13.12.11

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-I



மார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில் உடலும் மனமும் குளிர நீராடி மேற்கொள்ளும் இறைவழிபாடும் ரம்மியமானவை. இந்த மார்கழி மாதத்தில் திருமாலை ஆராதிக்கும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வணங்கும் திருவாதிரைத் திருநாளும் மஹா வ்யதீபாதமும் அதிக முக்யத்வம் வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் நாள் திருவாதிரைத் திருநாள் ஆகும். 

1.விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுஷ்மான் 4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம் 7. சுகர்கம் 8. த்ருதி 9. சூலம் 10. கண்டம் 11. விருத்தி 12. த்ருவம் 13. வியகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம் 16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான் 19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம் 22. சாத்யம் 23. சுபம் 24. சுப்ரம் 25. ப்ரம்மம் 26. ஜந்ரம் 27. வைத்ருதி எனும் இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று வ்யதீபாத யோகம். 


நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பது போல இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இந்த யோகங்களில் ஒன்றான வ்யதீபாதம் மார்கழி மாதத்தில் வரும்போது இதற்கு "மஹா வ்யதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது. 



மஹா வ்யதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு மூன்று கிலோமீட்டர்கள் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. 



சந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமரான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். 

அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வ்யதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவபிரானாவார். தவிர, இந்த மஹா வ்யதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்களும் அடங்கும். அதிலும் மஹா வ்யதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது நம் மரபின் நம்பிக்கை. 

இனி தத்தாத்ரேயர் புராணம். 

அத்ரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் வ்ணங்கி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம ப்ரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்தவர் அனசூயா தேவி.

 "மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்” என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்னி கற்பிற் சிறந்த பதிவ்ரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்ரி- அனசூயா ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் வணங்கியதையும் அனசூயா தேவி சீதாதேவிக்குப் பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதையும் இராமாயணம் குறிப்பிடுகிறது.

கலகம் உண்டாக்குவதில் கெட்டிக்காரரான நாரதர் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் சென்றார். "அத்ரி மகரிஷியின் மனைவி அனசூயாதேவியின் கற்பைச் சோதிக்க மூவரும் தனித்தனியாக சென்று வாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார். 

மும்மூர்த்திகளும் மாறுவேடத்தில் அனுசுயாதேவியின் குடிலுக்குள் நுழைந்தனர். அவர்களை வரவேற்று விருந்து படைத்தார் அனசூயா. அதில் திருப்தியுறாத அவர்கள், அனசூயா தேவியை ஆடை ஏதும் அணியாமல் உணவு பரிமாறும்படி கேட்டனர். அதற்கு உடன்படுவதாகத் தெரிவித்த அனசூயா தேவி, தன் கணவரும் தவ ஸ்ரேஷ்டருமாகிய அத்ரி மகரிஷியை மனதுக்குள் வணங்கி அவர் கமண்டலத்திலிருந்த நீரை அவர்கள் மூவரின் மேலும் தெளித்து மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களை மடியில் கிடத்தித் தாய்ப்பாலும் அருந்தும்படி செய்தார். 

அப்போது குடிலுக்குத் திரும்பிய அத்ரி மகரிஷியும் தமது ப்ரார்த்தனையின் பலனே இம்மூவரும் என்று சொல்லியபடியே மூன்று குழந்தைகளையும் வாரி அணைக்க 3 தலைகளும் 2 கால்களும் 6 கைகளும் ஒரே உடலில் இணைய தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும். 

அத்ரியின் புதல்வர் என்பதும் மூவரின் அம்சங்களும் நிறைந்தவர் எனக்குறிக்க தத்த+ஆத்ரேயர் என்ற பெயர் கொண்டார்.இவரின் அவதாரம் மார்கழிப் பௌர்ணமியில் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் நிகழ்ந்தது. 

ப்ரயாகையில் இவருக்குக் கோயில் இருக்கிறது. அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாயம் போன்றவை கிடையாது. உத்திரப் ப்ரதேசத்தில் குருமூர்த்தி என்றால் அது தத்தாத்ரேயரையே குறிக்கும்.  அதேபோல இவர் இமயத்தில் நெடுநாட்கள் ஆத்ரேய மலைப்பகுதியில் தவம் இயற்றிய குகைக்கு தத்தா குகை என்றே பெயர். ஸஹய மலையில் காவிரியின் உற்பத்தி ஸ்தானத்துக்கருகிலும், சித்ரதுர்கா மலைப்பகுதியிலும், குல்பர்கா அருகே கங்காபூரிலும் இவர் தவம் புரிந்த குகைகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் சேர்ந்தமங்கலத்திலும், சேலம் ஸ்கந்தகிரியிலும், புதுக்கோட்டையிலும், சேங்காலிபுரத்திலும் தத்தருக்கு சிலைகளுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. 

அதேபோல் அவதூதரான தத்தாத்ரேயர் தனக்கு ஞானத்தைக் கற்பித்தவர்கள் யார் என்று விளக்கமளிக்கும் உரையாடல் மிகவும் தத்வார்த்தமும் தெளிவும் நிறைந்ததாகும். 

முன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன், பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த யௌவனரான ஒரு துறவியிடம்,

”மனிதர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், புகழ் பாராட்டு, செல்வம் ஆகியவற்றை அடையவே அறம், பொருள், இன்பம், வீடென்ற சக்கரத்துள் அழுந்தியிருக்கிறார்கள். சதா காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரோ அவைகளால் தீண்டப்படாமல், கங்கையில் மூழ்கிக் களிக்கும் யானையைப் போல - இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீரே? உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டான்.

”என் புத்தியில் புகுந்து குருவாய் விளங்குபவர்கள் எனக்குப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியர்களிடமிருந்து நான் பெற்ற போதனையால் நான் முக்தனாகச் சஞ்சரிக்கிறேன். என்றபோதும் நான் போதனை பெற்ற 24 குருமார்களைப் பற்றிக் கூறுகிறேன். கேளும்.

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிக்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்தி, குளவி ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.

(இன்னொரு இடுகையில் தொடர்வேன்)

12.12.11

மூடப்பட்ட கதவுகள் குறித்த கவிதை


















1.

இனி நிரந்தரமாய்
யாராலும் திறக்கப்படாது
போய்விடக்கூடும்
என ஒருவேளை
இறுதியாய்ப்
பூட்டப்படும்போது
இந்தவீட்டின்
கதவு மட்டும்
அறிந்திருக்கக் கூடும்.

2.

ஒரு கதவை
மூடும்போது
இன்னொரு கதவு
திறக்கப்பட்டதை
அறிந்த இந்தக்கதவு
வேறொரு கதவின்
மூடலுக்காய்க்
காத்திருக்கிறது.

3.

எத்தனையோ முறை
யார் யாருக்கோ
திறக்கமறுத்த

யார் யாரோ
தட்டத் தயங்கிய
இதே கதவுதான்

உட்புறம் திறக்கவும்
வெளிப்புறம் தட்டவும்
அவசியமற்றுப் போய்

வெறும்
ஒரு பெயராய்
நிற்கிறது.

4.

இந்தக் கவிதையால்
ஒருவேளை கதவு
திறக்கப்படக்கூடுமானால்

காற்றில்
உறைந்துபோயிருக்கும்
இறுதிநாள் வார்த்தைகளை
வார்த்து ஒரு திறவுகோல்
தயாரித்துவிடலாம்

திறக்கப்படாத
கதவுகளுக்காய்.

5.

நிராகரிப்பின் கசப்பை
அறைந்து 
மூடப்படும் கதவுகள்
பருகுகின்றன எனில்

நிராதரவின் குருதி
வழிந்தபடியிருக்கிறது

திறக்கப்படாத கதவுகளின்
இடைவெளிகளில்.

6.

கதவு திறத்தல்
வரவேற்பின் முதல்படி
எனில்

கதவு துறத்தல்
ஞானத்தின் முதல்படி
என்க.

9.12.11

கோட்டையிலிருந்து..


1.
இந்தச் சுவர்களில்
காதைப் பதியுங்கள்.
உன்னிப்பாய்க்
கேளுங்கள்.
கேட்கிறதா
சிதைந்த 
கோட்டையின் 
சுவர்களில் 
நிறைவேறாத
கட்டளைகளின்
முனை மழுங்கிய 
சப்தம்?

2.
சுரங்கத்தில்
நுழைகையில்
மிதிக்காமல்
தாண்டி வாருங்கள்-
வரலாற்றின்
பாதங்களில்
ஒட்டிக்கொள்ளாது
தரையெங்கும்
சிந்திக்கிடக்கிறது
போரின் இறுதிநாளில்
தோற்றுச்
சிறைபிடிக்கப்பட்ட
வெதும்பலின் திவலைகள்.

3.
வாழலாம் அல்லது
வீழலாம்.
அல்லது
ஒளியலாம்.
நெருங்கும்
தீப்பந்தங்களில்
மினுமினுக்கும்
வாள் நுனிக்கு முன்
ஏதாவதொன்று
ஆனால்
எந்த ஒன்று?

4.
கைவிடப்பட்ட
காலற்ற
குதிரைகள்-
குழந்தைகள்-
முதியோர்-
கவரப்பட்டுக்
கைவிடப்பட்ட
பிணப்பெண்கள்.
செருகப்பட்டு
நிமிர்ந்து நிற்கும்
வாட்கள்.
இழந்த வாழ்வின்
சுமை தாளாது
குனிந்து நிற்கும்
கோரப் போர்ச்செடி.
குருதியில் புரளும்
உயிர்களின்
ஓலத்தால்
சரியக்கூடுமோ
ஒரு கோட்டை?

5.
அந்தப்புரத்தின்
நீரில்லாக் குளத்தில்
தாவிக் குதிக்கிறது
ஆயிரம் வருஷத்துப்
பழைய தவளை.
புராதனக் காற்றில்
மிதந்து வருகிறது
நிசப்தம் பூசிய
நிறைவடையாத பாடலின்
இறுதி வரி.

6.
கோட்டை முகப்பில்
கிழிக்கும்
நுழைவுச்சீட்டைச்
சுமப்பதும்
உள்ளே நுழைவதும்
போல் எளிதானதல்ல
கோட்டையிலிருந்து
வெளியேறிச்செல்வது.

7.12.11

சீமாட்டியின் தாலாட்டு


சாலை வழியுறங்க 
சமுத்திரத்தில் மீனுறங்க
நாடெல்லாம் உறங்க 

நாலு கழனி நெல்லுறங்க
பாலில் பழம் உறங்க 

பாதி நிலா தானுறங்க

வண்டுகள் கவி பாட 

மரங்கள் நடமாட
செண்டுகள் தானாட 

தேசத்தார் கொண்டாட
ஆடுமாம் தூளி 

அசையுமாம் பொன்னூஞ்சல்

மண்ணிலொரு புன்னை மரம் 

வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய் காய்க்கும் 

புன்னை மரம் 
இலை உதிரப் பிஞ்சு விடும்

முத்துச் சிரிப்பழகா 

முல்லைபூப் பல்லழகா
வெத்துக் குடிசயிலே 

விளையாட வந்தனையோ 
பச்சரிசி சோளம் 

பாதிநாள் பட்டினிதான்

பசும்பால் கொடுத்துந்தன் 

பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்தி விதை இல்லையடா

பசு பாலும் தரலையடா

ஆட்டுப் பால் ஊட்டியுன் 

பசிதணிக்கப் பார்த்தாலும்
ஆடு கடிக்கும் மரம் 

அத்தனையும் மொட்டையடா

பிள்ளைப் பாலூட்டி உன்னை 

போஜனைகள் செய்திடவே
கொள்ளை யுத்தம் பஞ்சம் 

கொடும்பாவி ஆனேண்டா


தொட்டால் பிசுக்கொட்டும் 
துணி மூட்டைத் தையலிட்டு
தொட்டில் கட்டித் தாலாட்ட 

தூக்கமும் வருமோடா


உன்னைப் போல் செல்வனை 
நான் உலகெங்கும் கண்டதில்லை
என்னைப் போல் ஏழையை நீ 

எங்காச்சும் கண்டதுண்டா. 


ஒரு ஏழைப் பெண்ணின் ஒழுகும் குடிசையிலிருந்து என்றோ ஒலித்த ஒரு தாலாட்டுப் பாடல் என் மனதை அசைக்கிறது. எத்தனை அற்புதமாய் தன் ஏழ்மையை இந்த வரிகளுக்குள் ஒளித்து வைத்து தன் குழந்தையைத் தாலாட்டுகிறாள்? அவள் குழந்தையின் வயிற்றுப் பசியைப் போக்கவும் வழியில்லை. அவள் வறுமையைத் துடைக்கவும் வழி இல்லை. அவள் கணவன் குறித்த தகவல்களும் இல்லை. ஆட்டுக்கும் மாட்டுக்கும் தீனிக்கு வழியில்லை. பஞ்சத்தால் தாய்ப்பாலுக்கும் வழியில்லை. பசி தீர்க்க எதுவுமில்லாது இருந்தாலும் தன் பாடல் அவனை உறங்கச் செய்துவிடாதா என்ற நப்பாசையுடனும் பிசுக்குத் துணியால் கட்டப்பட்ட தூளியில் எப்படி அவன் தூங்குவான் என்ற சந்தேகத்துடனும் தாலாட்டுகிறாள். இப்படிப்பட்ட தாலாட்டுப் பாடல்கள் மறைந்து போனது இருக்கட்டும்- அந்தத் தாலாட்டில் மறைந்திருக்கும் தன் இல்லாமையை இத்தனை நாசூக்குடன் எள்ளலுடன் பார்க்கும் ம்னோபாவமும் அல்லவா காணாமல் போய்விட்டது? கடைசி நான்கு வரிகளை மகத்தான ஒரு கவிதையால் நிரப்பித் தாலாட்டை முடிக்கிறாள் உன்னதமான தாலாட்டைப் பாடிய அந்தத் தாய். சிந்தனையில் செல்வச்சீமாட்டியாய்த் தெரிகிற அவள் ஏழையென்று ஒப்புக்கொள்ள கசியும் கண்ணீருக்கு மனமில்லை.

5.12.11

அனுமதி இலவசம்



1.
எல்லாப் பூங்காக்களிலும்
விரைத்த சுளித்த 
முகத்தைச் சுமந்தபடி 
வீசி நடக்கும்
கனவான் சீமாட்டிகளுக்கு
அண்மைப் புல்வெளிகளில்
பாரம் சுமந்து உறங்குகிறார்கள்
துரத்தப்பட்டவர்கள்.

2.
பெருத்த அமைதி
மலைப்பாம்பாய்ப் புரளும்
நூலகங்களின்
படித்த வரிகளில்
உறங்கியபடி இருக்கிறார்கள்
வேறெங்கும் போவதற்கு
வழியில்லாதவர்கள்.

3.
கோயில்களில் திறக்கப்படும்
அன்னதானக் கதவுகளை
நோக்கிப் பாயும்
யாசகர்களின் பசி குறித்துப்
புள்ளிவிவரங்களுடன்
அரசு விழாக்களில்
வெட்கங்கெட்ட
கவிதைகள் எழுதப்படுகின்றன.

4.
கருங்கடலின் முன்
செல்லுமிடம் தெரியாது
நிற்கும்
இன்னும் ஆயிரம்பேருக்குள்
வந்து மோதுகின்றன
கடலின் பேரலைகள்.

5.
நிராதரவின் கரங்களில்
ஊசலாடுகின்றன
இரவுகளில்
மூடப்பட இருக்கிற
ரயில் நிலையங்கள்-
கோயில்கள்-நூலகங்கள்-
பூங்காக்கள்-
பொதுக்கழிப்பறைகள்.

அதனினும்
பெருந் திகிலூட்டுபவை
மூடப்படாத இரவுகள்
மூடப்படாத சாலைகள்
மற்றும் ஒருபோதும்
உபயோகிக்கப்படாத
ஆட்சியாளர்களின்
துருப்பிடித்த மூளைகள்.

4.12.11

ரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்

ரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள் பொக்கிஷமாய் அகப்பட்டன. அவரின் இறுதி மூச்சு அவரது ஸ்தூல உடலை விட்டு விக்ருதி வருடம் சித்திரை மாதம் 2ம் தேதிக்ருஷ்ண பக்ஷத் த்ரயோதசியும் பூரட்டாதி நக்ஷத்ரமும் கூடிய வெள்ளிக்கிழமையின் முதல் யாமத்தில் ( 14-04-1950 @ இரவு 8.47 ) விடைபெற்றது. 

அந்தக் கடைசி மூச்சுக்கு முந்தைய இரு நாட்களின் சம்பவங்களை ஸ்ரீ ரமணாச்ரம வெளியீடான “ஸ்ரீ ரமண மஹா நிர்வாணம்” என்ற புத்தகத்திலிருந்து இங்கு தருகிறேன். அதுவும் இந்த வீடியோக் காட்சியின் குரலும் கிட்டத்தட்ட அதிகாரப் பூர்வமான ஒரே தகவலை வெவ்வேறு மொழிகளில் சொல்வதாகவே எனக்குப் பட்டது.


“ மஹாநிர்வாணத்துக்கு இரண்டு நாள் முன்னர், புதன்கிழமை மாலை, தம்மை தரிசித்த ஒவ்வொருவரையும் பகவான் அருளுடன் ஆழ்ந்து நோக்கினார். இதுவே முடிவான கடாக்ஷமோவென்று சில உள்ளங்களில் ஐயம் எழுந்தது, அவ்வாறேயாயிற்று. அடுத்த இரண்டு நாட்களும் உடற்களைப்பு, வழக்கம்போல் ஒருபக்கந்திரும்பிப் பார்க்க இடந்தரவில்லை. பார்வை நேரே நிலைத்திருந்தது; சில காற் கண்மூடியிருந்தார் பகவான்; எனினும் உடலிற் பிராணன் ஓடிய மட்டும், சற்றும் நீங்காத் தெளிவுடன் இருந்தார்; அவசியமானபோது, அருகில் இருந்தவருடன் பேசவுஞ்செய்தார்.

வியாழக்கிழமை காலை, நெஞ்சுக்கபத்தை நீக்கப் பஸ்மங் கொடுக்க வந்த வைத்தியர் ஒருவரை நோக்கி, பகவான், “ மருந்தெதற்கு? இரண்டு நாளில் எல்லாம் சரியாகிவிடும்” என்றுரைத்தார். அன்றிரவு, தமது பணியாளரைப் பார்த்து “ இனி என்னை யாருந் தொடவேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கள்; தூங்குகிறவர் தூங்குங்கள். தியானிப்பவர் தியானியுங்கள்” என்றருளினார்.

வெள்ளி முற்பகல், இடைப்பக்கத்தைப் பிடித்துவிட்ட கிராமவாசியாந் தொண்டர் ஒருவரை நோக்கி, பகவான், “ தாங்க்ஸ்” என்று கூறி முறுவல் பூத்தார். ஆங்கிலம் அறியா அவ்வன்பர் அதன் பொருள் புரியாது விழிக்கவே, பகவான், “ அதுதான் ஓய்! நன்றியைத் தெரிவிப்பதற்கான இங்க்லிஷ் வார்த்தை. ரொம்ப நன்றி என்றர்த்தம்” என்று முகமலர்ச்சியுடன் விளக்கியருளினார். பணி செய்தோர் யாவர்க்கும் முடிவாகத் தமது பேரருளை பகவான் இவ்வாறு வெளியிட்டார் போலும்!

அன்று மாலை, பெருந்திரளாகக் கூடியிருந்த அன்பர் யாவரும் பகவானது த்ரிசனம் பெற்ற பின் தமதிருப்பிடந் திரும்பாது, கவலையில் ஆழ்ந்து மௌனமாயமர்ந்தனர்.

மாலை ஆறு மணிக்கு மேல், சாய்ந்த நிலையிலிருந்த தமதுடலை நன்றாயுட்கார வைக்கும்படி தொண்டர்களை அண்ணல் கேட்டுக் கொண்டார். அவ்வாறே அவர்கள் ஆண்டான் திருமேனியை நன்கமர்வித்தனர்; தலையை ஒருவர் சற்றே தாங்கி ஏந்திக்கொண்டார். சுவாச சிரமம் ஏற்படாதிருப்பதற்காக டாக்டர்கள் பிராண வாயுவை நாசிப்பக்கங் காட்டத் தொடங்கவும், திறந்த வலக்கையின் குறிப்பால், பகவான் அதை நிறுத்தச் செய்தார்.

தொண்டர்களும் வைத்தியர்களுமாக அருகே நின்ற பத்துப் பனிரெண்டு பேர்களுக்குத்தான் அச்சிறு அறையில் இடமிருந்தது. ஏனைய அன்பரின் பெருங் குழாம், நிர்வாண நேரம் நெருங்கியதறிந்து, பகவான்பால் ஒருமுகமாய்க் கருத்தைச் செலுத்தி, அசைவற்ற அமைதியுடன் வெளியே காத்திருந்தது.

அறைக்குள்ளிருந்த அன்பர்களின் கண்ணுங்கருத்தும் பக்திக்கனலுடன் பகவானிடம் முற்றிலும் அழுந்தியிருந்தன. இரு தொண்டர்கள் விசிறி வீசிக் கொண்டிருந்தனர். பூரண மௌனத்தில் யாவரும் அமிழ்ந்தனர். எதிரே, அறையின் வெளியே அமர்ந்து, சில அன்பர்கள், ஸ்ரீ பகவான் அருள்வாக்காம் அருணாசலசிவ ஸ்துதியைப் பாடத் தொடங்கியதும், பகவான் ஒரு கணம் கண்ணைத் திறந்து தம்முன் நோக்கினார். பகவானது கண் வெளியோரத்திருந்து ஆனந்தவமுதத் துளிகள் சிந்தின.


அசலமாய் வீற்றிருந்த அண்ணலை ஒருவர்பின்னொருவராய் இத்தனை நாளும் தரிசித்துச் சென்ற அன்பர்கள் போலவே, இறுதி மூச்சுக்களும் ஒன்றன் பின்னொன்றாய் அமைதியாய் ஒரே சீராய் நடந்து சென்றன. இறுதி மூச்சும் இவ்வரிசையில் ஒன்றேபோன்றிருந்தது. அண்மையிலிருந்தோர் அடுத்த மூச்சை எதிர்பார்த்திருக்க, மேலுமோர் அசைவின்றிப் பிராணன் அப்படியே அமைதிமயமாய் அனைத்துலகின் ஆதாரமும் மூலஸ்தானமுமாகிய இதயத்தே முற்றிலும் ஒடுங்கியது.

பகவான் மஹாநிர்வாணம் எய்திய அதே கணத்தில் வான வெளியில் தெற்கேயிருந்து பகவானது இருக்கையின் மேல் வழியே வடதிசையிலுள்ள அருணாசலத்தை நோக்கிப் பிரகாசமிக்க ஒளியொன்று ஜோதிரேகை கீரிச் சென்றது. தமிழ்நாட்டின் பலவிடங்களில் இவ்வற்புதம் காணப் பெற்றதென்று பிறகு தெரிந்தது.”

காலங்களைக் கடந்த இந்த வீடியோக்களில் இடம் பெற்ற உரையும் குரலும் எத்தனை உருக்கமும் கவிதை நயமும் பொருந்தியவை. அக்குரலுக்குப் பின்னே ஆழமான உணர்வுகளைத் தூண்டும் வாத்தியங்களின் தேர்வும் இக்காட்சிகளை அற்புதமான அனுபவத்தை தரிசனத்தைத் தந்து மனதை நிறைக்கிறது- 61 வருடங்களுக்கு முந்தைய ஏப்ரலுக்கு ஒரே தாவலில்.

இந்த இறுதி நிமிடங்களைப் பதிவு செய்த பின் ரமணர் குறித்துப் படித்தவற்றில் சில துளிகள்:

# 1948ம் ஆண்டின் முடிவில் ரமணரின் இடது முழங்கைப் புறத்தில் ஒரு சிறிய தசை வளர்ச்சி தோன்றி சிறுகச் சிறுக வளர்ந்து அடுத்த ஃபெப்ருவரிக்குள் ஒரு நெல்லிக்காய் அளவு பெரிதானது. ஆச்ரம வைத்திய சாலையின் வைத்தியர் அதை சஸ்திர முறையில் எளிதாக நீக்கிக் கட்டுக்கட்ட அது இருந்த இடம் தெரியாமல் பத்து நாட்களில் குணமானது.

# இரண்டாம் முறை 1949ம் ஆண்டு மார்ச் மாதம் 27ல் அதே இடத்தில் மறுபடியும் தசை வளர்ச்சி காணப்படவே சென்னையிலிருந்து தேர்ச்சி பெற்ற சஸ்திர நிபுணர்கள் வருகை தந்து மறுபடியும் அதை நீக்கிக் கட்டுப் போட்டனர். ஆனால் நோயணுக்களை ஆராய்ந்தபோது அது கொடிய புற்றுநோய் ( சர்கோமா) எனக் கண்டுகொண்டனர். ஆயுர்வேதம் இந்நோயை ரக்தார்புதம் என அழைக்கிறது.

# ஏப்ரலில் ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் அதன் வளர்ச்சி தீவிரமாகவே இடது கையைத் துண்டிப்பதே மாற்றெனக் கருதி பகவானிடம் கூற அதற்கு ரமணர் மறுத்துவிட்டார். தொடர்ச்சியாக பச்சிலை வைத்தியமும் செய்யப்பட்டது.

# ஆகஸ்ட் 7ம் தேதி மூன்றாம் முறையாக சஸ்திர சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ரேடியம் சிகிச்சை அளித்தனர். குணமடைந்தது போலத்தோன்றிய இந்நோய் மீண்டும் பெரிதாகக் கிளைத்தது. டிசம்பர் 19ம் தேதி நான்காம் முறை சஸ்திர சிகிச்சை செய்யப்பட்டது.

# இந்நிலையில் ஹோமியோபதி மருத்துவ முறையும் கையாளப்பட்டது.இது தவிர மலையாள அஷ்டவைத்தியர் ஆயுர்வேத சிகிச்சையும் வங்காளக் கவிராஜர் வைத்தியமும் முயன்றும் எதுவும் தீர்வாய் அமையாது புற்று உள்முகமாய் தீவிரமாகப் பரவியது.

# 1950ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி ரமணரின் 70ம் ஜயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது அண்ணாமலையார் கோயில் யானை ரமணரை நீண்ட நேரம் சேவித்து நின்றதன் பின் தனது துதிக்கையால் பகவானது திருவடிகளை எட்டித் தொட்டு விடைபெற்றுக்கொண்ட அரிய காட்சி வழிபாட்டுக்கு வந்திருந்த ஒரு சமஸ்தான ராணியால் வீடியோ எடுக்கப்பட்டது. ( இந்த நிமிடம் வரை இந்த வீடியோவையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.)

# ஞானிக்குத் தேகமொழித்தலை சுமையிறக்குதலுக்கும் சாப்பிட்ட இலையை எறிதலுக்கும் மிக எளிய உவமைகளால் ஒப்பிடும் ரமணர் “நான் போய்விடப் போகிறேன் என்று கவலைப் படுகிறார்கள். எங்கே போவது? எங்கே வருவது. போக்கேது? வரவேது?” எனும் தத்துவ விசாரத்தின் மூலம் தனது அசரீரத் தன்மையையும் தேசகால வரையிலாப் பூர்ணாத்ம பாவத்தையும் உரைக்கிறார்.

# பண்டிதர்- பாமரர்- ஏழை- பணக்காரர்- குழந்தை- கிழவர் என்ற பேதமின்றி எல்லோரும் அவரைத் தரிசித்தார்கள். எல்லோரையும் ஒரே விதமான புன்னகையுடனேயே ரமணர் வரவேற்றார். எல்லா ஜீவராசிகளும் அவரோடு நெருக்கமாயிருந்தன. அணில்கள் அவர் சமிக்ஞைக்குக் கட்டுப்பட்டு அவர் மேனியின் மேல் ஓடி விளையாடின. குரங்குகள் அவர் கையால் பழங்களை வாங்கி உண்டன. அவற்றின் சர்ச்சைகளை ரமணர் பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார். மயில்கள் அவர் முன் ஆனந்தமாய் நடனமாடின.

# 20 ஆண்டுகளாய் ரமணரோடு வாழ்ந்த லக்ஷ்மி என்கிற ஆசிரமப் பசு தன்னை யார் துன்புறுத்தினாலும் தொழுவத்திலிருந்து அறுத்துக்கொண்டு ரமணரின் அறைக் கதவின் அருகில் புகார் சொல்லும் பாவத்துடன் வந்து நிற்பது அங்குள்ளோருக்கு அதியமான காட்சியாய் இருக்கும். ரமணாச்ரமத்தில் மான் - காகம்- நாய்-பசு லக்ஷ்மி ஆகிய நான்கின் சமாதிகளும் இருக்கின்றன.

30.11.11

சாகாத கனா (அல்லது) ஒரு ஆறரை நிமிஷங்கள் ப்ளீஸ்


கனவு காண்பது கடினமானதல்ல. அது மெய்ப்படுவதுதான் மிகக் கடினமானது. அபூர்வமானது. இதற்கான விலையும் வலியும் மிக மிக அதிகம். கனவுகளை அடைந்தவர்கள் இதற்கான வலியையும் சேர்த்து அடைந்தவர்களாயும் அந்த வலியை ரசித்து உண்டவர்களாயும்தான் இருக்கமுடியும். 

வாழ்வென்பதும் மரணமென்பதும் இரு எல்லைகளாய் நிற்க இடைப்பட்ட வெளியில் நாம் உதைத்துச் செல்லும் உதைபந்தாய் இப்படிப்பட்ட கனாக்கள். அந்தப் பந்து நிச்சயம் அதன் இலக்கைத் தொடும் என்பவர்களால் மட்டுமே விளையாடப்படும் அபூர்வமான ஆட்டம் அது. அப்துல் கலாமின் வார்த்தைகளில் தூங்கும்போது வருவதல்ல. தூங்கவிடாமல் செய்வதே கனா. 

எனக்குள் குமிழியிடும் 
அந்தக் கனா 
இன்றில்லை 
ன்றாலும் 
நாளை மலரும். 
என் சிகை 
நரைத்து விடலாம். 
என் கன்னங்களில் 
குழி விழுந்துவிடலாம். 
நான் போகும் பாதை 
மூடப்பட்டு விடலாம். 
ஆனாலும் 
வெற்றி தோல்வி 
எனும் 
அடையாளங்களை 
உதிர்த்த என் கனா 
எட்டப்பட்டிருக்கும். 
என் பெயரசையும்
வண்ணக்கொடி
அங்கே 
கட்டப்பட்டிருக்கும் 

என்கிற விதமாய் வரையப்படுகிறது கனவு குறித்த இந்த ஓவியம். 

சேர்ந்திசை (கோரஸ் என்று எதற்கும் எழுதிவிடுகிறேன்) என்கிற வடிவத்தை ஆகாஷ்வாணியைப் போல அதன் பின்னால் தூர்தர்ஷனைப் போல வேறு யாரும் பயன்படுத்தியதில்லை. உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று பல முதல்களைச் செய்துவிட்டு சப்தமில்லாமல் இருப்பது பற்றி இரைச்சலையும் எல்லா நேரத்திலும் கொஞ்சியும் வழியும் இந்தச் செயற்கைக் கலை வியாபாரிகளுக்கு ( புதிய தலைமுறை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக) யாராவது பொட்டில் அடித்தாற் போல சொன்னால் தேவலை.

தமிழில் பல நல்ல சேர்ந்திசைப் பாடல்களை காலத்தால் மறக்கமுடியாத எம்.பி. ஸ்ரீனிவாசன் தந்ததோடு போயிற்று இந்த வடிவம். ஒரு நல்ல செயல் நிகழும் போது நம் கண்ணுக்குப் புலப்படாத முப்பத்துமுக்கோடி தேவர்களும் வானிலிருந்து ததாஸ்து-அப்படியே ஆகட்டும் என ஆசீர்வதிப்பார்கள் என்பது இந்திய நம்பிக்கை. அந்த வகை இந்த சேர்ந்திசைப்பாடல்கள். அற்புதமான சத்தியமான இந்த வரிகளை உரத்த குரலில் சேர்ந்திசையாகக் கேட்கும்போது தேவர்களின் வாழ்தொலி போலக் கேட்பதாய் உணர்கிறேன். 

தமிழின் எல்லா நல்ல இசையமைப்பாளர்களும் கோரஸ் வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவை அத்தனையும் வெற்றிப்பாடல்கள்தான். ரெஹ்மான் மெட்ராஸ் கோரஸ் குழுவினரைக் கொண்டு இந்த ஆர்கெஸ்ட்ரைசேஷனை மிகச் சிறப்பான ஹார்மனியைக் (ஒத்திசைவு?) கொண்டு வந்திருக்கிறார். 

சூரியனின் கால் படாத புலரிக் கடல்மணலில் மெல்லக் கால் பதித்துக் கண்டெடுத்த சிப்பியை போல சின்ன நடுக்கத்துடனும் மென்மையுடனும் துவக்குகிற சித்ராவின் குரல் அப்புதையலை வெளிக்கொணர அதன்பின் 1.07ம் நிமிடத்தில் தொடங்கி 2.45 வரை இசைக்கப்படும் இசைக்கோர்வையைக் கேளுங்கள். அது தேவாமிர்தம்.

2.56ல் இருந்து 3.20 வரை -சித்ரா கண்ட கனவு ரெஹ்மானின் கைகளுக்கு மாற தான் மட்டுமே முதன்முதலில் கண்டெடுத்ததாயும் தனக்கே மறுபடியும் ஊர்ஜிதப்படித்திக்கொள்கிற ரகஸ்யமானதுமான ரெஹ்மானின் கீழ்ஸ்தாயிக் குரல் அற்புதமாய் அடுத்துத் தொட இருக்கிற உச்சத்தைக் கோடி காட்டிவிடுகிறது. பின் தனியாய் ஒரு சுடர் போல 3.23 முதல் 4.07 வரை அசைந்தெழும் அந்தக் குரல் கூட்டணியின் சங்கமத்தில் 4.30 முதல் சுட்டெரிக்காத பெரும் ஜ்வாலையாய் பீறிட்டுக் கிளம்புகிறது. முழுதும் கண்களை மூடிக்கேட்டு முடித்தபின் உங்களால் அடுத்த பத்து நிமிடத்துக்கு வேறெதுவும் செய்ய முடியாது. இது சத்தியம்.

மேற்கத்திய உருவத்தில் இந்த வரிகளை நனைத்த சித்ராவுக்கும் ரெஹ்மானுக்கும் எழுதிய வைரமுத்துவுக்கும் நன்றிச் சொல்லுக்கு மாற்றாக எந்த வார்த்தைகளை நான் உபயோகப்படுத்த முடியும்? ஒரு தடவை உன்னதமான உங்கள் குரலில் பாடிப்பாருங்கள். 

ஒரே கனா என் வாழ்விலே 
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன். 
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன். 
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன். 

வேண்டுமானால் கடைசி இரு வரிகளை 
- கொஞ்சலும் நிலா வாங்கலும் தேவைப்படாதவர்கள்- 
”வானும் மண்ணும் தேயும்வரை
வாழ்ந்து காட்டுவேன்” 
என்று இப்படி மாற்றிக்கொள்ளலாம். வைரமுத்துவிடம் நான் சொல்லிவிடுகிறேன். 

28.11.11

இன் தினோ தில் மேரா

LIFE IN A METRO.

அநுராக் பாசுவால் 2007ல் இயக்கப்பட்ட இந்தப் படம் [ ஈயடிச்சான் காப்பியாக இருந்தாலும் ] வழக்கமான படங்களிலிருந்து விலகி சிக்கலான உறவுகள் குறித்துப் பேசியது. ஆனால் நான் எழுத நினைப்பது அந்தப்படத்தைப் பற்றியல்ல. 

தோராயமாக 1500 நாட்களுக்கு முன்னால் ப்ரீதம் சக்ரபொர்த்தியால் (தமிழில் சக்கரவர்த்தி) இசையமைக்கப்பட்டு சய்யீத் காதிரி எழுதிய இன் தினோ பாடலைப் பற்றித்தான் மிகவும் சுறுசுறுப்பாய் இந்த வியாக்யானம். 

இடைவெளிகளை மாற்றி மாற்றி நிரப்பும் கிடாரின் குழைவும் மௌத் ஆர்கனின் நெளிவுகளும் நிரம்பிய மென்மையான ராக் வடிவப் பாடலான இப்பாடலை சோஹம் சக்ரபொர்த்தி பாட நமக்கு சந்தோஷம் வருகிறது. உற்சாகம் வருகிறது. யாருடைய தவறையும் மன்னிக்க வைக்கிறது. யாரிடமும் மன்னிப்புக் கோர வைக்கிறது.மொத்தத்தில் ஈகோவை விரட்டி போகோ பார்க்கும் குழந்தையாய்க் கிடத்தி விடுகிறது. நல்ல இசையும் எழுத்தும் செய்யும் மாயம் இவை. காலையில் காதில் பட்டுவிட்டால் குளியலறையிலோ சாலையின் போக்குவரத்து நிறுத்தத்திலோ அந்த நாள் முழுதும் முணுமுணுக்கவைக்கும் உத்தரவாதம் கொண்டது. 

பாடலின் நடுவே வரும் மெல்லிய குறும்புகள் கொண்ட உரையாடலுக்கு மொழிபெயர்ப்புத் தேவையில்லை. இருந்தாலும் பெயர்க்காமல் இருக்கமுடியவில்லை.

ஆ: நானும் ஒன்னோட இன்னிக்கி அந்தேரிக்கு வர்றேன்.போலாமா?
பெ: ம்ம். ஆனா நா லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட்ல போறேன்.
ஆ: நோ ப்ராப்ளம்.
பெ: என்ன நோ ப்ராப்ளம்? அதுல வரணும்னா நீ பொண்ணா மாறணும்.
ஆ: ஆனா ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல வர்றதுக்கு நீ ஆணா மாற வேண்டியதில்ல.

வழமை போல முழுமையாய் ரசிக்க என்னாலான வரைக்கும் மொழிபெயர்த்திருக்கிறேன்.

in dinodil meramujhse hai keh raha
இப்போதெல்லாம் என் மனது சொல்கிறது

Tu khwaab sajatu ji le jaradesign
கனவு காணவும் நேர்த்தியாய் வாழவும். 

Hai tujhe bhi ijaazatkarle tu bhi mohabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும் 
அதற்குரிமையுண்டு உனக்கு

Berang si hai badi zindagikuch rang toh bharoon
என் வாழ்க்கை வெளிறிப்போய்விட்டது
அவற்றை ஏதோ வண்ணங்களால் நிரப்புகிறேன்

Main apni tanahaayi ke waaste ab kuchh toh karoon 
என் தனிமைக்கும் ஏதாவது செய்யவேண்டும்

jab mile thodi fursat , khud se karle mohabbat 
நேரம் வாய்க்கையில் உன்னை நீ நேசி

Hai tujhe bhi izaazatkarle tu bhi mohabbat 
உனக்காக நீ காதலிக்கவேண்டும் 
அதற்குரிமையுண்டு உனக்கு

Usko chhupaakar main sabse kabhi le chaloon kahin door
அவளை ஒளித்துவைத்து எங்காவது 
தொலைதூரத்துக்குக்
கொண்டுசெல்ல வேண்டும்

Aankhon ke pyaalon se pita rahoon uske chehre ka noor
என் பார்வையால் அவளின் வசீகரத்தைப் பருக விரும்புகிறேன்

Is zamaane se chhupakar , puri karloon main hasrat
இந்த சமூகத்திலிருந்து மறைந்து என் துயரத்தைத்
தணிக்க விரும்புகிறேன்.

Hai tujhe bhi ijaazatkarle tu bhi muhabbat
உனக்காக நீ காதலிக்கவேண்டும் 
அதற்குரிமையுண்டு உனக்கு.

பிடித்தவர்களுக்கு மறுபடியும் கேட்கத் தோன்றும் .
பிடிக்காதவர்களுக்கும்தான்.

27.11.11

மழைக் கவிதை


























இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை

கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது

வரவேற்க விரும்பாத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்
பசியாற்றும்
அடுப்புக்களின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது

இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும்
வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது

நோயாளிகளின்
விடாத இருமலாயும்
அரைகுறை
மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாயும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை

இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்களைச்
சுமந்தாலும்.
தவறாமல்
எல்லா நேரமும்
இப்படியான
கவிதைகளைச் சுமக்கிறது.

26.11.11

போறாளே பொன்னுத்தாயி

ஒவ்வொரு முறையும் என்னைக் கலங்க வைக்கும் இந்தக் குரலையும் வரிக
ளையும் என் வட்டத்தில் பேச முடிந்த எல்லோரிடமும் பேசித் தீர்த்தாயிற்று. இன்னும் தீரவில்லை இதன் மூச்சுமுட்ட வைக்கும் துயரம். இனி இப்படி ஒரு பாடலைப் பாட ஸ்வர்ணலதா வரமாட்டார். வைரமுத்துவாலும் இப்படி ஒரு பாட்டை எழுதமுடியாது. அதேதான் ரெஹ்மானுக்கும்.

அந்தப் பாடலின் ஆறு நிமிடங்களும் கடப்பதற்குள் ஒரு முழு வாழ்வையே கடப்பது போல் எத்தனை அனுபவங்கள்? கிராமத்து அப்பாவிப் பெண்ணொருத்தி.மனதின் கட்டளைக்குப் பலியாகி ஒருவனைக் காதலித்து அவன் விட்டுச் சென்ற மீளாக் காயத்தைக் கடைபரப்புகிறாள். புகைந்தபின்னும் மணத்தை விட்டுச் செல்லும் ஊதுவத்தியைப் போல இந்தப் பாடலின் குரல் முடிந்த பின்னும் நம் புலன்களின் ஆணிவேர் வரை அசைத்தெடுத்து விடுகிறது. 
ரெஹ்மானின் இசையில் ரெஹமானும் நஸ்ரத் ஃபடே அலி ஃகானும்  ஹிந்தியில் கொடுத்த சந்தா சூரஜ் பாடலின் அனுபவமும் ஸ்வர்ணலதாவின் உயிரைத் துளைக்கும் குரலும் கவிதையாய் மிளிரும் வைரமுத்துவின் வார்த்தைகளும் உர்து மொழியில் மட்டுமே கிடைக்கும் கஸல் அனுபவமும் வேறுவேறு ரஸானுபவங்கள்..

பாடலுக்கு ஏற்ற வரிகளும் வார்த்தைகளும் ஒரு பாடலை உன்னதமான கவிதையாக்கி விடுகின்றன.

போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோறுந் தந்த 
மண்ண விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழிய விட்டு
போறாளே பொட்டப் புள்ள 
ஊர விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா 

எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சீவன்
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்ட போல

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் 
ஊமையும் ஊமையும்
பேசிய பாசையடி
தெக்கத்திக் காத்து 

தெச மாறி வீச
ஒண்ணான மேகம் 
ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாத்து ஒண்ணு 
வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது 
சாதிக்கு ஆனதடி

நெஞ்சுக்குழி காஞ்சு 
நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் 
வீட்டுக்குங் காட்டுக்குங் 
கூட்டுக்குள் இழுக்குதம்மா
சேமிச்ச காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு 
பாரமம்மா பாரமம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் 
தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு 
ஏழைக்கும் வாழைக்கும்
நாளைக்கு நன்மையம்மா

பழகின மண்ணை விட்டு நிர்பந்தங்களுக்காகத் தொலைதூரம் போகும் எல்லாக் கருத்தம்மாக்களுக்கும் கருத்தப்பன்களுக்கும் எழுதப்பட்டுப் பாடப்பட்ட ஒரு உன்னதமான வெள்ளை மலரையொத்த பாடல் இது. [இதற்குச் சமமான மற்றொரு பாடலான விடைகொடு எங்கள் நாடே வேறொரு மனதை உலுக்கும் ரகம். அது வேறொரு இடுகையில் எழுதுவேன்.]

தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ணோடு பால் பீய்ச்சும் மாட்டையும் பஞ்சாரத்துக் கோழியையும் அஞ்சாறு சீவனையும் விட்டுப் பிரிய நேர்ந்தால் அவைகளும் கூடத்தான் கண்ணீர் சிந்தியிருக்கும். 

கருத்தம்மாவுக்குத் தெரிந்த உயர்ந்த ஜாதிப்பூ சாமந்திப்பூவும் ஊமத்தம்பூவுமே. அதில் தான் எந்தப் பூவோ எனக் கவிதை கேட்க நேரும்போது ரோஜாக்களும் மல்லிகையும் கூட கருத்தமாவுக்காக இரண்டு சொட்டுக் கண்ணீரை உதிர்க்கும். பொதிமாட்டு வண்டியில் எல்லா பாரமும் ஏற்றி முடித்தான பின் இடமிருந்தால் அதன் மேலே போனால் போகிறது என்று போட்டுவைக்கிற வண்டியோட்டியின் மூட்டை போலிருக்கும் அவள் வாழ்க்கைக்கு வேறேது பொருத்தமான உவமையாய் இருந்துவிடும்?

ஊமையும் ஊமையும் பேசிய பாஷை போல பூசப்பட்ட நேசமும் பாசமும் ஆகிப்போகும் போது காற்றால் திசைமாறிய மேகத்தின் கிட்டாத உயிர்த்துளிக்காய் வாடி நிற்கும் நாற்றாகி விடுகிறது.                                                                            
                                              
ஒருவருக்காகக் காத்து நின்ற ஓர் உயிர்த்தவிப்பு யாருக்காகவோ எனும்போது அவளின் காதல். எத்தனை உருக்கமான கற்பனை?  ஆனால் அந்த வரியை வைரமுத்துவிடம் அனுமதி கேட்டுக்கொண்டு இப்படித்தான் பாடுவேன் நான். கடைசியில் சாமிக்கு நேர்ந்தது பூசாரிக்கு ஆனதடி. முகமில்லாத சாதியை விட முகம் தெரிந்த தனக்கு விருப்பமில்லா ஒரு பூசாரிக்குப் போனதன் துயரம் இன்னும் ஆழமான வடுவாய் மனதின் சுவர்களில்.           
                                                                                                               
மூட்டை மூட்டையாய் சேமித்த அத்தனையும் பொழுதுவிடியும் போது கலைந்த கனவு போல செல்லாக்காசாய் மாறும் சோகம் இழப்பவனுக்கு மட்டுமே நேரும் தீராக் காயமானாலும் அது நம்முடைய சேமிப்பையும் அல்லவா செல்லாக்காசாகிப் போனதுபோல உலுக்குகிறது? 

கன்னங்களில் வடிந்து காய்ந்து போன உவர்நீர்க்கோலங்களாய் வாழ்க்கை தீய்ந்து போனதாய் முடிக்கும் போதும் பொறு பொறு நாளை உனக்கான வாழ்க்கை ஒரு வாழையைப்போல அதன் கீழுள்ள கன்று போல நன்மை செய்யக் காத்திருக்கிறது என்று நம்பிக்கையை அவள் தனக்கே தனக்காய் சொல்லிக்கொள்ளும் போது அந்தக் கவிதை உன்னதமான ஒரு காவியமாய் நம் மனதில் அசைகிறது.

இந்தப் பாடல் தந்த அனுபவம் நான் பெற்ற பேறு. சாகும் வரையும் செத்த பின்னும் என்னை விடாது. தேசிய விருதுகள் இதுபோன்ற பாடல்களால் பெருமை அடைகிறது என்றாலும் உலகத் தரத்தை அனாயாசமாகத் தொட்ட பாடல். ரெஹ்மானுக்கும் ஸ்வர்ணலதாவுக்கும் வைரமுத்துவுக்கும் நன்றிகள் சொல்லி மிகுந்த மனநிறைவுடன் எழுதிமுடித்த பின்னும் இன்னும் அந்தக் குரல் சயனைட் போலத் தொடர்கிறது. என்ன செய்ய?

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...