
I
நீண்டு வளர்ந்த
மரத்தின் உச்சியில்
ஒற்றைக் கொக்கை
மலையில் அமர்ந்திருக்கையில்
தரிசிக்கிறேன் நான்.
பாயும் நதியின்
மடியில் உருளும்
கூழாங்கற்களை
நீரில் மூழ்கி
கைகளில் அள்ளிக்
கன்னங்களில் பதிக்கிறேன்.
அரிதான
ஒன்றைத் தரிசிக்க
அதற்குச்
சமமான உயரம்.
அல்லது
சமமான தாழ்வு.
கடவுளோடு
உரையாடுகையில்
உதிர்ந்த முதல் பாடம்.
II
இருப்பிலிருந்து
உதிர்ந்து
வெளிகளில் மிதந்து
மெல்ல மெல்ல
நிசப்தத்தில்
பதிய இருக்கின்றன
பழுப்பு இலைகளின்
சுவடுகள்.
பறவைகளின் கூவல்கள்
நிரம்பிய பள்ளத்தாக்குகளில்
எங்கோ
ஓடிக் கொண்டிருக்கும்
நதியின் இசை
காதுகளில் பாய்கிறது
தரிசனங்கள்
பல சமயங்களில்
கண்களால்.
சில சமயங்களில்
மனதால்.
III
பல கதவுகளால்
மூடப் பட்டிருக்கிறது
அந்த குகை.
வெவ்வேறு
கதவுகளை
மறுபடி மறுபடி
மாற்றித் திறந்தபின்னும்
எதையும் காணாது
திகைக்கிறேன்.
அவனோ
ஒரே கதவைத்
திறந்தும் மூடியும்
பேரானந்தத்தில்
திளைக்கிறான்.
சில பயணங்களைப்
பாதைகள்
தீர்மானிக்கின்றன.
வேறு சிலவற்றைப்
பார்க்கும் கோணங்கள்.





