1.
அது ஒரு மழைக்காலம்.
இளந்துறவி ஒருவன் ஒரு வேலைக்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டான். பயணத்தின் நடுவே ஒரு ஆறு குறுக்கிட்டது.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. அகண்ட ஆறு அது. ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உரத்த குரலில் பதட்டத்துடன் அவரிடம் கேட்டான் இளந்துறவி.
“ஐயா! நான் ஆற்றின் அக்கரைக்குச் செல்வது எப்படி?’’
குரு சொன்னார்.
மகனே! நீ ஆற்றின் அக்கரையில்தான் இருக்கிறாய்.
எதைக் கடக்க
முடியுமோ
அதையே கடக்க
முடிகிறது.
எதைக் கடக்க
இயலாதோ
அதைக் கடக்கத்
தேவையில்லை.
2.
பார்வையற்ற ஒருவன் தன் நண்பனைக் காண பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருள் கவிழத் துவங்கியது மாலையின் மேல்.
”ஐயோ! நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன்” என்று கிளம்ப எழுந்தான்.
”நன்றாக இருட்டிவிட்டது. இதற்கு மேல் கிளம்பி என்ன செய்யப் போகிறாய்? தங்கிவிட்டுக் காலையில் கிளம்பு” என்றான் நண்பன்.
“இருளும் ஒளியும் உனக்குத்தான். எனக்கு எல்லாம் ஒன்றுதான். கவலைப் படாதே. நான் கவனமாகப் போய்விடுவேன்” என்று புறப்பட்டான்.
”எதற்கும் இந்த லாந்தர் விளக்கை எடுத்துப் போ. பயன்படும்” என்றான்.
”இதனால் எனக்கு என்ன பயன்? சொல்லப்பா” என்றான் பார்வையில்லாதவன்.
”உனக்காக இல்லை இது. பார்வையுள்ளவர்களுக்கு நீ வருவது தெரியும் பொருட்டுத்தான்” என்றான் நண்பன் சிரித்தபடி.
”வேடிக்கைதான். கொடு” என்றபடி லாந்தரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
காட்டு வழியே போய்க்கொண்டிருந்தபோது எதிரில் யாரோ வரும் ஓசை கேட்டது.
”தம்பி! எங்க போறப்பா இந்த இருட்டுல. நா வேணா கூட வரட்டுமா துணைக்கு?” என்றார் ஒரு பெரியவர்.
சிரித்தபடியே” வேணாங்க. அதான் லாந்தரை எடுத்துக்கிட்டுப் போறேனே? கவனிக்கலையா?” என்றான்.
”அது அணைஞ்சு போச்சுப்பா. அதைக் கவனிச்சதுனாலதான் கேட்டேன்.வா. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்” என்று கைகளைப் பற்றி வெளிச்சமான பகுதியை அடையும்வரை அவனை கூட்டிச் சென்றார்.
பார்வை
இருக்கும்போதும்
இல்லாதபோதும்
எதைப்
பார்க்கிறோம்
என்பதும்
எதைப்
பார்க்காது போகிறோம்
என்பதும்
பிறர்
நம்மைப்
பார்க்கும்போதுதான்
நமக்குத் தெரிகிறது.










