குமரகிரி வேம ரெட்டிதான் 'வேமனா' என்ற புகழ் பெற்ற, 14ல் இருந்து 17ம் நூற்றாண்டிற்குள் முடிவுக்கு வர இயலாத காலத்தைச் சேர்ந்த தெலுங்கு மஹாகவி.
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் ரெட்டியார் குலத்தில் பிறந்த யோகி வேமனா ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றியவர். எல்லோருக்கும் புரியும்படியான உவமை, எளிமையான மொழி, ஆழமான கருத்து இவைதான் வேமனாவின் ஆயுதங்கள். கொச்சையான, புரியும்படியான தெலுங்கில் இருப்பதால் லக்ஷோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், பாமரர் பேதமற்று அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் பழமொழியாக, வசனங்களாக, சொலவடைகளாகப் புழக்கத்தில் இருக்கின்றன வேமனாவின் எழுத்துக்கள்.
பெரும்பாலான செய்யுள்கள் இரட்டை வரிகளிலும், மற்றொரு பெருந்தொகுப்பு நான்கு வரிகளிலும் அமைந்திருக்கின்றன.
சுவைக்கச் சில உதாரணங்கள்-
"உன் இதயத்தில் உயிரோடு வசிப்பவனை, எங்கோ சென்று கல்லில் தேடாதே. அவன் உயிரில் இல்லாமல் கல்லிலா இருக்க விரும்புவான்?"
"உள்ளே மண்டிக்கிடக்கும் அழுக்கை அகற்றாமல், உடலை வாட்டி வதைத்து யோகியாவது, பாம்பைக் கொல்லப் பயந்து அதன் புற்றைக் இடித்துக் கலைப்பதைப் போல."
"இறைவா, உன்னை தரிசிக்கையில் நான் தொலைகிறேன். என்னையே நினைக்கையில் உன்னைத் தொலைக்கிறேன். ஆற்றில் ஒருகாலும், சேற்றில் ஒருகாலுமாக இன்றி, உன்னையும் என்னையும் ஒரு சேர நான் எப்போது காண்பேன்?"
"எவன் ஒருவன் மிகுந்த சிரமத்துடன் தானியத்தைப் பொறுக்கி வந்து, களைந்து, இடித்து, பொடித்து, சமைத்துப் பசியால் சோர்ந்தவனுக்கு சிறிதளவேனும் உணவளிக்கிறானோ, அவனைச் சிவன் என்றால் தவறா"?
19ம் நூற்றாண்டின் சி.பி. ப்ரௌன் என்னும் ப்ரிட்டிஷ் ஆராய்ச்சியாளரால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.
ஆயிரத்துக்கும் மேலான அவரின் சிந்தனைகளை http://www.sacred-texts.com/hin/vov/ என்னும் முகவரியில் ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம்.
அவரின் சிந்தனைகள், சுபாஷிதம் 19ஐ அலங்கரிக்கின்றன.
361.
உப்பு கப்புரம்பு நொக்க போலிக நுண்டு
சூட சூட ருசுலு ஜாட வேரு
புருஷுலண்டு புண்ய புருஷுலு வேரயா
விஷ்வதாபிராம வினுர வேமா
பார்வைக்கு உப்பும், கற்பூரமும் ஒன்றாய்த் தோன்றினாலும் சுவையில் அவை வெவ்வேறானவை. அதுபோலவே மக்கள் அனைவரும் ஒன்றாகவே கண்ணுக்குத் தெரிந்தாலும், தம் குணத்தால் சான்றோர் தனித்திருப்பர்.
362.
அனுவு கானி சோட அதிகுலமனராது
கொஞ்செமைன நதியு கொடுவ காது
கொண்ட யத்தமண்டு கொஞ்சமை யுண்டதா
விஷ்வதாபிராம வினுர வேமா
காலமும் இடமும் நம்முடையதாய் அல்லாத போது, அடையும் தோல்வியால் சிறுமை அடையத் தேவையில்லை. அது மலை கண்ணாடிக்குள் பிம்பமாய்ப் ப்ரதிபலித்தல் போலத்தான்.
363.
அனகனனக ராக மதிஷயில்லுச்சுனுண்டு
தினக தினக வேமு திய்யனுண்டு
சாதனமுன பனுலு சமகூரு தரலோன
விஷ்வதாபிராம வினுர வேமா
பாடப் பாட ராகம் சிறக்கும்; தின்னத் தின்ன வேம்பும் இனிக்கும். பயிற்சியால் அனைத்தும் நேர்த்தியடைகின்றன.
364.
இனுமு விரிகெநேனி இருமாறு மும்மாரு
காச்சி யடகவச்சு க்ரமமு கானு
மனசு விரிகெநேனி மரி சேர்ச்சராதயா
விஷ்வதாபிராம வினுர வேமா
இரண்டு மூன்று முறை உடைந்தாலும் இரும்பை மீண்டும் இணைத்து விடலாம். ஒருமுறை உடைந்த மனதை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது.
365.
ஆத்மஷுத்தி லேனி ஆசாரமதி ஏலா
பாண்டஷுத்தி லேனி பாகமேலா
சித்தஷுத்தி லேனி ஷிவ பூஜலேலரா
விஷ்வதாபிராம வினுர வேமா
ஆன்மா தூய்மையாய் இன்றி சடங்குகளால் என்ன பயன்?தூய்மையற்ற பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவால் என்ன பயன்? சிந்தனை தூய்மையாய் இன்றி செய்யப்படும் சிவ பூஜையால் என்ன பயன்?
366.
கங்கி கோவு பாலு கரிடடைனனு சாலு
கடிவேடைனநேமி கரமு பாலு
பக்தி கலுகு கூடு பத்தெதைனனு சாலு
விஷ்வதாபிராம வினுர வேமா
ஒரு பானை கழுதைப் பாலிருந்தும், ஒரு கரண்டி புனிதமான பசும் பால் மேலானது. அன்புடன் அளிக்கப்படும் சிற்றுண்டி நிறைவான விருந்துக்குச் சமம்.
367.
அல்புடெப்புடு பல்கு ஆடம்புரமு கானு
சஜ்ஜனுண்டு பல்கு சல்லகானு
கஞ்சு மோஹினட்லு கனகம்மு ம்ரோகுனா
விஷ்வதாபிராம வினுர வேமா
இரைந்த படாடோபப் பேச்சு கீழோருக்குரியது; மென்மையான பேச்சு மேலோருக்கானது. வெண்கலம் எழுப்பும் ஓசையைப் பொன் எழுப்புவதில்லை.
368.
ஆபதன வெளனரசி பந்துல சூடு
பயமுவெள ஜூடு பந்து ஜனமு
பீதவேள ஜூடு பென்ட்லமு குணமு
விஷ்வதாபிராம வினுர வேமா
சோதனைக் காலத்தில் சுற்றத்தை அறியலாம்; ஆபத்துக் காலத்தில் படையின் குணமறியலாம்; வறுமையுற்ற காலத்தில் மனைவியின் குணத்தை அறியலாம்.
369.
சிப்பபத்த ஸ்வாதிசினுகு முத்யம்பய்யே
நீதபத்த சினுகு நீத களிசே
ப்ராப்தி கலுகு சூட பலமேல தப்புரா
விஷ்வதாபிராம வினுர வேமா
ஸ்வாதி நாளில் சிப்பியில் விழும் மழைத்துளி முத்தாகிறது; நீரில் விழும் மழைத்துளி நீரோடு கலக்கிறது; ஒருவனுக்கு எது கிடைக்க வேண்டிய பலனோ, அது கிடைக்காமல் போகாது.
370.
வேஷபாஷலெரிகி காஷாயவஸ்த்ரமுல்
கட்டகானி முக்தி கலுகபோது
தலலு பொதுலின தலபுலு பொதுலா
விஷ்வதாபிராம வினுர வேமா
தோற்றத்தையும், மொழியையும் மாற்றிக் கொண்டு , காவியுடை தரிப்பதால் வீடுபேற்றை அடைய முடியாது. சிகையை மழிப்பதால் சிந்தனையை மழிக்க முடியாது.
371.
செப்புலோன ராயி செவிலோன ஜோரீக
கண்டிலோன நலுசு காலி முல்லு
இன்டிலோன போரு இன்டிண்ட காதயா
விஷ்வதாபிராம வினுர வேமா
காலணியில் அகப்பட்ட கல்; காதருகே ரீங்கரிக்கும் ஈ; கண்களில் தூசு; பாதத்தில் முள்; இல்லத்தின் சச்சரவு இவை அனைத்தும் வலி மிக்கவை.
372.
தப்புலென்னுவாரு தண்டோப தண்டம்பு
லுர்வி ஜனுலகெல்ல நுண்டு தப்பு
தப்பு லென்னுவாரு தமதப்பு லெருகரு
விஷ்வதாபிராம வினுர வேமா
பிறரின் குற்றம் காண்பவர் அநேகருண்டு; இந்த உலகில் குறையற்றோர் யாருமிலர். பிறர் குற்றம் காண்பவர் தம் குற்றம் காண்பதில்லை.
373.
மேடி பண்டு சூட மேலிமையுண்டு
பொட்ட விப்பி சூட புருகுலுண்டு
பிரிகி வானி மதினி பிங்கமீ லாகுரா
விஷ்வதாபிராம வினுர வேமா
வெளியே பார்க்க கவர்ச்சியாய் இருக்கும் அத்திப் பழம், உட்புறம் புழுவால் நிரம்பியிருக்கும். அதுபோலக் கோழைகளும் பார்க்க தைரியசாலி போல் ஆணவமாய்த் தோற்றமளிப்பர்.
374.
எலுகா தோலு தெச்சி ஏதாடி உதிகினா
நலுபு நலுபே காணி தெலுபு காது
கொய்ய பொம்ம தெச்சி கொட்டினா பலுகுமா
விஷ்வதாபிராம வினுர வேமா
எலியின் தோலை எத்தனை முறை தோய்த்தாலும், கறுப்பு நிறத்தை வெளுப்பாக்க முடியாது. மரப்பாச்சி பொம்மையை எத்தனை முறை அடித்தாலும், அதைப் பேச வைக்க முடியாது.
375.
ராமுடொக்கடு புட்டி ரவிகுலமிதேர்சே
குருபதி ஜனியின்ச்சி குலமு ஜெரிசெ
இலனு புண்யபாப மீலாகு காடகோ
விஷ்வதாபிராம வினுர வேமா
ராமனின் பிறப்பால் சூர்ய வம்சம் துலங்கியது; துரியோதனின் பிறப்பால் கௌரவர் வம்சம் அழிந்தது. நல்வினை, தீவினையின் பலன்கள் இவ்வகையானதுதான்.
376.
வேரு புருகு சேரி வ்ருக்க்ஷம்பு செரசுனு
சீத புருகு சேரி செட்டு செரசு
குட்சிதுண்டு சேரி குணவன்ட்டு செரசுரா
விஷ்வதாபிராம வினுர வேமா
வேர்ப்புழு வேர்களை அரித்து முழு மரத்தையும் வீழ்த்துகிறது; கரையான் முழு மரத்தையும் அரித்துச் சாய்க்கிறது. அதுபோல தீய குணம் மிக்கவர்கள் நற்குணமுள்ளவர்களைக் கெடுக்கிறார்கள்.
377.
பாலுநீரு கலிபி பசிடி கம்முனருடு
வாணி வேரு ஜேயு பக்ஷியொகடி
அரய நருலுகன்ன நாஹம்ஸயேமின்ன
விஷ்வதாபிராம வினுர வேமா
பாலில் நீரைக் கலந்து விற்றுத் தங்கமாக்குகிறான் மனிதன்; பாலில் இருந்து நீரைப் பிரிக்கும் பறவை ஒன்றுண்டு. மனிதனிலும் பார்க்க அன்னம் மேன்மையானது.
378.
நீள்ளலோன மீனு நிகிடி தூரமு பாரு
பைட்ட மூரெதைன பாரலேது
ஸ்தானபல்மிகானி தனபல்மி காடயா
விஷ்வதாபிராம வினுர வேமா
எத்தனை தொலைவானாலும் நீரில் மீன் விரைவாய் நீந்த இயலும். அதே மீனால் நிலத்தில் ஓரடி கூட நீந்த முடியாது. அது மீன் இருக்கும் இடத்தின் தன்மையால் அன்றி, மீனின் திறமையால் அல்ல.
379.
தனுவுலஸ்திரமனி தனமுலஸ்திரமனி
தெலுபகலது தானு தெலியலேது
செப்பவச்சு பனுலு சேயுடே தெலியலேது
விஷ்வதாபிராம வினுர வேமா
'உடல் நிலையற்றது; செல்வம் நிலையற்றது'; இதை உணராமல் உபதேசிப்பது மிக எளிது. உணர்ந்து பின்பற்றுதல் மிகக் கடினம்.
380.
வான குரியகுன்ன வச்சுனு க்ஷாமம்பு
வானகுரிசெநேனி வரத பாரு
வரத கரவு ரெண்டு வருசதோ நெருகுடீ
விஷ்வதாபிராம வினுர வேமா
மழை பொய்த்தால் பஞ்சம்; மழை மிகுந்தால் வெள்ளம். வெள்ளமும், பஞ்சமும் ஒன்றையொன்று தொடர்ந்தே வரும்.
[கேள்வி ஞானத்தாலும், உள்ளுணர்வாலும் தெலுங்கின் மூல செய்யுட்களை எழுதியிருக்கிறேன். குற்றம் இருப்பின் மன்னியுங்கள். திருத்திக் கொள்கிறேன்.]
4 கருத்துகள்:
அற்புதம்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
"உள்ளே மண்டிக்கிடக்கும் அழுக்கை அகற்றாமல், உடலை வாட்டி வதைத்து யோகியாவது, பாம்பைக் கொல்லப் பயந்து அதன் புற்றைக் இடித்துக் கலைப்பதைப் போல."
அருமை...
அழகான பகிர்வு...
வாழ்த்துக்கள்.
எளிமையான வார்த்தைகளில் ஆழமான கருத்துக்கள் ஐயா. அறியத் தந்தமைக்கு நன்றி ஐயா
முன்பு ஹைதராபாத்தில் இருந்தபோது 'வேமனபத்யம்' படித்தேன். நாலடியார் மாதிரி நறுக்கென்று தெறிக்கும் வரிகளும் கருத்தும். திடீரென்று தங்கள் தளத்தில் இன்று படிக்கக்கிடைத்தது. அழகிய மொழிபெயர்ப்பு. மிக்க நன்றி.
கருத்துரையிடுக