இசையை ரசிக்கத் தெரியவில்லை. உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. சங்கீதத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதும் பேசுவதும் மலைப்பாக இருக்கிறது.
மேலே கண்ட வார்த்தைகளைத் தனக்கு சங்கீதம் தெரியாது என்று சொல்லிக் கொள்பவர்களும் சங்கீதம் கேட்க ஆசை.ஆனால் எதுவும் தெரியாமல் கேட்க பயமாயிருக்கிறது என்று நினைப்பவர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்.
அந்த இரண்டு பத்திகளையும் மறந்துவிடுங்கள். ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு பிறந்ததில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டதாய் நினைக்கும்-தேர்ச்சி பெற்றதாய் நினைக்கும் விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள்.
அது சமையலோ கவிதையோ மொழியோ பேச்சோ எதுவானாலும் இருக்கட்டும். அதன் துவக்க நாட்களில் இருந்து இன்று வரை நிகழ்ந்த பயணத்தின் பாதையை அசை போட்டுப்பாருங்கள்.
இன்றும் கற்றுக் கொள்ளவும் ரசிக்கவும் கற்றவரையில் உங்கள் தேர்ச்சியை வெளிக்காட்டவும் தயக்கம் இருந்ததில்லை. பலரிடம் பகிர்ந்து கொள்ளவும் பயமில்லை. அடிப்படை என்னவென்றால் நாம் கற்றுத் தேர்ந்ததாய் நினைக்கும் எல்லாமே இன்னும் கற்கத் தேவையானதாகவும் முடிவுறாத பயணத்துக்கு இட்டுச் செல்வதாயும் இருப்பது கண்ணுக்குத் தெரியும்.
இசையும் அப்படிப்பட்டதாய்த்தான் இருக்கமுடியும். அதன் அடிப்படை இலக்கணங்கள் தெரிந்திருக்கத் தேவையில்லை.ரசிக்கப் பொறுமையும் திறந்த மனதும் இருந்தாலே போதும். இன்னும் சொல்லப் போனால் இலக்கணம் எந்த ஒரு கல்விக்குமே அடிப்படையானதாக இருக்கமுடியாது.அதன் மேல் நாம் கொள்ளும் ஈடுபாடுதான் அதை நமக்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது. அதன் பின் நம்மை அறியாமலே அந்தந்தக் கல்விக்கு ஏற்றது போல இலக்கணங்கள் தானாய் ஒரு வேலி அமைக்கின்றன.
இசையைப் பொறுத்தவரை அது கர்நாடக சங்கீதமோ-ஹிந்துஸ்தானி இசையோ-மேற்கத்திய சங்கீதமோ அதன் ரசனை அது என்ன ராகம் என்பதிலிருந்தோஅல்லது அதன் கட்டமைப்புக் குறித்த இலக்கணங்களிலிருந்தோ துவக்கம் கொள்வதில்லை.
மிகச் சிறிய வயதிலிருந்து இசையை ரசிக்கத் துவங்கும் பலரின் வாழ்க்கை எந்தத் தருணத்திலிருந்தும் இனிமையானதாகவே இருந்து வந்திருக்கிறது.அவர்களும் வாழ்வின் துயர்களில் சிக்காமல் தப்பியதில்லை. ஆனாலும் அவர்கள் அத் துயரிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் உபாயங்களை இசையுடன் சேர்த்து கற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.
கேட்கக் கேட்க அந்த இசையே உங்களுக்குச் சாயல்களைக் கற்றுக் கொடுத்து விடும். ஒரே மாதிரியான ராகத்தின் சாயல்கள் சினிமாப் பாடல்களிலிருந்து சாஸ்த்ரீய சங்கீதத்தின் மாளிகைக்கு உங்களைக் கூட்டிப் போய்விடும்.அதற்கு மொழி ஒரு கூடுதலான சுவையே தவிர நல்ல இசைக்கு மொழியே தேவையில்லை என்பதும் என் கட்சி.
எந்த ஒரு அடிப்படை இலக்கணமும் தெரியாத- எந்த ஒரு பிரபல இசை அமைப்பாளரின் தொடர்பும் இல்லாத -ஒரு இசை ரசிகரை நான் வெகு நாட்களாக அறிவேன்.
1988லேயே
ஹரிஹரனின் குரலைப் பலருக்கு அவரின் கஸல்கள் மூலம் அறிமுகப் படுத்தி இவர் பெரிய ஆளாக வருவார் என்று சத்தியம் செய்தவர்.
சஞ்சீவ் அபயங்கர்-
ரஷீத் கான் போன்ற ஹிந்துஸ்தானி இசை மேதைகளையும் முன்கூட்டியே கணித்தவர்.
தன் இருபது வயதுகளுக்குள் ( அப்போது இணையதளம் எதுவுமற்ற பொட்டல்வெளி. எல்.பி.யும் ஒலிநாடாக்களும் டூ.இன்.ஒன். களுமே கதி.) ஜாக்கி ஷெராஃபும் மீனாக்ஷி சேஷாத்ரியும் அறிமுகமான ஹீரோ என்கிற சினிமாவில் ரேஷ்மா பாடிய
லம்பி ஜுதாயி என்கிற சூஃபி வடிவ கஸல் மூலம் நஸ்ரத் பஃடே அலிகாஃனின் பல சூஃபி இசைப் பாடல்களையும் தேடி பலருக்கும் அறிமுகப்படுத்தியவர்.
ஆ ஊ என்றால் ஒரு பக்கம்
நௌஷாத்தையும்
மன்னா தேயையும்
சலீல் சௌத்ரியையும் பற்றி
எம்.எஸ்.வி. ,
ஜி.ராமநாதன் மற்றும்
இளையராஜா பற்றியும் மறு பக்கம்
பண்டிட் ரவிஷங்கர்-
பீம்சென் ஜோஷி-
கிஷோரி அமோன்கர் பற்றியும் பேச ஆரம்பித்துவிடுவார்.
மொகலே ஆஸம் பாடல்கள் கேட்டால் ஜன கண மன அளவுக்கு மரியாதை செலுத்த நின்று விடுவார்.
போதும் அவர் அறிமுகம். விஷயத்துக்கு வரவும் என்கிற உங்கள் கோஷம் காதுகளைத் தொடுவதால் இத்தோடு
. வைக்கிறேன்.
அவர் இனி வாரம் ஒரு பாடலை அறிமுகப் படுத்தி அதே சாயலில் உள்ள தமிழ்ப் பாடல் எது என்று கேட்கும் கேள்விக்கு பின்னூட்டத்தில் பதில் கூறினால் அவரை விரைவில் அறிமுகப்படுத்துவேன்.
இந்த வாரம் இது.
ஸாஸோங் கி மாலா பே- இந்தக் கவ்வாலிப் பாடல் சமீபத்தில் வந்த பிரபலமான தமிழ் சினிமாப் பாடல்-