1.5.11

அதன் ப்ரஹாரம்




















இல்லாத சோறெடுத்துத்
தன் குழந்தைக்கு
வறுமையை ஊட்டிடுவாள்
நொண்டிப்
பிச்சைக்காரி.

வௌவால் இடும்
புழுக்கையையும்-

காற்றுடன் மோதும்
வெளிச்சத்தையும்-

தாங்கிக்கொண்டு
வேர்வையோடு
முறைப்பார்

தக்ஷிணாமூர்த்தி
தினந்தோறும்.

தெருப்பயல்கள்
த்வம்சித்த
சொறிநாயொன்று

ஒளிந்துகொள்ள
இடம் தேடும்
அதிகாரநந்தியின்
பின்னே.

தான் செய்த
நைவேத்யத்தைத்

திருட்டுத்தனமாய்
ருசிபார்ப்பான்
பக்ஷிராஜன்

மடப்பள்ளிக்கும்-

கை அலம்பும்
கிணற்றிற்கும்-
தெரியாமல்.

சந்தனக் காப்பிட்ட
மூலவருக்குக்

கற்பூரம் கொண்டு
குருக்கள்
முகம் காட்ட

ப்ரஹாரம் தெரியும்
ப்ரகாசமாய்.

கணையாழி-அக்டோபர், 1986.

என் 20ம் வயதில் ப்ரசுரமான எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. எனக்கு மிகவும் த்ருப்தி அளித்த- ஒரே தடவையில்- திருத்தமில்லாமல் எழுதப்பட்ட கவிதை.

அந்த இதழில் விக்ரமாதித்யன்,என் நண்பன் பொன்.சந்தானகிருஷ்ணன்(மதுமிதா),உமாமகேஸ்வரி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

ப்ரகாஷ் படித்துவிட்டு இதை எல்லோரிடமும் காட்டி தமிழுக்கு இன்னொரு ப்ரமாதமான கவிஞன் ரெடி அய்யா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டது நினைவிலுண்டு.

1989க்குப் பின்னால் எழுதுவதையே நிறுத்திவிட்டு அவர் சொன்னதை நிரூபிக்காமல் ஒதுங்கிவிட்டேன். இப்போது வரையிலும் நான் வருந்தக்கூடிய ஒரே தவறு என்று இதைச் சொல்வேன்.

மறுபடியும் தஞ்சாவூர்க்கவிராயருடன் மீட்கப்பட்ட என் உறவு 2009 பெஃப்ருவரிக்குப் பின் என்னை எழுத வைத்தது.

என்னை மீட்டெடுத்துக்கொடுத்த த.க.வுக்கும் தூண்டுதலாய் இருந்த மறைந்த புத்தகன் செல்லத்துரை கவிஜீவன் முதலியோருக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.

வேர்களுக்கு நீர்விட்டும் வளராது பட்டுப்போய்விட்டதே இந்தக் கொடி என்று வருத்தத்துடன் மறைந்த தஞ்சை ப்ரகாஷுக்கு என் கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.

14 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அதன் ப்ரஹாரம்; இருட்டில் நடக்கும் விஷயங்கள் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன அன்று.

இன்றோ கற்பூரம் காட்டப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதால் எல்லாம் இருட்டினில்.

அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பாராட்டுக்கள் !

Ramani சொன்னது…

தாங்கள் நகைப் பெட்டிக்குள் இருக்கும்
ஆபரண்ங்களை சாதாரண்மாக எடுத்துப் போடுகிறீர்கள்
நாங்கள் படித்து மலைத்துப் போகிறோம்
தொடர்ந்து பொக்கிஷங்களைக் காண ஆவலாக உள்ளோம்
(நானாக பிரகாரத்திற்கும் தெரியும் க்கு இடையில்
ஒரு மட்டும் மட்டும் சேர்த்துப் பார்த்தேன்
பிரகாரம் இன்னும் ப்ரகாசமாக தெரிந்தது)

A.R.ராஜகோபாலன் சொன்னது…

இல்லாத சோறெடுத்துத்
தன் குழந்தைக்கு
வறுமையை ஊட்டிடுவாள்
நொண்டிப்
பிச்சைக்காரி.

மனதில் அறையும் வார்த்தைகள்
அந்த இளைய வயதில் நடக்கும் நிலவே .....................
என காதலாய் எழுதுபவர்கள் மத்தியில்
இத்தனை சமூக அக்கறையுடன்
சங்கமித்த எழுத்துக்களுக்கு
மனசார ஒரு மதிப்பு வந்தனம் சுந்தர்ஜி .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவனிப்பில்லாத கோவில் ஒன்று கண்முன் நிற்கிறது ஜி! நல்ல வார்த்தைப் பிரயோகங்கள். அசத்தலான கவிதையை 20- வயதிலேயே எழுதி அது கணையாழியிலும் பிரசுரம் ஆனது மகிழ்ச்சி அளித்தது….

Vel Kannan சொன்னது…

நீண்ட நாள் கழித்து வருகிறேன் ஜி
நலமா ?
ஒவ்வொன்றாய் படிக்கவேண்டும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தல்
இந்த இடமே பெரும் கனமுடன் நின்று விட்டேன் எப்படி பட்ட கவிதை இது
ஏன் நின்று போனீர்கள் ? என்று கேட்பதில் அர்த்தமில்லை தான் வாழ்க்கையில் சில ஏன் களுக்கு விடை தெரியாது/கிடைக்காது
ஒன்று கவனித்தேன் இந்த கவிதைக்குள் தஞ்சை ப்ரகாஷ் ஒளிர்வதாக
(நேற்று வெங்கட் சாமிநாதன் - தஞ்சை ப்ரகாஷ் சை தழுதழுத்த குரலுடன் நினைவு கூர்ந்தார் அவரின் இல்லாமையை. எனக்கு உங்களின் நினைவு வந்தது )

மிருணா சொன்னது…

முதல் 5 வரிகளே மொழி அருமையோடு. எப்படி சொல்வது? ஒரு twirl எனலாமா? பின் முரண் நகையின் சொல்வெட்டு, கருத்து நறுக்கோடு. 25 வருட வாழ்த்துக்கள் கவி.சுந்தர்ஜி.

Matangi Mawley சொன்னது…

"..நைவேத்யத்தைத்
திருட்டுத்தனமாய்
ருசிபார்ப்பான்
பக்ஷிராஜன்..."--- tiny specks of clues sprinkled all over- that speaks in the voice that is usually silenced behind the camphor lit darkness... The voice of the 'Garbagraha'...

Beautiful, sir-ji!

வானம்பாடிகள் சொன்னது…

அற்புதமான கவிதை:)

ரிஷபன் சொன்னது…

அற்புதமான கவிதைக்கு ஒரு சலாம்!

santhanakrishnan சொன்னது…

எல்லாம் ஞாபகமிருக்கிறது.
அன்று படித்தது போலவே இருக்கிறது
இன்றும்.

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.

சிவகுமாரன் சொன்னது…

20 வயதில் எத்தனை தீட்சண்யமான வார்த்தைகள். பிரமிப்பாய் இருக்கிறது.
இருபொருள் தரும் ப்ரஹாரம் என்ற சொல் கவிதையின் அடிநாதம்.
அருமை சுந்தர்ஜி

Nagasubramanian சொன்னது…

அருமை

G.M Balasubramaniam சொன்னது…

விளையும் பயிர் முளையில் தெரியும் என்பது மூத்தோர் வாக்கு. என் வீட்டில் ஒரு செடி இருக்கிறது. அதில் வருடத்தில் ஒரே ஒரு பூ பூக்கும் மே மாதத்தில். இந்த வருடம் செடியே காணப்பட வில்லை. மனைவியிடம் இது பற்றி கூறிக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் ! மண்ணைத் துளைத்து செடி வந்து பூவும் பூத்துவிட்டது. அதுபோல். நீங்களும் முளைத்துஇருக்கிறீர்க்ள் பூத்துகுலுங்கி
வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...