24.5.11

அஞ்ஞானம்
















மெலிதாய்க் கற்களை உருட்டும் ஒலி கூடத் தவிர்த்து ஓடிக்கொண்டிருந்தது அந்த வனத்தின் சிற்றோடை. ஓடையின் கரையில் ஒரு அணில் சோகத்தின் சாயலோடு உட்கார்ந்திருந்தது.

வெயிலின் தாக்கம் எதுவுமில்லாத அடர்ந்த வனத்தின் மையப்பகுதி என்றாலும் யானைக்கும் தாகமாய் இருந்தது. நகரங்களில் கிடைக்காத ஓடையில் இளநீர் போல ஓடிக்கொண்டிருந்த குளிர்ந்த நீரைப் பருக வந்தது.

கரையில் கவலையுடன் இருந்த அணிலைப் பார்த்தது. கவலைக்கான காரணத்தைக் கேட்டது யானை.

“யானை மாமா! வருத்தப்படற மாதிரியான செய்திதான். நேற்றைக்குக் கேள்விப்பட்ட செய்தியை நினைச்சா மனசுக்குக் கவலையா இருக்கு”

“அப்படியென்ன செய்தியைக் கேள்விப்பட்டே இத்தனூண்டுப் பயலான நீ?”

“இந்தக் கிரகத்துல இருக்குற மனுஷங்க எல்லாம் பூமி கொஞ்சங்கொஞ்சமா தன்னோட நல்ல தன்மைகளையெல்லாம் இழந்துக்கிட்டே வர்றதால வேறொரு கிரகத்துக்குப் போறதுக்கான ஏற்பாடுகளையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்.”

“அப்படியா சேதி? அப்புறம்?”

“முதல் கட்டமா அந்த கிரகத்துல இங்க இருக்கற மாதிரியே எல்லைகளை எல்லா நாடுகளுக்கும் அவங்கவங்க மக்கள்தொகைக்கு ஏத்தா மாதிரி சமமாப் பிரிக்கறதுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டியிருக்காங்க”

”அப்படி மாறிப் போறதுல ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்காங்க?”

“ஆமா!அதுல என்ன தப்பு? இங்க குடிக்கத் தண்ணியில்ல.காத்து எல்லாமே விஷமாயிடுச்சு. தங்கறதுக்கு போதுமான இடமில்ல. மக்கள் தொகையும் கூடிக்கிட்டே இருக்கு. காடுகளே கைவிட்டு எண்ணுற மாதிரி ஆயிடுச்சு. காடுகள் குறைஞ்சதாலே மழையுமில்லாமப் போச்சு.எப்படியிருக்கும் அவங்களுக்கு நிம்மதி?”

“சரி.இன்னும் எத்தனை நாளாகுமோ இதுக்கு?”

“எப்படியும் இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல போயிடுவாங்க.”

“நாம இல்லாம இந்த சோம்பேறி மக்களால இருக்கமுடியாது. நம்மளையும் கூட்டிக்கிட்டுதான் போவாங்க. கவலைப்படாதே.”

“என் கவலையே அதுதான். அவங்க தேவையான ஒவ்வொரு விலங்கை மட்டும் கூட்டிக்கிட்டுப் போய் க்ளோனிங் பண்ணிக்கப் போறாங்களாம்”

இதைக் கேட்டவுடன் யானை தன் பூதாகாரமான உடலைக் குலுக்கிக் குலுக்கிச் சிரித்தது.

‘அடச்சே!இதுக்குத்தான் கவலைப்பட்டியா? பெரிய விடுதலை நமக்கு. இந்த பூமியை ஆராய்ச்சி ஆராய்ச்சிங்கற பேர்ல எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டதா நினைச்சு கடைசில தன் தலைக்கு மேல வெள்ளம் போனவுடனே விட்டுட்டு ஓடற இந்த விஞ்ஞானத்தக் கட்டிக்கிட்டு அழற மனுஷங்க இல்லாமப் போனா நமக்குத் தான் எத்தனை நிம்மதி?

நான் பொறந்ததுலேருந்து யானையாத்தான் இருக்கேன். நீ அணிலாத்தான் இருக்கே. நிம்மதியாத்தான் இருக்கோம். ஆறாவது அறிவ வெச்சுக்கிட்டு இந்த மனுஷங்க எப்படி மாறிப்போய்ட்டாங்க?பெரிய வரம்னு நினைச்ச அந்த ஆறாவது அறிவுதான் அவுங்களுக்கு இப்ப பெரிய சுமை”

“ஹையா! அப்ப நீ சொல்ற மாதிரி சீக்கிரமே நமக்கெல்லாம் விடுதலை.” என்று கவலையைக் கழற்றி வீசி விட்டு அணிலும் யானையோடு சேர்ந்து குதித்தது.

எல்லாமே
தன்னுடையதாய்
எண்ணுபவனுக்கு
எதுவுமே
அவனுடையதாய்
இருப்பதுமில்லை.
அது அவனுக்குப்
புரிவதுமில்லை.
எதுவுமே
வேண்டாதவனுக்கு
எல்லாமே
அவனுடையதாகிவிடுகிறது.
வேண்டாதவனின்
காலடியில்
உடைமை எனும்
பொருளையும்
இழந்து விடுகிறது.   

15 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

நான் பொறந்ததுலேருந்து யானையாத்தான் இருக்கேன். நீ அணிலாத்தான் இருக்கே. நிம்மதியாத்தான் இருக்கோம். ஆறாவது அறிவ வெச்சுக்கிட்டு இந்த மனுஷங்க எப்படி மாறிப்போய்ட்டாங்க?பெரிய வரம்னு நினைச்ச அந்த ஆறாவது அறிவுதான் அவுங்களுக்கு இப்ப பெரிய சுமை”

மிக உண்மைதான் அண்ணா , அந்த ஆறாவது அறிவு திறந்த போதுதான் நாம் நிர்வாணம் உணர்ந்தோம், அன்றே துரோகமும், பாவமும் தொடங்கினோம் , இது நமக்கு சாபமா வரமா தெரியவில்லை , நல்ல பதிவிற்கு நன்றி

G.M Balasubramaniam சொன்னது…

விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு மனிதனுக்கிருந்தும் அழிவை நோக்கி பயணிக்க அதை அவன் பயன் படுத்துவது இந்த பூமிப் பந்துக்கு அவன் செய்யும் துரோகம்தான். கதைகள் மூலம் சேதி சொல்லும் பாங்கு, நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஆறாவது இருப்பதாக மனிதன் தான் மமதை கொண்டு கண்டதையும் செய்து கொண்டு இருக்கிறான். ஐந்தறிவு கொண்டதாய் மனிதன் சொன்னாலும் விலங்குகளிடம் இருக்கும் அறிவாற்றல் நிச்சயமாய் மனிதனிடம் இல்லை....

நல்ல பகிர்வு ஜி!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, இது ரொம்ப நல்லதொரு பதிவு.
ஆக்கவும் காக்கவும் பயன்படுத்த வேண்டிய ஆறாவது அறிவு அழிக்கவும் அல்லவா பயன்படுகிறது.

வேற்று கிரஹத்திலும் போய் ஆறாவது அறிவை பயன்படுத்தி அதையும் கெடுத்துக்குட்டிசுவராக ஆக்கிடுவாங்களோன்னு, அணில் பட்ட கவலையை, யானை தவடுபொடியாக்கிவிட்டதே!

பதிவுக்கும் இறுதிப்பாடலுக்கும் நன்றி.

Matangi Mawley சொன்னது…

5th June- World Environment Day-- is just around the corner... ரொம்பவே topical post. சின்ன வயசுல- எங்க school ல- ஒவ்வொரு children s day வுக்கும் 10th (most senior students) பசங்களெல்லாம் எங்க school இருக்கற தெரு-ல plant saplings நட்டு வைக்கறது வழக்கம்... நானும் நட்டிருக்கேன்... அது ரொம்ப அருமையான பழக்கம் னு அப்பறமா எனக்கு தோணித்து... but இப்போ-லாம்... children are more busy playing 'Farmville' on Facebook- than actually planting plants!

Really good post, sir-ji!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இன்சினீரிங் படிக்காமலேயே மிக அழகாகக்கூடு கட்டும் பறவைகள், தேன் கூடுகள் அமைக்கும் தேனீக்கள், துப்புத்துலக்கிடும் நாய்கள் போன்ற எவ்வளவோ பிராணிகள் மனிதனைவிட அறிவாளிகளாகவே தெரிகின்றன எனக்கு.

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...போற போக்கைப் பார்த்தா ஞானியா மாறிட்டே வாறீங்கபோல !

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.

எல் கே சொன்னது…

உண்மை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருக்கீங்க. அந்த ஆறாவது அறிவியி வெச்சுக்கிட்டு நாம போடற ஆட்டம் இருக்கே

சுந்தர்ஜி சொன்னது…

ரிஷபன் சொல்கிறார்-

அந்த வேறொரு கிரகத்தைக் காப்பாத்த வேற வழியே இல்லியா?!
மனிதரின் ஆறாம் அறிவுதான் சுமை என்றில்லை.. பல மனிதர்களே பூமிக்கு
சுமைதான்!

என்ன முயற்சித்தாலும் பின்னூட்டம் வேலை செய்யவில்லை. அதனால் இந்த மெயில்.

vasan சொன்னது…

பூஜிய‌த்துக்குள்ளே ஒரு ராஜ்ஜிய‌த்தை ஆண்டுகொண்டு புரியாமலேயிருப்பான் ஒருவ‌ன்.
அவ‌னைப் புரிந்து கொண்டால் அவ‌ன் தான் இறைவன்.
ப‌ல பூஜியங்க‌ளைச் சேர்த்துக் கொண்டு, க‌ம்பிக‌ளை "எண்ணி"க்கொண்டு
புரியாம‌லே இருப்பார் சில‌ர்.
அவ‌ர்த‌மை தெரிந்து கொண்டால் அவ‌ர்க‌ள் தான் ஆண்ட‌வ‌ர்க‌ள்.

இரசிகை சொன்னது…

vaazhthukal sundarji.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! சுந்தர்ஜி!! நீங்களும் நானும் மட்டும் அணில்,யானையோடு இங்கயே தங்கிடலாமா?

நிலாமகள் சொன்னது…

//எதுவுமே
வேண்டாதவனுக்கு
எல்லாமே
அவனுடையதாகிவிடுகிறது.//

த‌த்துவ‌ங்க‌ளில் எங்க‌ளைக் க‌ரைந்துபோக‌ச் செய்யும் வ‌ல்ல‌மை பெற்ற‌ த‌ங்க‌ள் எழுத்துக்க‌ள் உய்விக்கின்ற‌ன‌. முக‌ப்புப் ப‌ட‌ங்க‌ளின் அழ‌கு சிலாகிக்கும்ப‌டியும் சேக‌ரிக்கும் அவாவை எழுப்பிய‌ப‌டியும்! ஏதேனும் ஒருவித‌மாய் எல்லோரையும் வ‌சீக‌ரித்திருத்த‌ல் வ‌ர‌ம் ஜி!

அப்பாதுரை சொன்னது…

இறுதியில் வரும் தத்துவத்தின் ஆழமும் உண்மையும் அப்படியே ஏற்றாலும், மனிதம் உலகை அழிக்கிறது என்பதை ஏற்கமுடியவில்லை. வளர்ச்சியின் இன்னொரு புறம் அழிவு என்பதும் இயற்கையின் நியதி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...