாடு வாங்கிக் கொடுத்தேன்.

என்னால ஆச்சர்யப்படாம இருக்கமுடியுமோ சொல்லுங்கோ. இப்படியெல்லாம் ஒரு உலகத்தைக் காட்டினதே லக்ஷ்மிதான்.

-------------------------------------------------------

இன்னொரு நாளைக்கு விசிறிண்டே ஊஞ்சல்ல படுத்திண்டிருந்தவன் அப்படி விசிறி மேலே கெடக்கத் தூங்கிட்டேன். நல்ல தூக்கத்துல யாரோ காலை அமுக்கிவிடறாமாதிரி ஒரு சுகம். இந்தக் காலம் மாதிரியில்ல. செருப்பில்லாம நடக்கற கால். பித்தவெடிப்பு வேற வெய்யில்லயும் ஜலத்துலயும் நின்னுநின்னு.

சடார்னு எழுந்து வேணாம்மா பரவாயில்லங்கறேன்.இல்லன்னா கொஞ்சம் அப்பிடியே படுத்துக்குங்கோன்னு சொல்லிட்டு - முள் குத்தி கால ரெண்டு நாளா தரைல ஊணாம நடக்கறதப் பாத்திருக்காளா - உப்பைத் துணில கட்டி கொதிக்கற வெளக்கெண்ணைலை தோய்ச்சு குதிங்கால்ல ஒத்தி எடுத்தா. வலிக்கு அப்பிடி ஒரு இதம். அப்படித்தான் இன்னொரு தரம் கண்ணெல்லாம் பொங்கி கண்ணுக்கு வியாதி வந்தப்போ கொதிக்கற சாதத்தை மஞ்சள்பொடி கொழைச்ச வெளக்கெண்ணய விட்டு துணீல ஒரு சின்ன மூட்டையாக் கட்டி கண்ணுல ஒத்தி எடுத்தா பாருங்கோ ரெண்டு நாள்ல கண்ணுவலி போன இடம் தெரியல. அவளோட பரிவை நான் பாத்தவன். அப்பிடி ஒரு ஜன்மா எனக்கு ஆம்படையாளா வாய்ச்சது என்னோட பூர்வஜன்மப் புண்யம்.

வயித்துவலின்னா மோரும் வெந்தயமும். செவ்வாய்-வெள்ளின்னா சுமங்கலிகளும்,யுவதிகளும், கன்யாப் பொண் கொழந்தைகளும், புதன், சனியானா ஆம்பளைத் தடியன்களும் எண்ணைக்குளியலும்- தலை ஈரம் போக சாம்பிராணிப்புகையும். ஞாயித்துக்கிழமைகள்ல வெளக்கெண்ணை வயத்துக்கும், வேப்பிலைக்கொழுந்த அரைச்சு தயிர்ல கலந்து குடல்ல இருக்கற பூச்சி போக-தலைவலிக்கு சுக்குப் பத்து- சளி கட்டிண்டா கொதிக்க வெச்ச தேங்கா எண்ணைல கற்பூரத்தைக் கொழச்சு மார்ல பூசறதும், இருமலுக்கு சித்தரத்தை அதிமதுரம் கஷாயம்- வயத்துப் புண்ணுக்கு மணத்தக்காளி- மஞ்சக் காமாலைக்கு கீழாநெல்லி- துவாதஸிக்கு அகத்தியும் நெல்லிமுள்ளியும்-

இதுதவிர வெட்டுக்காயம், சேத்துப்புண், முட்டு வலி, சுளுக்குன்னா எப்பவும் சைபால்-தென்னமரக்குடி எண்ணைன்னு வெச்சுண்டு ஒரு டாக்டரா ஜொலிஜொலிப்பா. உங்களுக்கு போர் அடிக்கலாம். ஆனா லக்ஷ்மி இருந்த வரைக்கும் ஒரு நாள் ஒரு வேளை நான் டாக்டரைப் பாக்கப் போனதில்ல. ’லக்ஷ்மியம்மா காலத்துக்கப்புறம்தான் நம்மூர் டாக்டரோட வயசான காலத்துல சம்பாரிச்சு வீடு கட்ட முடிஞ்சுது’ன்னு ஊர் ஜனங்க பேசிக்கறது ஒண்ணும் பொய்யில்லை.

---------------------------------------------------------

மொதமொதல்ல 1956 கார்த்திகை மாச வியாழக்கிழமை என்னால மறக்கவே முடியாத பயங்கரமான திருப்புமுனை நாள். பால்கனில என் மடில படுத்துண்டு என்னென்னமோ பேசிண்டே இருக்கா. முன்பனி விழுந்துண்டிருக்கு. அவளோட ஒவ்வொரு விரலா நீவிவிட்டு சொடக்கெடுத்துண்டு இருக்கேன். அவளுக்குப் பிடிச்ச வெத்தலய மடிச்சு மடிச்சு அவளுக்குக் கொடுத்துண்டிருக்கேன். சிருங்காரமான அந்த வேளைல அவளுக்கு முத்தம் குடுக்கணும் முகத்தைப் பாத்துக் குனியறேன்.

உலுக்கினாப் போல சடார்னு எழுந்துண்டவ ’அந்தப் பல்லியப் பாருங்கோன்னா என்ன சொல்றதுன்னு. அதோட கண்ணுல ஏதோ விபரீதம். கொஞ்சம் இருங்கோ. கொஞ்சம் இருங்கோ. என்னன்னா இது. பாலத்துலேருந்து நாளக்கி ரயில் கவிழப் போறதுன்னா’ன்னு சொல்லச்சொல்ல எனக்கு ஜில்லிட்டுப் போய் அவளை உலுக்கறேன். லக்ஷ்மீம்மா என்னம்மா இது இப்பிடில்லாம் பேசற. எனக்கு பயம்மா இருக்குன்னு சொல்றேன்.

அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி அவ தூங்கிப் போக மறுநாள் அப்படி எதுவும் நடந்திடக் கூடாதுன்னு நெனச்சுண்டே ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகமாக் கழிக்க மறுநாள் வெள்ளிக்கிழமை அரியலூர்ல கோரமான ரயில் விபத்துல நூத்துக்கும் மேலான பேர் செத்துப்போனா. லால்பஹதூர் சாஸ்திரி கூட தன்னோட பதவிய ராஜினாமா பண்ணினாரே அந்த விபத்துதான். ’ இது என்னதுன்னா இப்படில்லாம் நடக்கறது’ன்னு அவளுக்கு ஒரே ஆச்சர்யம். எனக்கோ பெரும் பயம். எனக்கு முதன்முதலா லக்ஷ்மிகிட்ட இருந்த ப்ரமிப்பு பயமாய் உருமாற ஆரம்பிச்சுது.

----------------------------------------------

அதுக்கப்புறம் அவள் இருந்த அடுத்த பதினாலு வருஷமும் இப்படித்தான். எதைச் சொல்ல எதை விட? ஒரு வெள்ளிக்கிழமை எனக்குள்ள தோணித்து எங்களுக்கு ஒரு கொழந்தை இருந்திருந்தா இப்படில்லாம் வாழ்க்கை மாறியிருக்காதோன்னு. அதுக்கு ப்ரச்னத்துல சொல்றா மாதிரி அன்னிக்கே பதிலும் சொல்லிட்டா ‘மூணு சோழிகள் கவிழ்ந்துருக்குன்னா. நமக்கு இந்த ஜன்மத்துல குழந்தை கிடையாதுன்னா’.

ஊர்ல மெதுமெதுவா எல்லாருக்கும் அவள் ஒரு கடவுளா உருமாற ஆரம்பிச்சா. எல்லா நல்லது கெட்டதுக்கும் அவளோட அபிப்ராயம் முக்யமாப் போயிடுத்து. அவளும் எத்தனைக்கெத்தனை கோயில் குளம்ன்னு இல்லாம விலகி தனக்குள்ளயே கடவுளை தரிசிச்சிண்டிருந்தாளோ அதுமாறிப்போய் எல்லாக் கோயில் பண்டிகைகள்லயும் அவளுக்கு முக்யமான இடம் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. அவளையும் அறியாம அவ போற பாதை பொறந்திண்டிருந்தது.

-----------------------------------------------------

அன்னிக்கு ஞாயித்துக் கிழமை. சாயங்காலமா ராகு காலத்துக்கு முன்னாடியே வாய்க்காலுக்குப் போய் களையெடுக்கறதுக்கு ஆள் அம்பு சேனையெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு ஆத்துக்கு வந்து சேந்தேன். வெளக்கு வெக்கற நேரம். வாசல் திண்ணைல ஒரே கூட்டம். களையெடுக்கற பொண்ணுங்களோட லக்ஷ்மி உக்காந்துண்டு ஏதோ வம்பளந்துண்டு இருக்கா. எல்லாம் மாமி மாமின்னு அவளை மொச்சுண்டு இருக்கு. என்னடான்னு பாத்தா எல்லாருக்கும் மருதாணி இட்டுவிட்டுண்டிருக்கா.

என்ன லக்ஷ்மி? அவா நாளக்கிக் களையெடுக்கப் போகவேணாமா? கையெல்லாம் இப்பிடி மருதாணி அப்பிவிட்டிண்டிருக்கன்னு கேட்டா ’நம்ப முதன்மந்திரி நாளைக்குக் காலமாயிடுவார்னு தோணித்து.அவா வேலைக்கிப் போகமுடியாதுன்னுதான் மருதாணி இட்டுவிட்டுண்டிருக்கேன்னா’ங்கறா. எனக்கு தூக்கி வாரிப் போடறது. என்ன இப்பிடிப் பேசறான்னு உதறல். ராத்திரில்லாம் சரியாத் தூங்கலை. அவ என்னடான்னா தூக்கத்துலயும் சிரிச்ச முகமா எந்தச் சலனமும் இல்லாம தூங்கிண்டிருக்கா.

கார்த்தால எந்திருந்தா ரேடியோல சொல்றா அண்ணாத்துரை காலமாயிட்டார்னு. அவர் இறந்துபோயிட்டாரேங்கற அதிர்ச்சிய விட எனக்கு என்னோட லக்ஷ்மி என்னை விட்டு ரொம்ப தூரம் விலகிப்போயிட்டாளோங்கற சோகம்தான். கேட்டா துளசிக்கு கார்த்தால ஜலம் விடறப்ப தென்னைமரத்துலேருந்து மட்டை ஒண்ணு விழுந்தது. அப்போ எனக்குள்ள இந்த வார்த்தைகள் அசரீரியாக் கேட்டுதுங்கறா. அவ சொன்னா மாதிரியே அந்தத் திங்கக்கிழமை களையெடுக்க முடியல.

--------------------------------------------------------

(தொடரும்)

18 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

http://4.bp.blogspot.com/-EHPkXFXiNXo/T9AexWn5omI/AAAAAAAAAv4/CGbVMYN-0d8/s1600/Shield.jpg

அன்புள்ள சுந்தர்ஜி...

இந்த வார நாவல் அத்தியாயத்திற்காக உங்களுக்கு ஒரு விருது என் வலைப்பக்கத்தில் உள்ளது. அன்புடன் அதனைப் பிரதியெடுத்து உங்கள் வலைப்பக்கம் சேர்க்கவும். வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

அன்பு ஹரணி-

நள்ளிரவில் இதை எழுதிமுடித்துத் தூங்கச்சென்றபோது 12.30.

அதிகாலையில் எந்த வீட்டுக்கதவை என் எழுத்து தட்டவேண்டுமோ அந்தக் கதவைச் சரியாகத் தட்டியிருக்கிறது.

நாவலின் போக்கை உங்களின் அங்கீகாரம் கவனித்தில் கொள்ளும்.

எழுதிய சோர்வு உதிர்ந்து போனது உங்களால். நன்றி என் நண்பனே.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அவளும் எத்தனைக்கெத்தனை கோயில் குளம்ன்னு இல்லாம விலகி தனக்குள்ளயே கடவுளை தரிசிச்சிண்டிருந்தாளோ அதுமாறிப்போய் எல்லாக் கோயில் பண்டிகைகள்லயும் அவளுக்கு முக்யமான இடம் கொடுக்க ஆரம்பிச்சுட்டா. அவளையும் அறியாம அவ போற பாதை பொறந்திண்டிருந்தது.

தங்கமான பாதை !

ரசிக்கவைத்த கதைக்குப் பாராட்டுக்கள் !

G.M Balasubramaniam சொன்னது…

எழுதுவதற்கு என்று வரப்பு கட்டிக்கொண்டு, ஒரு கட்டுப்பாட்டிற்குள் எழுதுவதைவிட ஆங்கிலத்தில் சொல்லும் LATERAL எண்ணத்தில் உள்ளத்தில் தோன்றுவதை உணர்ச்சிப் பிழம்புகளுக்கு உயிர் கொடுத்து எழுதும் போது உண்மையிலேயே உங்கள் எழுத்து ஜொலிக்கிறது. வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

அவளுக்கோ இந்தக் கோயில் பூஜை புனஸ்காரங்கள் இந்த மாதிரி விஷயங்களில்லெல்லாம் அத்தனை ஈடுபாடு கெடையாது. அதுக்காக அவ நம்பிக்கை இல்லாத ஜாதியும் கிடையாது. எதாவது கஷ்டம்னு வந்துட்டா வாயாற ஹே அம்பிகே என்ன ஏன் சோதிக்கறடியம்மா?ன்னு நேரடியா ஹாட்லைன்ல பேசிக்கற ஜன்மம். எல்லாம் சரியா ஓடிண்டிருந்தா உள்ளுக்குள்ளேயே உபாசனை எல்லாம் இருக்கும். ஆனா சொன்னா தப்பா எடுத்துக்கலன்னா சொல்றேன். அவ பாக்றதுக்கு நேரே அம்பாளே ப்ரத்யக்ஷம் ஆனா மாதிரிதான் இருப்பா. //


soundharya upasanai..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி இராஜராஜேஸ்வரி.

உங்களைப் போன்ற ரசனை மிக்கவர்களின் ஆழ்ந்த ரசனையால்தான் எழுத ஆசை பிறக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பாலு சார்.

எனக்கென்னமோ நான் எழுதத் துவங்கும்போதெல்லாமே மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவே இருப்பேன். எழுதி முடிக்கும்வரை இல்லாத அயர்ச்சி எழுதி முடித்த பின் என்னால் உணரப்படுவது அதனால்தானோ என்னவோ?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன்.

அலுவலகத்தில் இருந்து எழுதப்பட்ட பின்னூட்டமும் அதே அலுவலக தொனியில் இருப்பதாய் உணர்ந்தேன்.

ஆனாலும் படித்தவுடன் எழுதத் தோன்றிய உங்களின் ஆர்வம் அலாதியானது. எல்லோருக்கும் கை வராதது.

அப்பாதுரை சொன்னது…

உணர்ச்சிக்கு அப்பால் உணர்வுகளைக் கிளறி ஒரு தனி உயரத்த்துக்குக் கொண்டு போகிறது நடை.
(பூசணிக்காய்க்காய்க்கு எத்தனை கீத்துனு எப்படிக் கண்டுபிடிப்பது? அதுக்கு ஏதாவது பாட்டிருந்தா சொல்லுங்கோ)

சிவகுமாரன் சொன்னது…

ஒரு சிறுகதை என்று தான் நினைத்தேன் முதலில்.
என்ன அழகான சொக்க வைக்கும் நடை.
எங்கோ போய்விட்டீர்கள்

சுந்தர்ஜி சொன்னது…

வாங்கோ அப்பாஜி! என்னடா காணுமேன்னு மனசு ஏங்கித்து.

பூசணிக்காயோட வெளிப்புறம் பார்த்தாலே வரை வரையா அதோட ஃப்ரேம் தெரியும்.அதை ஒண்ணு ரெண்டு மூணுன்னு எண்ணினா எத்தனை கீத்துன்னு தெரிஞ்சுடும்.

இன்னும் நிறைய நம்ம முன்னோர்கள் மனக்கணக்கா போட்ட சிக்கலான கணக்குகள்லாம் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் சுவடிகள்ல இருக்கு அப்பாஜி.

எல்லாத் துறைகள்லயும் நாம போன தூரம் யாராலயும் நெனச்சுக்கூட பார்க்கமுடியாதது.இந்த நாவல்ல முடிஞ்ச் வரைக்கும் சொல்ல முயற்சிபண்றேன் அந்த வாக்தேவியோட துணையால.

சுந்தர்ஜி சொன்னது…

மிக்க நன்றி சிவா.

உங்களைப் போல் எழுதத் தெரிந்தவர்கள் படிக்க நேரம் வாய்த்து ரசிகனா ரெண்டு வரி சொல்வது பரம சந்தோஷம்.

நேரம் கிடைக்கும் போது படித்துக் கருத்துச் சொல்லுங்க.

மோகன்ஜி சொன்னது…

என் ப்ரிய சுந்தரா! அந்த சுவற்றில் ஒட்டியிருந்து நிகழ்வையெல்லாம் உறுத்து பார்த்த வண்ணம் இருந்த பல்லி நீர் தானா? கண்டதை விண்ட சாட்சியாய் கதையுரைத்தீரோ?

இன்னுமொன்று! நான் எப்போதோ எழுதியதை மீண்டும் படித்த பாந்தம் எனக்குள் தோன்றியது. அதுவே இந்த ஆக்கத்தின் வெற்றி.

என்னை நானே புகழ்ந்து கொள்வதில் என்ன சுகம் சுந்தர்ஜி! நிறைய எழுதும்... என் புளகம் யாரறிவார்?

சுந்தர்ஜி சொன்னது…

கண்கள் பனிக்கப் பனிக்க உங்கள் வார்த்தைகளை சேகரித்துக் கொள்கிறேன் குரு.

உங்க பக்கத்துல என்னை உக்காத்திக்கறதுக்கு எத்தனை பெரிய மனசு வேணும்? அந்த குணத்தையும் யாசிக்கிறேன் மோஹன்ஜி.

ஆனாலும் முன்னமே நான் சொன்னது சொன்னதுதான்.

என் எதிர்காலம் நீங்க. உங்க கடந்த காலம் நான்.

நேரம் கிடைக்கும்போது வாசிச்சுடுங்கோ. மானசீகமா நீங்க என்னை வாசிக்கறேள்ங்கற நினைப்பிலேயே எழுதிண்டு போயிண்டிருக்கேன் நான்.

அப்பாதுரை சொன்னது…

இவ்வளவு நாள் இது தெரியாம பூசணிக்காய் சாப்பிட்டிருக்கேன் பாருங்க..!
ஒரு தடவையாவது சரஸ்வதி மஹால் பெரிய கோவில் இரண்டும் பார்த்துவிட வேண்டும்.

அப்பாதுரை சொன்னது…

அன்னிக்கே படிச்சாச்சு சுந்தர்ஜி.. மெள்ள அசை போட்டு அசை போட்டு..

Matangi Mawley சொன்னது…

"தக்ஷிணாயனம்" 1 -6 இன்னிக்கு தான் படிக்க முடிஞ்சது.

Narration is just fabulous! Narrator இன் கணங்களை, படிக்கும் நான் கடன் வாங்கிக் கொண்டு பார்ப்பது போன்ற உணர்வு! திருவண்ணாமலை அகர்பத்தி மணம்/ அலெக்சாண்டர் டுமா வாழும் அறை மற்றும் லக்ஷ்மி அம்மாவிற்கு மட்டுமே புரிந்த பல்லியின் மொழியைக் கூட கதை படிக்கும் எனக்குப் புரிய வைக்க விட்டது இந்த narration!

----"மனதில் ஏதோ அறிகுறிகள் தென்பட போன வாரம் ஒருநாள் மாலையில் அவருடைய வீட்டுக்குப் போர்வையை எடுத்துக்கொண்டு போனேன். அவர் மனைவியிடம் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்த அவர் மேல் அந்தப் போர்வையைப் போர்த்திவிடும்படியும், அவரை இனி எழுப்பவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். மறுநாள் காலையே அவர் இறந்துவிட்டதாகத் தந்தி வந்து சேர்ந்தது."----

இதைப் படிக்கும் போது ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. 9th std (2000-01). அன்றைக்கு நான் schoolகு போகவில்லை. மறுநாள், சில பேர், "நேத்திக்கி நீ miss பண்ணிட்ட! அகிலா miss superb ஆ எடுத்தாங்க!" என்றார்கள். "அதனால என்ன... next week உம் ராஜி miss வரமாட்டாங்க... அகிலா miss தான் வருவாங்க... அப்போ attend பண்ணிக்கலாம்... எங்க போகப் போறாங்க"? என்றேன்... அடுத்த வாரம் அகிலா miss இல்லை...

Sometimes the writer wants to convey something. But the reader interprets/or rather is shown something so unique that the reader fails to notice anything else. This was one such story!

Amazing series!!

ரேவதி வெங்கட் சொன்னது…

great writing ji!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...