12.2.15

தனியே ஒரு கரித்துண்டு


தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தையே உபதேசிப்பது போல் தோன்றவே, போவதை நிறுத்தி விட்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பனிக்கால இரவில் பாதிரியார் அவனைச் சந்திக்க வந்தார்.

' அவர் அநேகமாகத் தன்னை மீண்டும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வற்புறுத்தும் பொருட்டே வந்திருக்கலாம்' என்றெண்ணினான் ஜுவன். பலமுறை தான் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் இருந்ததன் உண்மையான காரணத்தைத் தன்னால் சொல்ல முடியாது என்றும் அவன் எண்ணினான்.

ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி சமாளிக்கும் எண்ணத்தில், கணப்பு அடுப்பின் அருகில் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டபடி, தட்ப வெப்பம் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

பாதிரியார் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் ஏதாவது பேச முயன்று தோற்று தன் முயற்சியைக் கைவிட்டான் ஜுவன். சுமார் அரைமணி நேரம் இருவரும் எரியும் நெருப்பை உற்றுப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

கணப்பு அடுப்பின் இன்னும் ஒரு கட்டை எரிய மீதமிருக்கையில் எழுந்த பாதிரியார், நெருப்பில் இருந்து ஒரு கரித்துண்டை விலக்கி தனியே வைத்தார்.

அந்தத் துண்டு கனன்று எரியப் போதுமான நெருப்பு இல்லாமல் அணைந்து குளிரத் தொடங்கியது.

' இரவு வணக்கம்' என்றபடியே புறப்படத் ஆயத்தமானார் பாதிரியார்.

' இரவு வணக்கம். மிகுந்த நன்றி' என்ற ஜுவன், " எவ்வளவு கொழுந்துவிட்டு ஒரு கரித்துண்டு கனன்று கொண்டிருந்தாலும், அதை நெருப்பில் இருந்து விலக்கினால், அது அணைந்து விடும். எவ்வளவு புத்திசாலியாக ஒருவன் இருந்தாலும், சக மனிதர்களிடம் இருந்து விலகி இருந்தால், விரைவில் அவன் ஒளி மங்கியவனாகி விடுவான். அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை ஆலயத்தில் சந்திக்கிறேன்" என்றான்.

(பௌலோ கோயெலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து The solitary piece of coal என்ற பத்தி)

11.2.15

நீலகிரிக் குன்றுகளில்......

நான் ஆஸ்ட்ரேலியாவைச் சென்றடைந்த மறுநாள், சிட்னிக்கு அருகில் ஒரு பூங்காவிற்கு என் பதிப்பாளர் அழைத்துச் சென்றார். அதனுள்ளே இருந்த வனப்பகுதியில் பாறைகளால் அமைந்த குன்றுப் பகுதி நீலகிரி என்றழைக்கப்படுகிறது.

" அவர்கள் மூன்று சகோதரிகள்" என்று சொன்ன என் பதிப்பாளர், கீழ்க்கண்ட செவிவழிக் கதையைக் கூறலானார்.

ஒரு மந்திரவாதி தன் மூன்று சகோதரிகளுடன் சென்று கொண்டிருந்த போது, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான போர்வீரன் ஒருவன் அவரிடம் சென்று,

" இந்த அழகான சகோதரிகளில் ஒருவரை மணக்க விரும்புகிறேன்" என்றான்.

" இவர்களில் ஒருவரை மட்டும் நீ மணந்தால், மற்ற இருவரும் தாங்கள் அழகற்றவர்கள் என்று கருத நேரிடும். அதனால் மூவரையும் மனைவிகளாய் ஏற்றுக் கொள்ளும் இனத்தைச் சேர்ந்த போர்வீரனைத் தேடிச் செல்கிறேன்" என்ற மந்திரவாதி மேலே கடந்து சென்றார்.

ஆஸ்ட்ரேலியா முழுவதும் பல காலம் சுற்றி அலைந்த பின்னரும் அப்படி ஒரு இனத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

நடந்து நடந்தே வயதாகியும், சோர்ந்தும் போன சகோதரிகளில் ஒருத்தி, " குறைந்த பட்சம் ஒருவராவது சந்தோஷமாய் இருந்திருக்கலாம்" என்றாள்.

" நான் தவறு செய்து விட்டேன். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது" என்றெண்ணினார்.

ஒருவரின் மகிழ்ச்சி என்பது பிறரின் துயரம் ஆகாது என்ற படிப்பினையை, அந்தக் குன்றுகளைக் கடந்து செல்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில், அவரின் மூன்று சகோதரிகளையும் கற்குன்றுகளாக மாற்றினார் அந்த மந்திரவாதி.

(பௌலோ கோயெலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து In the blue mountains என்ற பத்தி)

10.2.15

ஒன்றில் எல்லாம்

















சௌ பௌலோவில் பிறந்து ந்யூயார்க்கில் வசிக்கும் ஓர் ஓவியரின் இல்லத்தில் ஒரு கூட்டம்.

கோணங்கள் மற்றும் ரசவாதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் 'நம் ஒவ்வொருவரிலும் இந்தப் பிரபஞ்சம் அடங்கியிருக்கிறது. அதனால் அதன் வளத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்' என்ற ஒரு ரசவாத சிந்தனையை நான் விளக்க முயன்ற போது, என் வாதத்தை விளக்க சரியான வார்த்தைகளோ, உருவகமோ கிடைக்காமல் தடுமாறினேன்.

அமைதியாய் இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த ஓவியர் எழுந்து, அவர் அறையின் சாளரம் வழியே சாலையை அனைவரையும் பார்க்கும்படிச் சொன்னார்.

" என்ன தெரிகிறது?" என்று கேட்டார்.

" இந்தச் சாலை தெரிகிறது" என்றார் ஒருவர்.

அந்தக் காட்சி தெரியாதபடி சாளரத்தை ஒரு தாளால் அந்த ஓவியர் மூடினார். பிறகு ஒரு பேனாக்கத்தியால் கீறி, ஒரு சதுரத்தை உருவாக்கினார்.

" இதன் வழியே யாராவது பார்க்க நேர்ந்தால் என்ன காட்சி தெரியும்?"

" அதே சாலைதான்" என்ற பதில் வந்தது.

அந்த சதுரத்தின் மேலே மேலும் பல சதுரங்களை வெட்டி உருவாக்கினார்.

" எப்படி ஒவ்வொரு சதுரத்தின் உள்ளும் இந்தச் சாலையின் முழுக் காட்சியும் மறைந்திருக்கிறதோ, அதுபோல் நம் ஒவ்வொருவரின் ஆன்மாவினுள்ளும் இந்தப் பிரபஞ்சம் மறைந்திருக்கிறது" என்றார் ஓவியர்.

அவர் உருவாக்கிய அற்புதமான அந்த உருவகத்தை அனைவரும் பாராட்டினோம்.

( பௌலோ கோயெலோவின் " நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து " how one thing contain everything" என்ற பத்தி.)

9.2.15

சிற்றெறும்பு குருமார்கள்

நேற்று முதல் எங்கள் வீட்டு சர்க்கரையையும், கடலை மாவையும் ருசி பார்க்க சிற்றெறும்புகள் வரிசையில் வர ஆரம்பித்து விட்டன.

"வாங்க வாங்க குட்டிப் பசங்களா! ஓய்வு நல்ல முறையில் செலவானதா?" என்று வரவேற்றேன் புன்னகையுடன்.

:சிவராத்திரிக்குப் பின் பனி சிவசிவா என்று போகும்' என்ற பழமொழியின் அளவுகோலால் நாம் கோடையை அளப்பது வழக்கம்.

ஆனால் கோடை துவங்கி விட்டதை இத்தனை துல்லியமாக - மைக்ரோ நொடியைக் கூடக் காட்டும் - மிக நவீன கடிகாரம் கூடச் சொல்லி விட முடியாது.

இத்தனை நாளும் அந்தச் சிற்றெறும்புகள் எங்கே வாழ்ந்தனவோ, எப்படி உண்டனவோ தெரியவில்லை என்று முதலில் யோசித்த சிறுபிள்ளைத்தனம் என்னை வெட்கச் செய்தது.

மாறாக இறுதியாய் மழைக் காலத்தின் முந்தைய நாள் வரை சேமித்த, அவற்றின் சேமிப்பில் இருந்த சேகரம் அவற்றின் தேவையை எப்படி இத்தனை கச்சிதமாக நிறைவு செய்தது என்ற பிரமிப்பு எனக்குள் மலைப்பைக் குமிழியிடச் செய்தது.

ஆனாலும் நாளை முதல் நம் உழைப்பு தொடங்க இருக்கிறது என்பதை ஒரே நேரம் உணர்ந்து, கட்டுக்கோப்புடன் பணியில் இறங்கி விட்டன.

எந்த ஆரவாரமும் இன்றி நிசப்தம் ஒலிக்க இயங்கும் அந்தச் சிற்றெறும்புகள் உருவத்தால் மட்டுமே சிறியன. போதனையில் அவையே நமது உண்மையான குருமார்கள்.

8.2.15

ஓர் உரையாடல்


ஒரு தாயின் கருவில் இரு குழந்தைகள். அவற்றின் இடையே நிகழ்ந்த ஓர் இயல்பான உரையாடல் இது.

அ: நாம் இந்த இருண்ட அறையை விட்டு வெளியேறிய பின் நமக்கு வாழ்க்கை உண்டென்று நம்புகிறாயா?

ஆ: அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக நம்புகிறேன். இங்கிருந்து வெளியேறிய பின் வாழ இருக்கும் வாழ்க்கையின் ஒத்திகை என்றே இதை நம்புகிறேன்.

அ: உன் நம்பிக்கை முட்டாள்த்தனமானது. இங்கிருந்து வெளியேறி நாம் எங்கும் செல்லப் போவதில்லை. இதுதான் நம் இறுதிப் பயணம். சரி. ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இங்கிருந்து வெளியேறிய பின் என்ன நடக்கும்? உன் கற்பனையையும் கேட்கலாம்.

ஆ: எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இங்கே இருப்பதை விட அதிக வெளிச்சம். அதிகக் காற்று. நிச்சயம் கால்களால் நடக்கவும், வாயினால் உண்ணவும் நாம் கற்றுக் கொள்வோம் என நம்புகிறேன். நம்மால் இப்போது யூகிக்க முடியாத பிற புலன்களின் உதவியும் நமக்குக் கிட்டலாம்.

அ: சரியான வேடிக்கைதான். கால்களால் நடப்பதாம். வாயினால் உண்பதாம். முட்டாள். தொப்புள் கொடியில்லாமல் எப்படி உண்பதாம்? நமக்கு உணவளிக்கும் அதுவும் சிறிதாகிக் கொண்டே வருவது உன் கண்ணில் படவில்லை? நம் வாழ்க்கை இங்கேயே முடிந்து போய் விடும். புரிந்து கொள்.

ஆ: அப்படி இல்லை. இங்கே நாம் வாழும் வாழ்க்கையை விட அது வேறுபட்டதாக ஒருவேளை இருக்கலாம். தொப்புள் கொடி இனி நமக்குத் தேவையற்றதாய் மாறலாம்.

அ: பிதற்றல். அப்படி இங்கிருந்து வெளியேறிய பின் வாழ்க்கை உண்டு என்றால், இங்கிருந்து சென்ற ஒருவர் கூட இங்கு ஏன் திரும்பி வரவில்லை? என்னைப் பொருத்தவரை இங்கேயே நம் வாழ்க்கை முடிந்தது. வெளியே சென்ற பின் மேலும் அடர்த்தியான இருள். மேலும் அடர்த்தியான நிசப்தம். கூடுதலான மறதி.

ஆ: எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் நிச்சயமாக நம் அன்னையைச் சந்திப்போம் என நம்புகிறேன். அவள் நம்மை கவனித்துக் கொள்வாள் எனவும் நம்புகிறேன்.

அ: ஹாஹாஹா! அன்னையா? யாரவள்? அப்படி ஒருத்தியை நம்புகிறாயா? அவள் இருப்பது உண்மையானால் இப்போது எங்கே இருக்கிறாள்?

ஆ: நம்மைச் சுற்றி இருப்பது அவள்தான். அவள் இன்றி நாம் இல்லை . அவளால்தான் நாம் இருக்கிறோம். அவளில்தான் நாம் வாழ்கிறோம். அவளின்றி எதுவும் இல்லை . இருக்கவும் முடியாது .

அ: என்னால் காண இயலாத ஒன்றை இருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஆகவே அவள் இல்லை என்றே தர்க்க ரீதியாக நான் கருதுகிறேன்.

ஆ: அப்படி இல்லை. சில சமயங்களில் நாம் மிகுந்த  அமைதியில், மிகுந்த தியானத்தில்  தோய்ந்திருக்கும் போது, மிகுந்த நுட்பத்துடன் செவிமடுக்கும் போது அவள் இருப்பை உணர நேரலாம்.அவளின் அன்பில் நனைந்த குரலை மேலிருந்து கேட்க வாய்க்கலாம். நம்பிக்கையுடன் மட்டும் இரு. அது நம்மை சரியான பாதையில் செலுத்தும்.

முதன்முறையாக 'அ' வால் உரையாடலைக் கொண்டு செல்ல வார்த்தைகள் இல்லை. இருப்பதை விரும்பவும் இல்லை.

(வெய்ன் டயரின் Your sacred self ல் இருந்து நெடிய ஆழங்களைத் தொடும் இந்தக் குட்டிக் கதை.)

6.2.15

மீண்டும் உங்கள் முன்னே-
=========================
வலைப்பூவின் உதவியாலேயே தரமான எழுத்தையும், ரசனையையும் சந்திக்க நேர்ந்தது. பல நேர்த்தியான எழுத்துகள் அறிமுகமான சூழல். அதன் கிறக்கம் இன்னமும் தீரவில்லை. என் முதல் காதல் இன்னமும் வலைப்பூதான்.

இத்தனை நாள் முகநூலில் எழுதிய பின்னாலும் 2008 முதல் எழுதி வந்த என் வலைப்பூ வற்றிக் கிடப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இனி நான் இங்கு ஏற்றும் ஊதுவத்திகளில் ஒன்று முகநூலிலும் இருக்கும்.

என்னை இன்னமும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் காலடிகளைப் பதிக்கிறேன்.

அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு.

12.4.14

ஒரு செடியும் வனமும்

புகைப்படம்: ஒரு செடியும் வனமும்
===================
இலையாகவும் மிதந்தாயிற்று.
கல்லாகவும் கிடந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாகவும் திரிந்தாயிற்று.
பருந்தாகவும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.
இலையாயும் மிதந்தாயிற்று.
கல்லாயும் கி
டந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாயும் திரிந்தாயிற்று.
பருந்தாயும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.

23.3.14

இரு திறவுகோல்கள்


#
மெளனம் என்பது
நீங்கள் நினைப்பது போல்
அமைதியல்ல.
சம்மதம் அல்ல.
சகித்தல் அல்ல.
தத்துவச் செறிவில் தோய்ந்த
நிறைவுமல்ல எப்போதும்.
தளும்பும் குளத்தின்
தாமரையாய் முகம் காட்டி -
அடிமென்மணலின்
ஆழங்களில் புரள்கின்றன
அதன் கோக்க இயலாச் சொற்கள்.


#
நீ ஏற்றுக் கொண்டதும்
வியப்பாய் இல்லை.
நிராகரித்து நகர்ந்ததும்
துயரூட்டவில்லை.
நான் சுமந்து திரியும்
ஒற்றைத் திறவுகோல் 
செய்வதில்லையா
ஒரு நேரம் திறக்கவும்
ஒரு நேரம் மூடவும்?

7.3.14

ஒரு குளமும் ஒரு துளியும்

#
என் சலனமற்ற குளத்தில் 
உன் கூழாங்கல்லை எறிந்து 
மூழ்க வைக்கிறது காலம். 

அலையின் சலனம் 
மொக்குகள் மலரக் காத்திருக்கும் 
தாமரைகளைத் தொட்டுச் சமனப்பட -

மீண்டும் குளம் ஆசை கொள்கிறது
மற்றொரு கல்லெறிக்காக.

அலை தயாராகிறது
தாமரையின் தொடலுக்காக.


#

நீயோ பெருமழை.
நான் உன் சிறுதுளி.
நீ பொழிகிறாய்.
நான் வீழ்கிறேன்.
கொடுந்தூரம் கடந்து
கரிக்கும் பெருங்கடலில் 
பொழிந்து உப்பாகிறாய் நீ.
ஒற்றைச் சிப்பியின்
இதழை முத்தமிட்டு
ஸ்வாதி முத்தாகிறேன்
நான்.


21.2.14

இரு கவிதைகள்

#
ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
ஊனம் என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகக்
கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
சிறகு என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகப்
பறந்து கொண்டே இருக்கிறது.

#
ஒரு நீர்த்தொட்டியின் 
துவாரத்திடம் இருந்து
உள்ளிருப்பவற்றை
வெளியேற்றவும் - 
நடுக்கடலில் படகின் 
துவாரத்திடம் இருந்து 
வெளியிருப்பவை
உட்புகாதிருக்கவும் - 
கற்றவனுக்கு 
வேறேதும் போதனை 
புதிதாய்த் தேவையில்லை.

17.2.14

கவிதையின் இறுதி வாக்கியம்.

"கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்." நீங்கள் படித்துக் கடக்கும் இந்த முதல் வாக்கியம் உண்மையிலேயே ’இறுதி வாக்கியமாய் இருக்கட்டும்’ என நான் எடுத்து ஒதுக்கி வைத்ததுதான். உங்களுக்கு இது வினோதமாய் இருக்கலாம். -ஒரு புத்தகத்தை இறுதிப் பக்கத்திலிருந்து வாசிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் -அல்லது முதலில் பரிமாறப்பட்ட மிகப் பிடித்த இனிப்பை இறுதியில் சாப்பிட எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இது ஒன்றும் பெரிய வியப்பாய் இருக்க முடியாது. ’ஏறுபவர்களும் இறங்குபவர்களும் தீர்மானிக்கும் ஒரு மாடிப்படியின் முதலும் இறுதியுமான படிகள்’ என்ற இறுதி வாக்கியமும் அல்லது ’ஒரு செலாவணியாகும் நாணயத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தல் போல’ என்றெழுதப்பட்ட இந்த வாக்கியமும் என் இரு கவிதைகளின் இறுதி வாக்கியம்தான். எனக்கு ஒரு கவிதையின் இறுதி வாக்கியம் போதும் முழுக் கவிதையின் நுனி அகப்பட. இந்த வினோதமான பழக்கத்தின் நிழலில் இந்தக் கவிதையின் நுனி உங்களுக்கு அகப்படாவிட்டால் பரவாயில்லை. "கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்."

14.2.14

நானும் நீங்களும்


உங்களுக்கு
மிகப் பரிச்சயமான 
மலையடிவாரத்தின் 
அண்மையில்தான் நிற்கிறேன்.
இப்போது ஓலமிடும் காற்றை 
நீங்கள் கேட்கமுடியும்.
ஓடிக்கொண்டிருக்கும் நதியில் 
இதோ கால் நனைக்கிறேன் 
என்ற இந்த வரியில் 
உங்கள் பாதங்களும் நனைகின்றன.
வேறெங்கோ பார்த்துக்கொண்டே 
எதிர்பாரா பள்ளத்தில் தடுக்கி விழுகிறேன்.
மன்னியுங்கள். என்னால் 
நீங்களும்தான் விழுந்து எழுகிறீர்கள்.
கண்ணில் பட்ட ஆட்டுக்குட்டியை 
அதன் அச்சத்துடன் தூக்கியணைத்துக் 
கொஞ்சி முத்தமிடுகிறேன்.
உங்கள் நாசியிலும் 
கிளர்வூட்டுகிறது தோல் மணம்.
உங்களுக்குத் தெரியாத 
ஒரு மூன்றாம் மனிதருடன் 
நிகழ்த்தும் உரையாடல் 
என்னைப் போலவே 
உங்களுக்கும் அலுப்பூட்டுகிறது.
இதோ நான் போக வேண்டிய இடம் வந்து 
உங்களுடன் சேர்ந்து உள்ளே நுழைகிறேன்.
கவிதை வெளியே காத்து நிற்கிறது.

12.2.14

தேவி காலோத்தரம் மற்றும் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம்


”தேவி காலோத்தரம்”, ”ஆன்மசாட்சாத்காரப் பிரகரணம்” இவை இரண்டும் இரு தொன்மையான நூல்கள். அவற்றிலிருந்து சில பார்வைகள்.

#######

வேர் எதுவுந் தான் பிடுங்க வேண்டாம் இலையினையும்
வேறுபடுத்தும் செயலும் வேண்டாமே - சீறி
இனாத செயவேண்டாம்  எவ்வுயிர்க்கும் பூவும்
அனாதரவாய்க் கிள்ள வேண்டாம்.

சுயமாகவே உதிர்ந்த தூமலர்கள் கொண்டே
செயக்கடவன் பூசை சிவனுக்கு - இயற்றியிடும்
மாரணம் உச்சாடனமுன் மற்ற வித்து வேடணமும்
பேருற்ற தம்பனமும் பின்.

இவை இரண்டும் "தேவி காலோத்தரம்" என்று அழைக்கப்படுகிற மிகத் தொன்மையான நூலில், சிவனுக்கும் உமைக்கும் இடையேயான உரையாடலின் மொழிபெயர்ப்பு.

சமஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்த்து வெண்பாவாக இயற்றியவர் ரமண மகர்ஷி. இந்த இரு பாடலிலும் தனக்கான வழிபாடு எப்படி இருக்க வேண்டுமென ஈசனின் உத்தரவாய் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.

பாடலின் பொருள் புரியும்படியாய்த்தான் இருப்பதாய் நினைக்கிறேன்.

தன் பூசைக்கு வேரோ, இலையோ பிடுங்கப்பட வேண்டாம். எந்த ஓர் உயிருக்கும் கோபத்தினால் துன்பமளிக்கக் கூடிய செயல் எதையும் செய்ய வேண்டாம். மென்மையான மலர்களைச் செடியிலிருந்து கிள்ள வேண்டாம்.

தானாய் உதிர்ந்த மலர்கள் கொண்டு சிவனுக்குச் செய்யப்படும் பூசையே உகந்தது. இதை விட்டு மந்திர உச்சாடனங்களால் அழிவை உண்டாக்குதல், மந்திரப் ப்ரயோகத்தினால் ஏவுதல், விரட்டுதல், ஸ்தம்பித்துப் போகச் செய்யும் தம்பனம் செய்தல் சிவனுக்கு உகந்ததல்ல.

அஹிம்சை என்பதன் வேர் நீளும் தொலைவு மலைப்பானதுதான்.

########

மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் இன்றைய துறவிகளின் மனநிலையை ஒப்புநோக்க "ஆன்ம சாட்சாத்பிரகரணம்" எனும் தொன்மையான நூலின் இரு பாடல்கள் துணை புரிகின்றன. 

"ஆன்ம சாட்சாத்பிரகரணம்" இது சிவன் முருகனுக்கு உபதேசித்த மிகத் தொன்மையான நூல். வடமொழியிலிருந்து தமிழில் வெண்பாவாக்கியது ரமண மகர்ஷி. 

மொத்தம் 62 பாடல்கள் கொண்ட இந்த நூலின் இரு பாடல்களை இப்போது பார்ப்போம். 

செல்லினும் நிற்கினு நித்திரை செய்யினும்
புல்லினும் சாக்கிர போசனநீர் - கொள்ளினும்
காற்று குளிர் வெய்யிற் கலந்திடுங் காலுமெவ்
வாற்றினுமெக் காலத்து மற்று.

[சென்றாலும், நின்றாலும், உறங்கினாலும், தழுவினாலும், விழித்திருந்தாலும், உண்ணுகையில் நீர் பருகினாலும், காற்று, குளிர், வெய்யில் எனத் தாக்கினாலும், வேறு எந்த இடையூறினாலும் எக்காலத்திலும் பாதிப்புற மாட்டான்.]

பயமும் வறுமைநோய் பற்றுசுர மந்த
மியைந்திடுங் காலத்து மேதுந் - தியங்கானே
யான்மநிட் டன்சாந்த னார்நிட் களனாகி
யான்ம திருத்தனா வான்.

[அச்சத்தாலும், வறுமையாலும், நோயாலும், சுட்டெரிக்கும் சுரத்தாலும், செரிப்பின்றி மந்த நோயாலும் அவதியுற்றபோதும், ஆன்ம நிட்டனாய் எதைக் கண்டும் கலக்கமுறாமல் நிலையாய் இருப்பான்.]

22.1.14

அப்பாவும் நானும்


சமீபகாலமாக என் அப்பாவுக்குத் தன் இளம் பிராய நினைவுகள் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடப்பவை பற்றி எதுவும் நினைவில் இருப்பதில்லை. 

”1979ல் 900 ரூபாய் கொடுத்து உனக்கு வாங்கித்தந்த BSA SLR sports cycle எங்கே?” என்று நேற்றைக்குக் கேட்டார்.

”1990ல் வித்துட்டேனேப்பா நூறு ரூபாய்க்கு!”

“இத்தனை நாளா எங்கிட்ட ஏன் சொல்லாம மறைச்சுட்ட? ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்”.

அவர் கன்னத்தைச் சிரித்தபடி தட்டிக் கொடுத்தேன். அவருக்கு வயது 76.

######


இன்றைக்கு மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் வெளியில் நடந்து சென்று வரலாம் என்று மதிய உணவின் போது கூறியிருந்தேன். அரை மணி நேரம் முன்னதாகவே தயாராகி, அவரின் சோர்வுக்கு மத்தியிலும் மிகுந்த ஆர்வம் கலந்த பரபரப்பில் இருந்தார்.


அவரின் திட்டமிடலும், என்னுடையதும் வெவ்வேறு விதமானவை. பிறருக்கு ஒப்புதல் அளித்திருந்த நேரத்தை அநேகமாக நான் கடைப்பிடித்துவிடுவேன். வீட்டுக்குள் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடிந்ததில்லை.

அதனால் அவர் சரியாக 5 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினார். நான் 5.15க்கு அவரைத் தொடர வீட்டை விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் அவர் காலணிகள் அணியாமல் மறதியில் வெற்றுக்காலுடன் சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

ஒரு ஃபர்லாங் தொலைவில்தான் மிக மெதுவாக அடிமேல் அடி வைத்துச் சென்று கொண்டிருந்தார். காலணி அணியாததை நினைவுபடுத்தினேன். ’அதனால் பரவாயில்லை’ என்று சைகை செய்தார். நான் என் காலணிகளைக் கழற்றி அவரை அணிந்து கொள்ளச் செய்தேன். எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து வந்தார்.

கொஞ்ச தூரம் போனபின், நான் அவரின் மணிக்கட்டில் நாடியைப் பிடித்துப் பார்த்து, ’இன்று ரத்த அழுத்தம் உனக்கு நார்மலா இருக்குப்பா’ என்று அவரை உற்சாகப் படுத்தக் கதை விட்டேன்.

’அப்படியா’ என்பது போல் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவருடன் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசத் துவங்கினார்.

தன் மணிக்கட்டில் அவரின் விரல்களைப் பிடித்து வைத்து, ‘நாடி சரியா இருக்கா’? என்று கேட்டார். அவரும், சிறிது நேரம் நாடியில் கை வைத்துப் பார்த்து விட்டு, “ நமச்சிவாய! நாடித் துடிப்பு மிகச் சரியா இருக்கு. நிறைவாழ்வு வாழ்வீங்க’ என்று அப்பாவை வாழ்த்தினார்.

’எனக்கு 76. உங்க வயசென்ன?’ என்று அவரிடம் கேட்டார்.

’70’ என்றார் அவர்.

‘சரி. பாக்கலாம் நாளைக்கு’ என்று விடைபெற்றுக் கொண்டார்.

அவரும் என்னிடம், ‘அப்பாவப் பூப் போலப் பாத்துக்குங்க தம்பி’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே கையசைத்து விட்டுக் கிளம்பினார்.

அவரை இதற்கு முன் அப்பாவுடன் பார்த்த நினைவில்லாததால், ”யாருப்பா அது?’ என்று கேட்டேன்.

அவர் சிரிப்புடன், ‘எனக்கும் தெரியாது. தெரியணுமா என்ன?’ என்றார்.

எதிரில் கடந்து சென்ற் அந்த பரிச்சயமில்லாப் பெரியவரின் மனதிலும் அப்பாவின் பதில் எதிரொலிப்பதை உணர்ந்தேன்.

12.1.14

விவேகானந்தரும் ராக்ஃபெல்லரும்.

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை.

ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார். என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார்.

விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன்அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது.

தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் - தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் - திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. அவர் எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்மிக சக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன்அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்திதானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார்.

விவேகானந்தர் அசையவும் இல்லை; ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை; அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார். படித்து முடித்ததும் அவர், ’நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள்தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.

அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.


விவேகானந்தரின் சிந்தனைகள் பல-
================================

பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். 

நாம் என்ன கற்றுக்கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும். 

நாம் அப்போது அவர்களுக்கு உதவவில்லை. இது நாம் செய்த தவறு நாம் செய்த வினை. எனவே இதற்காக யார்மீதும் பழி போட வேண்டாம். நம் சொந்த வினையையே குறை கூறிக் கொள்வோம் ! 
நீங்கள் அனுமதிக்காமல் உலகாயதமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது.

=============

நாம் வேதாந்திகள் அல்ல, நம்மில் பெரும்பாலோர் பௌராணிகர்களும் அல்ல தாந்திரிகர்களும் அல்ல; நாம் எல்லாம் வெறும் தீண்டாதே, தீண்டாதே என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். 

நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானைதான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம். 

நமது மூளை பலவீனமாகிவிட்டது என்பதற்கு அடையாளம் இது. நமது மனத்தால் வாழ்வின் உயர் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை; மனம் எல்லா வலிமையையும் செயல் திறனையும் இழந்து, எதிரில்பட்ட சின்னஞ் சிறு பிரச்சினையைத் திரும்பத் திரும்பச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.


==================

கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா? இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை. 

எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.

வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.

மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், அந்த விஷயத்தில் சுதந்திரம் ஏதாவது எனக்கு இருக்குமானால், புள்ளி விவரங்களை நான் படிக்க மாட்டேன்.

முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், பற்றில்லாமல் இருக்கும் திறந்த உள்ளத்தையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு, பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு, நினைத்த நேரத்தில் உண்மைகளை நான் சேகரித்துக் கொள்வேன்.


======================

நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் - ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

=======================

ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டையக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்குக் காரணம்.

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்க கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.


==========================

உங்கள் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவை இருந்து என்ன சாதித்திருக்கின்றன?

சுயமாகச் சிந்திக்கும் உண்மையான மனிதன் ஒருவனையும் அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. அவை வெறும் தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொது நலத்திற்காக நம்மைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்து நமது நாட்டில் இன்னும் வளராமலேயே இருக்கிறது.


============================

இப்போது நாம் விலங்குகளைவிட அதிக அளவில் ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயத்தின் கட்டுப்பாடு என்னும் சாட்டையடிகளால்தான் நாம் அழுத்தி அடக்கி வைக்கப் பட்டிருக்கிறோம்.

இன்று சமூகம் ,நீ திருடினால் நான் உன்னை தண்டிக்கப் போவதில்லை என்று சொல்லிவிடுமானால், உடனே நாம் விரைந்து ஒருவர் மற்றொருவருடைய சொத்துக்களைப் பறிப்பதற்காகப் பாய்ந்து ஓடுவோம்.

போலீஸ்காரர்கள்தாம் நம்மை நல்ல ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருக்கிறார்கள். சமுதாயத்தின் பொது அபிப்பிராயம்தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது. உண்மையில் மிருகங்களைவிட நாம் சிறிதும் உயர்ந்தவர்களாக இல்லை.


============================

உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்திய தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய்விடும்?

எனது அருமைச் சகோதரா? ஒரு பழைய விளக்கை எடுத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் , காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன்.

உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலைசிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம்.


================================

கிரீஸ் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரிகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக்கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரிகம் இருந்து வந்திருக்கிறது.

ஏன் , அதற்கும் முன்பேகூட வரலாற்றில் குறிப்புக்களே கண்டுபிடிக்க முடியாத , சரித்திரமே புக முடியாத, இருண்ட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன.

ஆனால் இவையெல்லாம் அன்புடனும், வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே சென்றிருக்கின்றன. 


================================

அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே !

நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது.

தனது எண்ணற்ற அரும்பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும் மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது.

ஆனால், இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுøடைய தவறுகளே காரணம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைகுறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்ய போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் திட்டிக்கொண்டு, நீங்கள்ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா?

அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து, அந்தக் கப்பலைப் பழுது பார்க்க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து அந்த பணிக்கு நாம் தருவோமாக அல்லது அந்தப் பணியிலே தோல்வி அடைந்தால் மனதில் திட்டிக் கொண்டிருக்காமல் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி இறந்துவிடுவோமாக. 


==============================

சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிரக் கடவுளுக்கும், சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத்தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். கடவுளுக்குச் சமமான ஆற்றல்கள் சாத்தானுக்கும் உண்டு.

ஆனால் தெய்விகத் தன்மை மட்டும் தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கிறது. இந்தக் கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார். பெறுகிற மித மிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தன்களாக்கி விடுக்கின்றன.


============================

தீர்க்கதரிசிகளின் ஆற்றல் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்தே நீ அறிந்ததில்லையா? அது எங்கே இருந்தது? அவர்களில் எவராவது தத்துவத்தைப் பற்றியோ, மிகவும் நுட்பமான தர்க்க நியாயங்களைப் பற்றியோ, அருமையான ஒரு நூலாவது எழுதியிருக்கிறார்களா? அவர்களில் ஒருவருமே அப்படி எதுவும் எழுதியதில்லை. ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்கள் பேசினார்கள்.

நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய்.புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய். உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது; வலிமையைத் தருகிறது; உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வளவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது.


===============================

நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள். ரிஷியைத் தடுக்க யாராலும் முடியாது. நமது மதத்தின் லட்சியமான ரிஷிநிலை இதுதான்.

மற்றபடி இந்தப் பேச்சுக்கள், வாதங்கள், தத்துவங்கள்,துவைதங்கள், அத்வைதங்கள், ஏன் வேதங்கள் கூட வெறும் படிக்கற்களே, இரண்டாம் நிலையில் உள்ளவைகளே; நேரடி அனுபவமே முதன்மையானது.

வேதங்கள், இலக்கணம் ,வான நூல் போன்ற எல்லாமே இரண்டாம் நிலையில் உள்ளவைதான். மாறாத ஒன்றை நாம் உணரும்படி எது செய்கிறதோ, அதுவே மேலான அறிவு. அதனை உணர்ந்தவர்கள் ரிஷிகள். அவர்களையே நாம் வேதங்களில் காண்கிறோம்.


================================

நமது புராணங்கள் எல்லாம் மறையலாம், வேதங்கள்கூட அழிந்து போகலாம், நமது சமஸ்கிருத மொழி ஒரேடியாக அழிந்து போகலாம். ஆனால் இந்த நாட்டில் ஐந்து இந்துக்கள் உயிர்வாழ்ந்தாலும்கூட, அவர்கள் கொச்சை மொழி பேசினாலும்கூட, அங்கு சீதையின் கதை இருக்கவே செய்யும்.

என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவள் நம் இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுருவி இருக்கிறாள், இந்துக்களான ஆண்,பெண் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கலந்திருக்கிறாள். நாமெல்லாம் சீதையின் குழந்தைகள்.

பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை சீதை லட்சியத்திலிருந்து விலகச் செய்தால் அந்த நாம் அனுதினமும் கண்டு வருகிறோம். சீதையின் அடியொற்றியே நம் பெண்கள் வளர வேண்டும், முன்னேற வேண்டும், அது ஒன்றே வழி.


==================================

வீண் விபரங்களை அறிந்து கொள்வதில் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கையின் அடிப்படையை, அதன் சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிருஷ்ணரின் வாழ்க்கையில் வரலாற்றிற்கு முரணானவை பல இருக்கலாம், இடைச்செருகல்கள் இருக்கலாம். இவை உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் பரம்பரைப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்ற இந்தப் புதிய மகத்தான கருத்துக்களுக்கு ஓர் அடிப்படை, ஓர் அடித்தளம் இருந்தேயாக வேண்டும். வேறு எந்த ரிஷி அல்லது மகானின் வாழ்க்கையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அவர் தமக்கு முன்பிருந்த கருத்துக்களின் ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருக்கிறார். அல்லது தமது காலத்திலே தமது நாட்டிலேயே பரவலாகக் காணப்படுகின்ற கருத்துக்களை மட்டுமே போதிக்கிறார். இந்த மகான் இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றி சந்தேகம் கூடத் தோன்றலாம்!

ஆனால் நான் சவால் விடுகிறேன். இந்த லட்சியங்கள் - பணிக்காகவே பணி, அன்பிற்காகவே அன்பு, கடமைக்காகவே கடமை - இவை கிருஷ்ணரின் சொந்தக் கருத்துக்கள் அல்ல. இந்தக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்திய வேறொருவர் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

முடியாது. இந்தக் கருத்துக்கள் வேறு யாரிடமிருந்தும் கடனாக வாங்கப் பட்டிருக்க முடியாது. கிருஷ்ணர் பிறந்த போது அவை காற்றிலே மிதந்து கொண்டிருக்கவில்லை.

கிருஷ்ணபகவான் தான் முதன்முதலில் அதை வெளிப்படுத்தியவர், அவரது சீடரான வியாசர் அதை மனித குலம் முழுவதற்கும் பிரச்சாரம்செய்தார். இது மிகவுயர்ந்த கருத்து.


===========================

ஆன்மீகம், லௌகீகம் இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் நம்மால் மேலை நாட்டினராக ஆக முடியாது. எனவே அவர்களைக் காப்பியடிப்பது பயனற்றது.

ஒரு வேளை நீ அவர்களைக் காப்பியடிப்பதாகவே வைத்துக் கொள்வோம். அந்தக் கணமே நீ செத்து விடுவாய். அதன்பின் உனக்கு வாழ்க்கை என்பதே இல்லாமல் போவிடும்.
இரண்டாவதாக அது முடியாத காரியமும் ஆகும்.

காலத்துடனேயே தோன்றி, யுகயுகங்களாக மனித வரலாற்றைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது ஆறு ஒன்று.
அதனைத் தடுத்து நிறுத்தி, பின்னோக்கித் தள்ளிக் கொண்டு போய், இமாலயப் பனிப் படலங்களில் சேர்த்துவிட எண்ணுகிறீர்களா?

ஒரு வேளை அதுகூட முடிகிற காரியமாக இருக்கலாம். ஆனால் உங்களால் ஐரோப்பியமயமாக முடியாது. சில நூற்றாண்டுகளாக மட்டுமே உள்ள தங்கள் நாகரீகத்தைத் தூக்கி எறிவது ஐரோப்பியர்களால் முடியாமலிருக்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிரகாசிக்கும் நமது பண்பாட்டைத் தூக்கி எறிவது சாத்தியம் என்றா நினைக்கிறீர்கள்? அது முடியாது.


======================================

களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப்பொளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன.

களிமண்ணாகப் பார்க்கும்போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பலவேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன.

மூலப் பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர், அந்த வடிவம் நிலைத்து வெவ்வேறானவை.

களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றதான்.

அதுபோன்றே, அறுதி உண்மையான பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு இறைவன். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப்பற்றி மனித மனத்தினால் உணரமுடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே.


=========================================

ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன.

இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப் பெரும் 'தகுதி பெற்றதே வாழும்' என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ; வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள்.

அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே! ஆனால் நாம் முப்பதுகோடிப் பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


====================================

மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம்.

இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும்.

ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ, கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள்.

யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்.

31.12.13

மூன்று நிலைகள்


1.
எழுதுகிறதாய்ச்
சொல்லப் படுபவனுக்கும்-
நன்றாக எழுதியவனுக்கும்
ஒன்றும் பெரிய வித்யாசமில்லை.

அதிக பட்சம்
நடுத்தெருவில்
பறவைகளின் எச்சத்தையும்,
வருடத்துக்கு இருமுறை
ஓர் எழுத்தைக் கூட
அறியாதவன் சூட்டும்
மாலையையும்
சிலையாய்ச் 
சுமக்க வாய்க்கலாம்
நன்றாக எழுதியதாய்
அறியப்பட்டவன்.

2.
பனியாய்
இருக்கையில் 
காற்றாய்;
மெழுகாய் 
இருக்கையில்
நெருப்பாய்.
எப்படியாய் இருந்தாலும்
உருகுதல் என் நிலை.
எப்படியாய் இருந்தாலும்
உருக்குதல் உன் நிலை.


3.
நானும் நீயும்
கவிஞர்கள்.

ஆதலால்
நானும் நீயும்
கவிதைகள்
எழுதும்படியாயிற்று.

ஒரே வித்தியாசம்
காலத்தில்தான்.

நீ நேற்றைக்காய்
எழுதுகிறாய்.
நான் நாளைக்காய்
எழுதுகிறேன்.

16.12.13

ஒரு மூதாட்டி [The Old Lady in Copacabana]


[2012 செப்டெம்பர்-அக்டோபரில் பாவ்லோ கோயலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலை, மொழிபெயர்த்து வெளியிட்ட ஒரு தொடர் இது. கிடப்பில் போட்டிருந்தேன். இப்போது தொடர்கிறேன்.]

******
அவெநிடா அட்லாண்டிகாவின் ஒரு பாதசாரிகளின் நடைபாதையில் ஒரு கிடாருடனும், “ நாம் சேர்ந்து பாடுவோம்” என்று கையால் எழுதப்பட்ட ஒரு அறிவிப்புடனும் அவள் நின்று கொண்டிருந்தாள்.

அவளாகவே பாட ஆரம்பித்தாள். பின்பு ஒரு குடிகாரனும், அதன்பின் இன்னொரு மூதாட்டியும் வந்து, அவளோடு சேர்ந்து பாட ஆரம்பித்தார்கள். சற்று நேரத்தில் ஒரு சின்னக் கூட்டம் பாடவும், இன்னொரு சின்னக் கூட்டம் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கைகளைத் தட்டி ரசிக்கவும் ஆரம்பித்தது.

பாடல்களுக்கு இடையே அவளிடம் ,” இப்படி ஏன் நீ பாட விரும்புகிறாய்?” எனக் கேட்டேன்.

“தனிமையை விரட்டத்தான். எல்லா முதியோர்களுக்கும் அமைந்தது போல என் வாழ்க்கையும் தனிமையால் பீடிக்கப்பட்டிருக்கிறது.”

இது போலவே ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளைத் தீர்க்கமுடியுமானால்.....

11.12.13

பாரதி சில சிந்தனைகள்

பாரதி பிறந்து 131 ஆண்டுகளும், இறந்து 92 ஆண்டுகளும் ஆகின்றன. இன்று வரை அவருடைய எழுத்துகள் முழுமையாய்ப் படிக்கப்படவுமில்லை. கடைப்பிடிக்கப்படவுமில்லை. 

அவருடைய அடித்து நைந்து போன கவிதை வரிகளுக்கப்பால் அவரை விசாலமாகப் படித்தவர்களை - அவரை ஒரு சிறுகதாசிரியராக, கட்டுரையாளராக, யோகியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகையாசிரியராக, தேசியவாதியாக அவரின் பன்முகங்களையும் உணர்ந்தவர்களையும் - விரல் விட்டு எண்ணி விடலாம். இது என் அனுபவம். 

சிமிழுக்குள் அடங்கும் அடிமையில்லை அவன். காற்றாய், கதிரவனாய், நீராய், நிழலாய் ஊடுருவி நிற்கும் சர்வ வியாபி அவன்.

சிலைக்குக் கடனே என்று மாலையிடுபவர்களுக்கும், அந்தச் சிலையின் மீது எச்சமிடும் காக்கைகளுக்கும், குளிரூட்டப்பட்ட அறைகளில் பாரதியின் வரிகளை ஜீவன் இல்லாமல் ஒப்பிப்பவர்களுக்கும், சொல் ஒன்று; செயல் ஒன்று என்று வாழ்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்கள் பாரதியை அறிய மாட்டார்கள்.

***********

[செல்லம்மா பாரதியார் - “பாரதியார் சரித்திரம்”.]
=========================================

”சுதேசமித்திர”னில் சேர்ந்ததும் நுனி நாக்கினால் பேசுபவர்கள், பொய் வேஷக்காரர்கள் முதலியவர்களைத் தாக்கியும், தேச கைங்கர்யம் செய்யும் உண்மைத் தியாகிகளைப் பூஷித்தும், அவர்களுக்கு உற்சாகமூட்டியும் கவிகள் புனைந்தார்.

நாட்டின் வறுமை அவருடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்கிற்று. தமிழர்கள் கல்வியறிவு இல்லாமல், “அ” எழுதச் சொன்னால் தும்பிக்கை யொன்று வரைந்து யானை போடக்கூடிய நிலையிலிருப்பதை நினைத்து வருந்தி அவர்களை இடித்துக் கூறி அறிவு பெறக்கூடிய அனேக பாடல்களும், கட்டுரைகளும் எழுதிக் குவித்தார்.

*******

சில சமயம் அரிசி இராது. பாரதியார் மாடியில் பத்துப் பேர்கள் சிஷ்யர்களோடு, “பூணூல் வேண்டுமா? வேண்டாமா?” என்று வாதம் செய்து கொண்டிருப்பார். ‘யாகம்’ செய்யும் கருத்து என்ன? என்ற சர்ச்சை பலமாக நடக்கும்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டார். கையில் 4 அணா இருந்தால் வாழைப்பழம் வாங்கி வந்து எல்லோரும் பசியாறுவது வழக்கம். பால்காரி கடனாகப் பால் விடுவாள். அந்தப் பாலைக் குடித்து விட்டுச் சும்மா இருப்போம். இப்படியும் சில நாட்கள் கழிந்ததுண்டு.

“ அரிசி இல்லையென்று சொல்லாதே.’அகரம் இகரம்’ என்று சொல்லு” என்று சொல்லுவார். “ இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்” என்ற வார்த்தை அவரது புன்பட்ட ஹிருதயம் கொதித்துப் புறப்பட்டதாகும்.

**********

’புதியதில் ஆசை; நைந்ததில் வெறுப்பு; பேசும்போது கிளி போலக் கொஞ்ச வேண்டும்; கர்ண கடூரமாகப் பேசுவது கூடாது; பேச்சே ஒரு சங்கீதம் போல அமைய வேண்டும்” என்பது பாரதியாரின் தனிப் போக்குகள்.

*********

பெண்கள் யாருக்கும் அஞ்சித் தலையைக் கவிழக் கூடாது. “ யாரேனும் விடர்கள் கெட்ட ஹிருதயத்தோடு உன்னை நோக்கினால், நீ அவனைத் தைரியமாகப் பத்து நிமிஷம் உற்றுப்பார். அவன் வெட்கித் தலை குனிந்து விடுவான். அல்லது அவன் முகத்தில் திடீரென்று உமிழ்ந்து விட்டு அப்பால் செல்” என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வார்.

*********

”கல்யாண பந்தம் செய்து கொள்வது எளிது; ஆனால் அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது”

*********

அப்போதுதான் உலக மகாயுத்தமும் முடிவடைந்த சமயம். புஸ்தகங்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கான முயற்சிகள் கூடப் பலிக்கவில்லை. பொருளாதார நிலை ஒரு காரணம். மற்றொன்று ‘கலையுணர்ச்சி’ நாட்டில் சிறிதளவேனும் இல்லாதது. மூன்றாவது மக்களைப் பிடித்திருந்த ஆங்கிலக் கல்வி மோகம்.

**********

ஏழைக் குடியானவச் சிறுவர்கள் தினந்தோறும் அதிகாலையில் வந்து வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டும், அடுப்பெரிக்கப் புளிய இலைச்சருகுகள் அரித்துக்கொண்டும் செல்லுவார்கள்.

ஒருநாள் பாரதியார் அவர்களிடன் சென்று,”சிறுவர்களே! எதற்காக வேப்பம்பழம் பொறுக்குகிறீர்கள்?” என்றார்.

“சாமி! வயிற்றுக்கில்லாததால் வேப்பம்பழத்தைத் தின்கிறோம்” என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும், புளியங்காயையும் பறித்துத் தின்றார்.

“பகவானது சிருஷ்டிப் பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. ‘வேப்பங்காய் கசக்கும்’ என்று மனத்தில் எண்ணுவதனால்தான் கசக்கின்றது. ‘அமிர்தம்’என்று நினைத்தால் தித்திக்கின்றது’ என்று சொல்லி, அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார்.

சின்ன வயதில் நெய் சற்று நாற்றமடித்தாலும் அவர் பாத்திரத்தோடு எடுத்துச் சாக்கடையில் ஊற்றி விடுவார். அதிருசியான உணவும், நேர்த்தியான புதிய புதிய ஆடையும் வேண்டுபவரான பாரதியார், மனத்துறவு ஏற்பட்டு ஹரிஜனச் சிறுவர்களுடன் சேர்ந்து வேப்பங்காய் தின்னவும், இடுப்பில் நாலு முழ வேஷ்டி அணியவும் ஆரம்பித்தார்.

**********

நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி. காளிதாசன் சாகுந்தலத்தை அனுபவிப்பார்கள்; புத்தபிரானது அன்பு உபதேசத்தையும் ரஸிப்பார்கள்; அர்ச்சுனனது வீரத்தையும், கர்ணன் கொடையையும், தருமரின் சத்தியத்தையும் புராணத்தில் வாசித்துப் புகழ்வதோடு சரி. யாரேனுமொரு மனிதன் தற்சமயம் அதே தருமத்தை நடத்திக் காண்பித்தால், அவனைப் பைத்தியமென்றுதான் மதிப்பார்கள்.

**********

ஒருநாள் தெருவில் நடக்கும்பொழுது பாரதியார் கைவிரல்களை மடக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி விரைவாக நடந்தாராம். அதைக் கண்டு அவரது தோழர் ஒருவர், “என்னடா! கையை இப்படி வைத்திருக்கின்றாய்” என்றாராம்.

ஒரு சின்ன விஷயத்துக்குக் கூடக் கட்டுப்பாடும், அடக்குமுறையுமா என்று பாரதியார் கோபங்கொண்டார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார்.

மறுநாள் அதே நண்பரின் எதிரில் கை விரலை விரைப்பாக நீட்டிக்கொண்டு நடந்தார். அவர், ”என்னடா, கையை நீட்டிக்கொண்டு நடக்கின்றாய்?” என்று கேட்டதுதான் தாமதம்.

உடனே பாரதியார், “தம்பி! உன் ஆசீர்வாதத்தினால் எனக்கு எவ்வித வியாதியும், ரோகமும் கிடையாது. ஒரு மனிதன் தன் கையை நீட்டவோ, மடக்கவோ கூடச் சுதந்திரமில்லையென்று நினைக்கும் உன்னைப் போன்ற மடையருடன் குடியிருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு நரகம் வேண்டாம்” என்று சுடச்சுடப் பதில் உரைத்தாராம். நண்பருக்கு வெட்கித் தலைகுனிவதை விட வேறு என்ன வழி இருந்திருக்கும்?

********************

அவர் ஒரு புதுமைப் பித்தர்; அவருடைய நோக்கங்களெல்லம் உயரிய நோக்கங்கள். சமுத்திரக் கரைக்கு எல்லோரும் செல்வது வழக்கம்.

பெண்கள் பர்தா வழக்கம் அவருக்குப் பிடிக்காது; ஆனால் பெண்கள் வரம்பு மீறி நாகரிகமென்று சொல்லிக்கொண்டு நடப்பதும் பிடிக்காது.

பெண்களை உள்ளே அடக்கிவைக்கக் கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்களோடு பழக வேண்டும்.

அங்ஙனமே ஆடவர்களும், ஸ்த்ரீகளும் மத்தியில் உள்ளத்தில் மாசின்றி உறவாட வேண்டும். இப்படி ஜாக்கிரதையுடன் சிறிது காலம் நடந்தால் தனியே ஒவ்வொருவர் மனமும் பரிசுத்தமாகி விடும்.

மூடி மூடி வைப்பதால் புருஷர்களுக்குப் பின்னும் பெண்களைப் பார்ப்பதில் ஆசை அதிகமாக வரம்பு மீறியும் ஹேது உண்டாகின்றது. இத்தகைய கொள்கையை உடையவர் பாரதியார்.

*******************

”மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா” என்றார் பாரதி.

என்ன ஆச்சர்யம்! உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை அரை மணி நேரம் மிருகேந்திரனைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவிவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல், அதனிடம் விடை பெற்றுக் கொண்டார்.

**********

பாரதியாருக்கு வேண்டியவை நல்ல எழுதுகோல், வெள்ளைக் கடுதாசி, தனிமை. அச்சடிப்பது போல் வேகமாக எழுதிக் குவிப்பார். ஒரு நிமிஷமேனும் தொழிலின்றியிருப்பதை விரும்பார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டு. சரீரம் இடம் கொடுக்கவில்லை. ஒரு நண்பர் வீட்டில் கத்தி வீச்சுப் பழகல் ஆறுமாத காலம் நடைபெற்றது.

***********

[ செல்லம்மாவின் கடிதம் ]
======================
[அப்போது செல்லம்மாவின் வயது 12]

க்ஷேமம்.

கடையம்.

அநேக நமஸ்காரம். கடையத்தில் எல்லோரும் க்ஷேமம். இங்கு நம்ப விசுவநாத அத்திம்பேர் வந்திருக்கார். அவர் என்கிட்டே ஒரு சமாசாரம் சொன்னார்.

நீங்கள் ஏதோ தேச சுதந்திர விஷயமாகப் பாடுபடுவதாகச் சொன்னார். அதுக்காக ஏதோ ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம். சட்டத்துக்கு விரோதமாயிருந்தால் தீவாந்திரத்திற்குக் கொண்டு போய்விடுவாளாம்.

எனக்கு இதையெல்லாம் கேட்க ரொம்ப பயமாயிருக்கு. அதனால் நான் சொல்றதை ஒரு பொருட்டாய் மதிச்சுப் புறப்பட்டு வந்துவிடுங்கள். உங்களை மன்றாடிக் கெஞ்சுகிறேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் புறப்பட்டு வந்து விடுங்கள். எந்த நிமிஷத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று எப்பொழுதும் தவித்துக் கொண்டிருக்கிறேன். கெடுதல் ஒன்றும் ஏற்படக்கூடாதென்று ஸ்வாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

செல்லம்மா.

**************************

[பாரதியின் கடிதம்.]
================

[1901ல் எழுதப்பட்டபோது பாரதியின் வயது 19]
========================================

ஓம்

ஸ்ரீகாசி
ஹனுமந்தக்கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு- 

ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ எனது காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை.

விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன்.

நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில், தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்,
சி.சுப்பிரமணிய பாரதி.

*********************

[”மகாகவி பாரதியார்” - வ.ரா.]
==========================
பாரதியாரை நமஸ்கரித்த என்னை, அவர் தூக்கி நிறுத்தியதும், ‘யார்?’ என்று கேட்டார்.

தமிழில் பதில் சொல்லி இருக்கலாமே! இங்கிலீஷ் படித்த கர்வம் ஆளை எளிதிலே விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.

“அடே, பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா! அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லை” என்று உரக்கக் கத்தினார். அப்பொழுதுதான் அவருடைய மனவேதனை எனக்கு ஒருவாறு அர்த்தமாயிற்று.

“ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று வருத்தக் குரலுடன் என்னைக் கேட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நேரே பதில் சொல்ல நா எழவில்லை.

அப்பொழுது அவர் பாடிய பாட்டு, ‘மறவன் பாட்டு’ என்று பாடியிருக்கிறாரே, அதுதான்.

***********

”தமிழ்நாட்டுத் தேச பக்தன்” என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ”சர்க்காருக்கு மனுப்பண்ணிக் கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?” என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

“அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?” என்று அவர் படீரென்று போட்டார். தலைநிமிர்ந்து கொள்வதற்கு எனக்கு தைரியம் உண்டாயிற்று.

*********

பாரதியாருக்குச் சீட்டு ஆடுவதிலும், சதுரங்கம் ஆடுவதிலும் நிரம்பப் பிரியம். ஆனால் இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்குப் பாண்டித்தியம் கிடையாது. சதுரங்கத்தில் வ.வே.சு. ஐயர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை நிர்த்தாட்சண்யமாய் வெட்டித் தீர்த்து விடுவார்.

‘ஐயரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத் தொழில் செய்யாதேயும். உமக்குக் குழந்தை, குட்டிகள் பிறக்கா” என்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார்.

ஐயருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக் காய்கள்; பாரதியாருக்கோ காய்கள் குழந்தைகள் மாதிரி.

***********

சீட்டிலே , கர்நாடக ஆட்டமான ஓர் ஆட்டந்தான் பாரதியாருக்குத் தெரியும். 304 என்கிறார்களே, அதுதான். அதுவும் நன்றாக ஆடத் தெரியாது. பாரதியார், என்னைத் தவிர வேறு யாரையும் தமது கட்சியில் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவதில்லை.

தமக்கு வந்த சீட்டுகளில் குலாம் என்ற ஜாக்கி ஒன்றோ, இரண்டோ இருந்தால், பாரதியார் குதூகலப் படுவார்; கையைத் தூக்கித் தமது கட்சிக்காரனுக்கு ஜாடை காண்பிப்பார். சதுரங்கத்தில் ஐயரிடம் தோற்கும் படுதோல்வியை, எப்படியாவது சீட்டாட்டத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று பாரதியார் மிகுதியும் ஆசைப்படுவார்.

************

போய்க்கொண்டிருக்கும்பொழுது, பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்குக் கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார்.

சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்று விடுவார். ஆனால், பேசினவர் எல்லோரும் பாரதியாருக்குக் காண்பித்த மரியாதை அளவு கடந்ததாயிருந்தது.

ஏழை பாரதியாருக்கு எப்படி இவ்வளவு மரியாதை கிடைத்தது என்பது அப்போது சிறிதும் விளங்கவேயில்லை. பாரதியாருடைய பாட்டின் மகிமையை அவர்கள் தெரிந்துகொண்டு கும்பிட்டார்களா? என்பது சந்தேகம். ஆனால், புதுச்சேரியில் பலருக்குப் பாரதியார் குருவாக விளங்கினார் என்பது உண்மை.

******************

பாரதியார் உயரத்தில் பெரியவர்; அரவிந்தர் உருவத்தில் சிறியவர்.

பாரதியார் ஸங்கோசி; அரவிந்தரும் ஸங்கோசிதான்.

பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை; அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை.

இருவருக்கும் புதிய புதிய கருத்துகளும் சித்திரச் சொற்களும் திடீர்த் திடீரென்று புதைவாணங்களைப் போலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப் பிடித்து வந்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் துளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார்.

இருவரின் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார்.

****************

வீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக்காட்டி விட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விடுவார். அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் அறிந்ததில்லை.

“என்ன ஓய்! எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா?” என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், “அம்மா, அம்மா” என்று இசையிலே கூவுவார்.

******************

தம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்த பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார்.

தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான்.

வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததே இல்லை. “அம்மா, அம்மா” என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

********************

”நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; நாவுக்கு விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்; பாஷைக்கு விடுதலை வேண்டும்...” இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார்.

வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்பொழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியாரிடந்தான்.

************

தமிழனைத் தட்டி எழுப்பி, அவனை முன்னேறச் செய்பவர் திடசங்கற்பமுள்ளவராக இருக்க வேண்டும்; தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே நித்தியானந்தத்தை நாடு என்று சொல்லி வழிகாட்டியாக அதற்கு இருக்க வேண்டும்.

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்காத கலைஞனாக இருக்க வேண்டும். அவர், கவிதை வெள்ளத்தில் மிதந்து விளையாட வேண்டும்.

குழந்தைக்குத் தோழனாகவும், பெண்மைக்குப் பக்தனாகவும், அரக்கனுக்கு அமுக்குப் பேயாகவும், சுதந்தரத்துக்கு ஊற்றுக் கண்ணாகவும், சுற்றி நில்லாதே போ பகையே என்னும் அமுத வாய் படைத்த ஆண் மகனாகவும், கவிதைக்குத் தங்குமிடமாகவும், உள்ளத்தில் கனலும் கருணையும் ஒருங்கே எழப் பெற்றவனாகவும்-

எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் தூங்கும் தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பி, தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் வல்லமை படைத்தவன்.

அப்பேர்ப்பட்ட மூர்த்திகரம் வாய்ந்த பாரதியார், தமிழ்நாட்டில் தோன்றியிராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தனை செய்வதே சிரமமான வேலையாகும்.

************
1919 பெஃப்ருவரி மாதம்.

பாரதியார்:
மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி:
மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்:
இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி:
அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது; தக்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போடமுடியுமா?

பாரதியார்:
முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் வெளியே போனதும், “ இவர் யார்?” என்று காந்தி கேட்டார்.

தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி ஐயங்கார் பதில் சொல்லவில்லை.

காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.

ராஜாஜிதான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.

எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

************

[ என் தந்தை பாரதி - சகுந்தலா பாரதி]
================================

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன் மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாத காலம் இரவும், பகலுமாக நானும் செல்லமாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ! உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க. நான் எப்போதும் உன் புகழைஆயிர விதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை இல்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டு ஒன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்? - பாரதி

***********

[பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்]
=================================

வீட்டின் தலைவி எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு போனால், தலைவன் கவலையில்லாமல் நோயில்லாமல் இருக்கலாம். தலைவிக்கு முக்கியமாக வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள்.

அது இல்லாததால் என்னைக் கட்டுப்படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்; எனக்கு வருந்திச் சாதம் ஊட்டுகிறாள்; இதை உலகம் அறிய வேணும். நம் கஷ்டம் விடிய வேணும்.

சென்று போன விஷயத்தை யோசிப்பவன் மூடன். தினமும் நான் துணியை வெளுத்து உலர்த்துவதைப் போல நம்முடைய அழுக்குகளை, தொல்லைகளைத் தினம் கழுவி விட வேணும்.

புதிதாகச் சூரியன் வருவதைப் போல் புதிய புதிய விஷயங்களைப் பார்த்து மகிழ வேணும். என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள்தான். அவள் பாக்கியலக்ஷ்மி. - பாரதி.

*************

மூன்று மாதக் குழந்தை கைகால்களை ஆட்டி ஆவ், ஆவ் என்னும்போது, பாரதியார், “ஆவோ, ஆவோ, ஆவோ, ஸகலபாரத குமார்” என்று பாடுவார். “சின்னக் குழந்தை எல்லாரையும் அழைத்து ஒன்றாக இருக்கும்படி சொல்லுகிறது. நமது மூடத்தனம், நாம் கவனிப்பதில்லை” என்பார்.

*****************

மூவரும் பாட்டின் ஓசை வந்த திக்கை நோக்கிச் சென்றோம். அங்கே ஒரு கட்டுமரத்தின் மேல் பாரதியார் அமர்ந்திருந்தார். கறுப்புச் சொக்காய். கச்சை போட்ட வேஷ்டி. கூப்பிய கரங்கள். கடலில் உதயமாகும் பால சூரியனை நோக்கியபடி பாடிக் கொண்டிருந்தார் அவர். வெளிச்சம் நன்றாகப் பரவவில்லை; மங்கலாக இருந்தது. கம்பீரமான பாட்டு. உள்ளத்தைக் கவரும் ராகம். பாட்டின் உன்னதமான பொருள் எல்லாம் சேர்ந்து உண்மையில் தெய்வத்தை எதிரில் காண்பது போல் மயிர்கூச்செரியச் செய்தன. உள்ளம் குளிர்ந்தது.

******************

பாரதியார் வீட்டிலோ அல்லது மடுகரை ஏரிக்கரை முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும்போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

இது இன்று சகஜமாய்த் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம். எங்களுக்கு இந்த மாதிரியான காரியம் நடக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் யாராவது வீட்டார் பார்த்து விட்டால் என்ன செய்வது என்னும் திகில்.

[ ஸ்ரீ அரவிந்த தரிசனம் - அமிர்தா ]

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...