7.6.13

மே ஃகயால் ஹூம் கிஸி ஓரு கா - யாருடைய கற்பனையிலோ நானிருக்க.....

இந்தியா இரண்டாகப் பிரிந்த 1947ல் பானிப்பட்டில் பிறந்த சலீம் கௌஸர், இன்றைய மிகச் சிறந்த உர்தூக் கவிஞர். அவர் தன்னுடைய மிகப் பிரபலமான மே கயால் ஹூம் கிஸி ஓர் கா என்கிற கஸலை ஒரு முஷைராவில் வாசிக்கும் வீடியோக் காட்சியிது. அவரின் உர்தூ உச்சரிப்பு அந்த மொழி தெரிந்தவர்கள் மட்டுமன்றித் தெரியாதவர்களுக்கும் கூடத் தேன் போலக் காதில் பாய்கிறது. 

பாரதி சொல்லுவான்- சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்க வேண்டுமென்று. ஆனால் அவன் ஒருவேளை உர்தூக் கவிதைகள் வாசிக்கப்படுவதைக் கேட்டிருந்தால், தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கக் கூடும். கீழேயுள்ள இணைப்பில் சலீம் கௌஸர் ஒரு கவிஞராக வாசிக்கும் கவிதை மொழிபெயர்ப்புக்குப் பின் எப்படி ஆன்மாவை உலுக்கும் அநுபவத்தைத் தருகிறது என்பதை உணர்ந்து ரசியுங்கள்.  
Main Khayaal Hun Kisi Aur Ka Mujhe Sochtaa koi aur hai
யாருடைய கற்பனையிலோ நானிருக்க
யாரையோ கற்பனை செய்தபடி இருக்கிறேன் நான்.

Sar-E-Aeenah Mera Aks Hai Pas-E -Aeenah Koi Aur Hai
வேறேதோ கண்ணாடி என்னைப் ப்ரதிபலிக்க்
என் கண்ணாடியில் வேறு யாருடைய ப்ரதிபலிப்போ

Main Kisi Ke Daste Talab Main Hoon, To Kisi Kay Harf-E -Dua Main Hoon
யாரோ ஒருவரின் விருப்பத்தின் கைகளில் நான்
யாரோ ஒருவரின் ப்ரார்த்தனைகளின் சொற்களாக நான்

Main Naseeb Hoon Kisi Aur Ka Mujhe Maangata Koi Aur Hain
யாரோடோ விதி என்னை இணைத்திருக்க
யாரோ எனைவேண்டிக் கெஞ்சியபடிக் கழிகின்றன நாட்கள்

Ajab Aitabar-O-Bey Aitabaree, Keh Darmayan Hai Zindagi
வாழ்க்கையோ நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும்
நடுவே தவிக்கிறது

Main Qareeb Hoon Kisi Aur Ke Mujhe Janataa Koi Aur Hain
யாரோ ஒருவருக்கு நெருக்கமாக நானிருக்கிறேன்
ஆனால் வேறு யாரோ என்னை நன்கறிந்தவராய் இருக்கிறார்கள்

Meri Roshni Teri Khaddo-Khaal Se Mukhtalif To Nahin Magar
என்னுடலின் ஜொலிப்பும் உன் கன்னத்து மச்சமும் வேறானதல்ல எனினும்

Tu Qareeb Aa Tujhe Dekh Lun Tu Whohi Hain Ya Koi Aur Hain
அருகே வா அது நீதானா அல்லது வேறு யாருமா என்று பார்க்கவேண்டும்

Tujhe Dushmanon Ki Khabar Nati, Mujhey doston ka pata nahi
நீயோ உன் எதிரிகளை அறிந்திருக்கவில்லை; நானோ என் நண்பர்களை அறிந்திருக்கவில்லை

Teri Daastan Koi Aur Thi, Mera Waaqaya Koi Aur Hai
உன் கதையில் வேறு யாரோ இருக்க, என் நிஜத்தில் வேறு யாரோ இருக்கிறார்கள்

Wohi Munsifon Ki Rwaayaten Wohi Faisalon Ki Ibaaraten
அந்த நீதிபதிகளின் விசாரணைகளும் தீர்ப்பும் ஒருபுறமிருக்க

Mera Jurm To Koi Aur Tha Par Meri Sazaa Koi Aur hain 
என் குற்றம் வேறேதோ அதற்கான தண்டனையும் வேறேதோ 

Kabhi Laut Aayen To Na Poochna, Nahin Dekhnaa Onay Ghaur Se
Jinhen Raaste Main Khabar Hoyi Ki Yain Raasta Koi Aur hain
வேறெங்கோ பாதை இருக்க, இதுவல்ல போகும் பாதை என்றுணர்ந்தவனை 
நீ சந்திப்பாயானால் அவனிடம் எதுவும் கேட்பதோ வலிந்து உற்றுப் பார்ப்பதோ வேண்டாம்

Jo Meri Riyaazat-E-Nim Shab Ko Saleem Subho Na Mil Saki 
என் நள்ளிரவுப் ப்ரார்த்தனைகளின் பலனும் உதயத்தில் கிட்டாதபோது

To Phir Is Ke Mahni Yain Hoye Ke Yahaan Khudaa Koi Aur Hain 
வேறு யாரோ ஒருவரே கடவுளாய் இருக்கக்கூடுமோ?

#########

சலீம் கௌஸரின் உர்தூவுக்கு இணையாக என் மொழிபெயர்ப்பு இருக்கமுடியாது. அது தவிர அரைகுறை ஹிந்தி ஞானம், ஒரு ஆஃப்கன் ப்ளாக்கில் கிடைத்த அரைகுறை ஆங்கில் மொழிபெயர்ப்பையும் படித்துக் கிடைத்த லாகிரியில் செய்த முயற்சி இது.

இந்த கஸலை கீழே பிரபலமான பல கஸல் பாடகர்கள் பல உருவங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். இசையும் பொருளும் உச்சரிப்பும் வதைக்கிறது.   
நஸ்ரத் பஃடே அலி காஃன்.
மனதைத் துளைக்கும் சாரங்கியுடன், முன்னி பேகம் பாடும் இந்தப் பாடல் ”கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்” பாடலை மோஹன ராகத்தின் நிறங்களுடன் நினைவு படுத்துகிறது.
ஜகஜித்சிங்
ஹரிஹரன்
லலித் ராகத்தில் மெஹதி ஹஸன் பாடுகையில் கண்கள் பனிக்கின்றன.
மெஹதி ஹஸனின் மகன் தரீக் ஹஸன்.

நேரம் வாய்க்கும்போது, பொறுமையாய்க் கேட்டுவிட்டுக் கடந்து செல்லுங்கள். உங்கள் காலடியில் சமர்ப்பிக்கப்படும் இவை அத்தனையும் பொக்கிஷங்கள்.

3 கருத்துகள்:

Anonymous சொன்னது…

உண்மையிலேயே பொக்கிஷம்தான். ஆழ்ந்து ரசித்தேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆம் அய்யா. பொக்கிஷங்கள்தான். நன்றி

அப்பாதுரை சொன்னது…

சலீமின் கவிதையில் தெரிந்த ஜீவனைத் தடவிக் கொடுத்து வளர்த்திருப்பவர் முன்னி பேகம் மட்டுமே என்று தோன்றுகிறது. இப்போது தான் அவரை முதன் முதலாகக் கேட்கிறேன். என்னா குரல் சாமி!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...