30.4.10

கவரி



தாமரையும் அல்லியும் பூத்துக்கெடந்த அந்தியில
தாபத்தோட காதலோட காத்திருந்தேன் கொளத்தருக.
தாமதமா வந்து நீயும் தயங்காம சொல்லிப்புட்ட
கெடைக்காத சம்மதத்த புள்ளத்தாச்சி சாகும்படி.
ஊருசனம் வாறித்தூத்த ஒபகாரம் செஞ்சுபுட்ட.
மீறி நான் என்ன செய்ய ஆயிப்புட்டேன் ஈருயிரா.
எத்தனையோ சொல்லிச்சொல்லி இறுமாந்து போயிருந்தேன்.
அத்தனையும் பொய்யாச்சே அய்யோ நா என்ன செய்வேன்?
ஆதரவா யாரிருக்கா அழுவாதன்னு சொல்லுதக்கு.
அரளியோ கயிறோ கெணறோ புரியலியே .
நாளக்கி நீ வானத்துல நல்லவனாப் பறந்திருப்ப.
நாதி கெட்ட மூதேவி மண்ணுல நா எறந்திருப்பே(ன்).

29.4.10

யூகம்



என் வாகனத்தைப் பழுது பார்த்தபோது
நீ மல்லிகை மொட்டுக்கள் வாங்கியபடி இருந்திருக்கலாம்.
பரபரக்கும் சாலையைத் தட்டுத் தடுமாறி
வசவுகள் வாங்கிக் கடக்கையில்
நம் மகன்களிடம் உன் இளம்பருவக் குறும்புகளை
விவரித்துக்கொண்டிருந்திருக்கலாம்.
பொழுது சாய்ந்தபின்னும் திரும்பமுடியாது வழி மறந்து
தேடிக்கொண்டிருக்கையில்
என்னை நீயும் தேடத்துவங்கியிருக்கலாம்.
ஒரு கனரக ஊர்தியின் சக்கரங்களுக்கு இடையே
மெல்ல மெல்ல அறைபட்டதைக்
கேள்வியுற நேர்கையில்
நான் பார்த்திராத கண்ணீரை நீ வடித்திருக்கலாம்.

28.4.10

நிசிமலர்



நிசியின் மலர் மொட்டவிழ
மறைந்திருக்கிறாய் ஒரு திருடியாய்.
கனவின் உடை துறந்து மெல்ல
வெளிப்படுகிறேன் கள்வன் நான்.
என் கோப்பையின் தளும்பி வழியும்
நிலவின் மதுவூட்டத் திளைக்கிறாய்.
யாருக்கும் கேட்காத உன்னத இசையை
இசைக்கிறேன் உன் தின்பண்டச் செவிகளில்.
வெட்கம் சொட்டும் விரல்களால்
வரைகிறாய் உன் மழலை மொழி.
இறுதியாய்க் காற்றென ஒவ்வொரு
இதழாய் மெல்லத் திறக்கையில்
மயங்கிச் சரிகிறாய் பூம்பாரமாய்.
எப்போதுதான் பார்க்க இருக்கிறாய்
மொட்டவிழும் ஒரு மலரை?

10.4.10

மாந்தோப்பில் ஓர் இரவு-I


தஞ்சாவூர்க்கவிராயரைச்(த.க.) சந்திக்க,கும்பகோணத்தில் துளிர் வெற்றிலை அரைக் கவுளி,வாசனை சீவல், சுண்ணாம்பு,ஒரு கண்ணாடிப் போத்தலில் குடிநீர் சகிதம் தஞ்சாவூர் பேருந்தில் ஓட்டுநரின் இருக்கையின் பக்கவாட்டுத் தனி இருக்கையில் உட்கார்ந்தேன். த.க.விடமிருந்து தொடர்ச்சியாகத் தொலைபேசி அழைப்புகள்.சாப்பிட்டாயா?பஸ் ஏறிவிட்டாயா?எங்கு இறங்க வேண்டும்?இறங்குமிடத்தில் நான் காத்திருப்பேன் என அன்பின் இழை கலந்து அடர்த்தியாக நெய்து தள்ளினார்.பேருந்து முனகியபடியே ஓடிச்சென்றது.

ஒவ்வொரு திருப்பத்திலும் ஒவ்வொரு சம்பவத்தின் வழிபடல்.ஒரு தூணின் பின்னே தஞ்சாவூர் பெரியகோயிலில் நாடக இயக்குநர் ராமானுஜம் என்னையும்,ப்ரகாஷையும் இணைத்து ஒரு நாடக ஒத்திகைக் காட்சி நினைவில் அசைந்தது.

ப்ரகாஷுடன் மாக்ஸ் ம்யுல்லர் பவன் நடத்திய ஜெர்மன் மொழி வகுப்புகளுக்கு வாரம் இருமுறை தஞ்சையிலிருந்து திருச்சி சென்ற பயணங்கள்-வங்காள ஆசிரியர் நடராஜன் போதித்த வங்காள மொழி வகுப்புகளுக்கு மாணவர்களாகப் ப்ரகாஷுடன் சென்ற நாட்கள்-ஓஷோவின் தத்துவங்கள் எங்களை ஈர்த்து பல இரவுகளை விழுங்கிய எண்ணங்கள்.

திருச்சி ஜாஃபர்ஷா தெருவில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட ஓஷோவின் புத்தகங்கள் வாங்கிய அனுபவங்கள்-கும்பகோணத்தில் கரிச்சான்குஞ்சு-எம்விவி- ஸ்வாமி சாது.பொன் நடேசன் இவர்களைச் சந்திக்கச் சென்று கரைந்த பல நாட்கள்-க்ருஷாங்கினி,நாகராஜன் வீட்டில் தொடரும் அரட்டைகள்-மதுரை நிஜ நாடக விழாவிற்கு மு.இராமசாமியின் அழைப்பின் பேரில் சென்று ராஜமார்த்தாண்டன் உள்ளிட்ட பல நண்பர்களோடு செலவிட்ட இரவுகள்.

பள்ளி அக்ரஹாரம் தாண்டியபோது த.க.வின் அழைப்பு.பதிலளித்து விட்டுத் தஞ்சாவூரை நெருங்கும் பரபரப்பு.ஒவ்வொரு முனையிலும் ஒரு வேளை தாடியை நீவிவிட்டபடி ப்ரகாஷ் காத்திருக்கக் கூடும் என்று தேடினேன்.எல்லா வாய்க்கால்களும் மனித மனங்களைப் போல வறண்டு கிடந்தன.மண்ணிலும் ஒரு செழிப்பு இல்லை.வறட்சியை பறைசாற்றும் காட்டுச் செடிகள்-புதர்கள்-இளைத்த நாய்கள்-தஞ்சாவூர்.

இன்னும் அன்பு பால் நிலையத்தில் கல்கண்டுப்பாலும்,லெஸ்ஸியும் அருந்திவிட்டு ஓடிப்போய் பஸ் ஏறும் மக்கள் கண்ணில் பட்டனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இருந்த இடத்தில் எத்தனை நாட்கள் மோகனை மையப்படுத்தி ப்ரகாஷுடன் பேசித்தீர்த்திருப்போம்?

மாவட்ட மைய நூலகம் எந்த மாற்றமுமின்றி அழுதபடியே இருந்தது.ராஜராஜ சோழனின் வாள் உரையிலேயே இருந்தது.வெளிநாட்டுப் பயணிகள் பிரமிப்புடன் கோயிலை அண்ணாந்து பார்க்க அவர்களை பிரமிப்புடன் உற்றுப் பார்த்து தங்கள் இங்கிலீஷைத் தூசி தட்டி மிரட்டிய உள்ளூர் கைடுகள்-நிறைய மேம்பாலங்கள் முளைத்துவிட்டன.

தாண்டித்தாண்டிப் போகையில் மதியம் இரண்டு மணிக்குக் குழந்தை ஏசு ஆலயத்தில் ஓர் இளைஞன் கைலியுடன் மண்டியிட்டுச் செலுத்திய பிரார்த்தனை என்னவாக இருக்கும்?ஞாயிற்றுக்கிழமையின் நிழல் சாலையெங்கும் பரந்து விரிந்தது.

புதிய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறினேன்.ஏழு ரூபாய்த் தொலைவில் இருந்தது மேல உளூர் என்னும் த.க.வின் இளம்பிராயத்துக் கிராமம். அருகில் இருந்த நண்பரிடம் உங்களுக்கு எந்த ஊர்?என்றேன்.சரியாகக் காதில் வாங்காத பாவனையுடன் அவர் தூங்க ஆரம்பிக்க உரையாடல் பதில் கிடைக்காமல் முடிவுக்கு வந்தது.

சிவாஜிகணேசனின் சூரக்கோட்டையைத் தாண்டியது.எங்கு பார்த்தாலும் நெடுஞ்சாலை விரிவாக்கம்.யாரும் யாருடனும் பேசவில்லை. ஆனால் குறைந்தது இருபது பேராவது தொலைபேசியில் பேசியபடியும்,இருபத்திஐந்து பேராவது தொலைபேசியை நோண்டியபடியும் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்.

முடிக்கற்றைகளை மீண்டும் மீண்டும் சரி செய்தபடியும், தன்னை யார் கவனிக்கிறார்கள் என்று ஓரக்கண்ணால் பார்த்தபடியும் அமர்ந்திருந்த என் முன் இருக்கைப் பெண்ணை ரசித்தேன்.நடத்துனர் ஓட்டுனருடன் ஆடி வெள்ளி அன்று அம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றிய வைபவத்தை விலாவாரியாகக் கதைத்து வந்தார்.

எனது வலது கைப்புற இருக்கையின் பயணி மதிய உணவுக்குப் பின்னான மயக்கும் உறக்கத்துடன் ஆடியபடி வந்தார்.ஒரு பிரேக்குக்கு முன்புறக் கம்பியில் நெற்றியை ஓங்கி இடித்துக்கொண்டு மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பித் தூக்கம் தொடர்ந்தார்.

இரண்டாம் முறை சற்று பலமாக மோதிக்கொண்டபோது வலி சுள்ளென்று உரைக்க ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்தபடி மறு கையால் நெற்றியைத் தடவியபடியே தன்னை யாரும் கவனித்துவிட்டார்களா?என்று பரக்கப் பரக்கப் பார்த்தார்.

சிறிது நேரம் சென்றது.அவரை மீண்டும் பார்க்க நேர்கையில் அரைகோள வடிவில் வாயைத் திறந்தபடித் தூங்க ஆரம்பித்திருந்தார்.டிரைவர் இன்னொரு பிரேக் போடும்முன்பாக மேல உளூர் வந்து சேர்ந்தேன்.

அடர்ந்த பழுப்பு நிற Tஷர்ட்டோடும்,அதே நிற லுங்கியோடும் த.க. கைகளை வீச இறங்கி நடந்து கைகுலுக்கினேன்.மனது மகிழ்ச்சி அடைந்தது.
ஒரு பெட்டிக்கடையின் கருப்புக்கலர் வாங்கிப் பருகிவிட்டு த.க. கைகாட்டியபடி தன் இளம்பிராய நினைவுகளை காட்சிப்படுத்தியபடிக்கு வந்தார்.அவர் சிறுவனாய் ஓடிமறைந்த ஓடை நீரின்றிக் காய்ந்து கிடந்தது.

அவரின் நண்பர் பரஞ்ஜோதிவேலின் வீட்டை அடைந்தோம்.வீடெல்லாம் சாணமிட்டு மெழுகிய காட்சி-வெட்டிவைக்கப்பட்ட இளநீர்கள்-தொட்டி-வாளி நிரம்பிய நீர்-வானம் மறைத்த நீண்ட தென்னையின் கீற்றுகள்.

சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நண்பர் பரஞ்ஜோதிவேலை த.க. இப்போதுதான் சந்திக்கிறார்.பரஸ்பர அறிமுகங்கள் நிறைவுற்றன.பரஞ்ஜோதிக்கு த.க.வின் சகோதரியின் வயது.இருவருக்கும் இடையே கிணறு போல ஆழமான நட்பு.ஆனாலும் மரியாதை கலந்த நட்பு ததும்பி வழிந்தது.

(தொடரும்)

5.4.10

ஊடகம்

I
கொஞ்சம் கொஞ்சமாய்
உங்களுக்கே தெரியாது
உங்களின் சமையலறை
களவாடப்பட்டது.
உங்கள் ருசி-
உங்கள் மொழி
அதல பாதாளப்
படுகுழியில் தள்ளப்
பட்டதும்-நுனிநாக்குத்
தமிழ் பரவியதும்
கொஞ்சம் கொஞ்சமாய்
வேர்கள் உருவப்பட்டதும்
எல்லாமே இழந்ததும்
கல்லறையின் நிசப்தமாய்
என்னை உலுக்குகிறது.
II
சமையலறை அழிந்து
மெல்ல மெல்லப்
படுக்கைஅறையும்
சுவர்களை இழந்தன.
வெட்கம் பிடுங்கும்
அருவெறுப்போடு
கைகளில் சுமக்கும்
ரிமோட்களைத் துரக்க
மனமின்றி வரவேற்பறைக்கு
படுக்கை அறையை
அனுமதித்து
அங்கலாய்க்கிறீர்கள்.
III
மாறுதலைத் தவிர
எதுவுமே மாறாதது
என்றாலும்-
எது மாறியதோ
அது மாற்றப்பட்டது.
எது மாறாதிருக்கிறதோ
அது மாற்றமுடியாதது.
எது மாற்றப்பட்டபோதும்
மாற்றமடையாதிருப்பது
தீர்மானிக்கும்
என் வார்த்தைகளை.

3.4.10

சீதனம்




விட்டுச் செல்கிறேன் நிலத்தடிநீர் கொன்ற பாவத்தை
தணியாத தாகத்தை- ஈரமில்லா மனங்களை-
நெல்மணம் மறந்த வீடு முளைத்த வயல்வெளியை-

விட்டுச் செல்கிறேன் பிஸ்கட் தேனீருடன்
விவாதித்து ஒழியும் அமர்வுகளை-
நிசப்தம் கொல்லும் சதா பேச்சுக்களை-

விட்டுச் செல்கிறேன்-
அசுத்தமான புற்பரப்பை பாலிதீன் மண்வெளியை-
மாசு படுத்திய காற்றை- மாசு பட்ட அரசியலை-
மதிப்பில்லா எண்கள் தரும் மந்தைக் கல்வியை-

விட்டுச் செல்கிறேன் தாய்ப்பால் அற்றுக்
கதறும் என் தமிழை.

சரித்திரத்தின் சவுக்கடி வாங்கக் காத்திருக்கும்
மந்தையின் ஒரு ஆடாய் குற்ற உணர்வுடன்
விட்டுச் செல்கிறேன் கைகளில் கனக்கும்
இந்தக் கவிதையை.

1.4.10

கொடும் பிரிவு




காத்திருக்கிறேன் காரணங்களும்
சூழ்நிலைகளும் நிசப்தமாய்த் தொடரத்
தவிக்கிறது நமக்கான பொழுது.
உப்பில் ஊறிய நாளின் நெருக்கடிகளை-
கடக்கும் பாதையின் நெரிசல்களை- நன்கறிவேன்.
எப்படியும் நீ வந்து விடுவாய்.
இசைக்காத பியானோவின்
பெரும் அமைதியாய்ச் சொட்டுகிறது
நீயற்ற பொழுதின் அனல்.
காரணமற்ற தாமதம் தொடரத்தொடர
விபத்துக்களின் கருஞ்சாயம் பூசித்
துயருற்றது என் நண்பகல்.

23.3.10

அஸ்தமனம்


கொல்கத்தாவின் புராதனமான தெருக்களின் வாசனையைச் சுவாசித்தபடி நின்றிருந்தேன்.

இரவு ஒன்பது ஆகிறது. பத்து மணிக்கு ஒரு சவாரி காத்திருக்கிறது. அதற்குள் ஏதாவது சாப்பிட்டு விடலாமா? ரெண்டு பரோட்டாக்களைச் சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு தேநீர் பருகினேன். இனிமேல் இரவுச் சவாரிகளைத் தவிர்த்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

ஊருக்கு வெளியே அந்த அபார்ட்மென்ட். நெருங்க நெருங்க அந்த அடுக்கு வீடுகளின் அமைப்பே அலாதியாக இருந்தது. அநேகமான வீடுகளில் விடுமுறைக்காக வெளியூருக்குச் சென்றுவிட்டது தெரிந்தது.

வெளிச்சம் அதிகமில்லை. போக வேண்டிய வீட்டிலிருந்து மெல்லிய வெளிச்சம் கசிந்து வந்தது. மனது சஞ்சலமாக இருந்தது. வராமல் இருந்திருக்கலாமோ?

இரவுச் சவாரிகளை நான் தேர்ந்தெடுப்பதே இரவுகளின் மேல் எனக்கிருந்த காதலினால்தான். இரைச்சல் குறைந்த தெருக்களில் இசையின் துணையோடு வண்டி ஓட்டுவது என் பொழுதுபோக்கு. ஆனால் இந்த சவாரி அமானுஷ்யமாக மனதுக்குப் பட்டது. இறங்கிச் சென்று மெல்ல அழைப்பு மணியை இசைத்தேன். உற்றுப்பார்த்தபோது கதவு தாளிடப்படாதது தெரிந்தது. மெல்லத் தள்ளினேன். அறையின் நடுவே நாற்காலியில் எண்பது மதிப்புள்ள ஒரு மூதாட்டி.

"உள்ள வாப்பா" என்றார்.

அறையின் அமைப்பும் ஒழுங்கும் ஆச்சர்யமாக இருந்தன. சுவர்களில் படமோ,கண்ணாடியோ இல்லை.காலி செய்த வெற்றுத் தோற்றம். மின் விசிறிகளில் தூசி படிந்திருந்தது.அந்தப் பெண்ணின் அருகில் ஒரு சிறிய பெட்டி.ஒரு கையில் சில புகைப்பட ஆல்பங்கள்-காகிதங்கள் .வேறெதுவுமில்லை.

"போகலாமா அம்மா?" என்று கேட்டபடியே பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டிக்குச் சென்றேன். திரும்பி வந்து பார்க்கையில் மூதாட்டி உட்கார்ந்தபடியே கையை நீட்டினார்.கைகளைப் பற்றிக் கொண்டு நடந்து வண்டியில் அமர்த்தினேன்.

வண்டியை ஓட்டியபடியே கண்ணாடியில் பார்த்துக் கேட்டேன்."எங்கம்மா போகணும்?"

போகும் இடமும் செல்ல வேண்டிய வழியையும் சொன்னார். மீட்டரைப் போட்டேன். "அந்த வழில போனா சுத்தும்மா" என்றேன்."பரவாயில்லப்பா " என்றபடி யோசனையில் ஆழ்ந்தார்.சுருக்கம் நிறைந்த நெற்றியில் அளவான பொட்டு. காதுகளில் வைரத்தோடு பளபளத்தது.மிகச் சிறிய கண்கள்.கண்ணாடிக்குள் கண்களை மூடியபடியே சாய்ந்திருந்தார்.

"இங்க கொஞ்சம் நிறுத்தப்பா" என்றார் ஒரு பெரிய கட்டிடத்தின் அருகே.பழைய காலக் கட்டிடம்.இருளின் போர்வையில் வண்டியை நிறுத்தினேன்.ஜன்னலின் வழியே அந்தக் கட்டிடத்தை உற்றுப் பார்த்தபடி இருந்தார்."இந்த இடத்தில் சமையல் காரியாக பத்து வருஷங்கள் வேலை செய்திருக்கிறேன்"என்றார் பெருமூச்சுடன்.அந்தப் பெண்மணி சமைத்த பருப்பு மணக்கும் சாம்பார், தாளிப்பின் வாசனை எல்லாம் காற்றோடு கலந்து காலத்தோடு உறைந்து போய்விட்டது.வாழ்வின் இறுதி நோக்கி நழுவிய பாதையின் ஓரத்தில் நின்று அந்த அம்மா கையசைத்தது போலத் தோன்றியது. அத்தனை நேரம் என்ன யோசித்திருப்பாளோ? தெரியவில்லை."சரி.போகலாம்பா" என்றார்.

ரவிஷங்கரின் சித்தாரும் இருளும் இசைவாக வழிந்து பெருகியது.மனது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.சித்தாரின் தந்திகளில் கை விரல்கள் ஏறி இறங்கி ஆன்மாவை ஊடுருவிச் சென்றது இசை. நான் இருளின் வெளியில் கரைந்து போகத் தொடங்கி இருந்தேன்.

"நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன். டாக்டரும் அப்படித்தான் சொல்றாரு.கடைசியா எல்லாத்தையும் ஒரு தடவை பாத்திட ஆசையா இருக்கு".இருளை வெறித்தபடி வார்த்தைகளைச் சிந்தினார்.கண்ணாடி வழியே உற்றுப்பார்த்தேன்.கண்களின் ஓரத்தில் நீர் கசிந்து உருண்டது.சாலையை விழுங்கியபடிக் கார் ஓடிக்கொண்டிருந்தது.

"இங்க கொஞ்சம் நிறுத்துப்பா". நிறுத்தினேன்.

அது ஒரு நடன அரங்கம்.புதுப்பிக்கப்படாமல் சிதிலமாகி இருந்தது. வெளிறிப் போன பூச்சு.சீருடை கிழிந்து போயிருந்த ஒரு காவலாளி சுவரில் சாய்ந்து தூங்கியபடி இருந்தான்.பிரபலமான அந்தக்கால நாட்டியக்காரிகளின் கால்கள் பட்ட இடம்.நானே நான்கைந்து முறை வந்ததுண்டு.ஏக்கத்துடன் "நான் நிறைய நடனமாடிய இடம் இதுதாம்பா"என்றார்.அவரின் சதங்கைகளின் ஒலி அவரின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.எனக்குத்தான் அவரை அடையாளம் தெரியவில்லை.எத்தனை ஒப்பனைகள் சுமந்த முகம்?இன்று அடையாளம் இழந்து இருளின் ஆழத்தில் அசைகிறது.கைத்தட்டல்களின் அதிர்வுகளில் ஆடிய கால்கள்.மனது கனத்தது.

சித்தார் முடிந்து முகேஷ் "கபீ கபீ மேரே தில் மே"பாடிக் கொண்டிருந்தான்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது.அந்த அம்மா தனக்குத்தானே பேசியபடி வந்தார்."எது உச்சமோ அதுதான் வீழ்ச்சி.எது துவக்கமோ அதுதான் முடிவு". எனக்கு லேசாகப் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது.நாய்கள் ஒன்றை ஒன்று முகர்ந்து கொண்டே தலையை ஆட்டியபடியே ஓடிக்கொண்டிருந்தன.அவற்றின் வாழ்க்கையில் எது உச்சம் எது வீழ்ச்சி? தெரியவில்லை.

"இந்த வீடுதாம்பா கல்யாணம் முடிஞ்சு நான் மொதல்ல குடி புகுந்தது".நிறுத்தினேன்.

அசையாமல் நின்றிருந்த அந்த நான்கு சுவர்களுக்கும் அந்த அம்மாவை நிச்சயம் தெரிந்திருக்கும்.தெருக்களில் யாருமில்லை.

"கொஞ்சம் இறக்கிவிடப்பா ப்ளீஸ்" என்றார்.

அந்த வீட்டின் சுவர்களை முகர்ந்து தடவிப்பார்த்தார்.கதவுகளின் கிராதிகளில் கன்னத்தைப் பதித்துக் கைகளால் பிடித்துக் கொண்டார்.படிகளில் மெதுவாய்ச் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.அவர் மிகவும் நேசித்த வீடாக இது இருந்திருக்கவேண்டும்.ஒருவேளை அவரின் கணவரோடு இந்தப் படிகளில் அமர்ந்திருந்த தருணங்களோ-மகனைக் கொஞ்சிய மாலைகளோ கண் முன்னே விரிந்திருக்கக் கூடும்.படிகளைத் தட்டிப் பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல முற்பட்டார்.அவரால் பேச முடியவில்லை.சைகையால் "எல்லாம் போயிடுச்சு"என்பது போல அபிநயித்தார்.அவரின் தலையை வருடிக் கொடுத்தேன். காரிலிருந்து சிறிது தண்ணீரை எடுத்து குடிக்கக் கொடுத்தேன்.என் கண்களும்-மனதும் இளகிக் கரைந்தது.

வண்டி சென்றபடி இருந்தது."எனக்கு இப்ப யாரும் இல்ல.எத்தனை நாள் இன்னும் பாக்கி இருக்கோ தெரியல்ல". என்ன பேசுவது என்று தெரியாமல் இசையை நிறுத்தி விட்டு மௌனத்தைப் பரவ விட்டேன்."என்னால தாங்க முடியல்ல.நேரே போப்பா.பாத்ததெல்லாம் போதும்" என்றார்.

காக்கைகள் மெல்லக் கரகரத்தன.என்னென்னெவோ நினைவுகள்.மெதுவே முகவரியின் வாயிலில் நிறுத்தினேன். பார்ப்பதற்கு முதியோர் காப்பகம் போலத் தெரிந்தது.உள்ளே சென்று தகவல் தெரிவித்தேன். இருவர் வெளியில் வந்து அவரிடம் இருந்து ஒரு சீட்டைப் பெற்று சரிபார்த்தபடி இறக்கிச் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றனர்.அவரின் பெட்டியை எடுத்துச் சென்றேன்.

"உன்ன ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டேம்ப்பா.ரொம்ப நன்றி.எவ்வளவு ஆச்சு?
"பரவாயில்ல அம்மா.வேணாம்.மறுபடி வாய்ப்பிருந்தா சந்திக்கலாம்மா"
"ஒனக்கு புள்ள குட்டிங்கல்லாம் இல்லியா?இந்தா வாங்கிக்கப்பா"
"மத்த சவாரில பாத்துக்கறேன். வரேம்மா" என்று கையெடுத்து வணங்கிவிட்டுக் கிளம்பினேன்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது.நகரத்தின் இயக்கம் ஆரம்பிக்க இருந்தது. வீட்டை அடைந்தேன்.அன்றைக்கு வேறு சவாரி எதுவும் போகவில்லை.

16.3.10

பரிணாமம்




வயதானவர்களே பென்ஷன் தாரர்களே
பெற்ற பிள்ளைகளால் கணவன் மனைவியால்
கைவிடப்பட்டவர்களே அழைக்கிறோம் வாருங்கள்.

இருபத்திநாலு மணி நேரமும்
தூங்க விடாமல் ரூம் சர்வீஸ்
அவசர உதவிக்கு கத்துக்குட்டி மருத்துவ வசதி
எரிச்சல் மிக்க ஹோம் நர்ஸ் வசதி
அவசரத் தேவைக்கு ஷாப்பிங் செய்ய
வேகமாக ஓட்டும் ஓட்டுனருடன் வாகன வசதி

ஜன்னல்கள் இல்லாத காற்றோட்டம் மிகுந்த
சிங்கிள் ரூம் டபுள் ரூம் ஏ/-சி யுடன்
(பாத் ரூம் இணைக்கப்பட்டது)
எல்லா நேரமும் எல்லா சேனல்களும்
(வண்ண ரிமோட்டும் கண்ணாடியும் இலவசம்)

சுத்திகரிக்கப்பட்ட உப்புச் சுவையுடன் குடிநீர் சுடுநீர்
அனுபவமுள்ள மோசமான சமையல்காரர்கள்
வாயில் வைக்கமுடியாத அன்லிமிடெட் சைவ உணவு
பார்வையாளருக்கு வாரம் ஒருமுறை இலவச உணவு

ஹோம் அமைந்துள்ள இடம்:
உங்கள் வீட்டிலிருந்து எட்ட முடியாத மிக அருகில்
மரங்களே இல்லாத செயற்கையான சூழலில்.

குறிப்பு:
ஏன் பிறந்தோம் என்று புலம்ப தனி ஹால் வசதி-
செய்த தவறுகளை நினைத்துக் கதற தனி அறை வசதி-
வயது வாரியாக அனுபவங்களை அசைபோட புதிய லாய வசதி-

மிகக் குறைந்த கட்டணம். மிகக் குறைவான இடங்களே உள்ளன.
சேர்க்கைக்கு உடனே அணுகவும்.
கையில் பணம் இருக்கும் வரை சிறப்பான சேவை.

15.3.10

வசம்



படிப்பு இலவசம். அரிசி இலவசம். சீருடை இலவசம்.
சைக்கிள் இலவசம். செருப்பு இலவசம்.
பால்-முட்டை இலவசம். பிஸ்கட் இலவசம்.
கொடி பிடித்தது கோஷம் போட்டது
வகைக்கு பிரியாணி இலவசம்.சாராயம் இலவசம்.
நீயாரென்றே தெரியாத போதை இலவசம்.
தொலைக்காட்சிப் பெட்டியும் அது
தரும் சொரணையற்ற கிளுகிளுப்பும் இலவசம்.
ஆடு இலவசம். மாடு இலவசம். கணினி இலவசம்.
மிக்ஸி இலவசம். தரிசு நிலம் ஆளுக்குப் பத்து ஏக்கர் இலவசம்.
எருமை இலவசம். அதுபோடும் சாணி இலவசம்.
மழைக்கு இலவசம். வெயிலுக்கு இலவசம்.
ஓட்டுப் போட இலவசம்.மருத்துவம் இலவசம். சாவும் இலவசம்.
ஆட்சிக்கு வந்துவிட்டால் கஜானா மட்டும் என் வசம்.



அ-கவிதை



உன் சுயபுலம்பலைச் சொல்ல எழுதாதே கவிதை.

கோபம் அதிகமெனில் தோப்பில்
தனியே நின்று உரக்கக் கத்து.

சோகம் தாளவில்லை எனில்
துவைகல்லில் அமர்ந்து பாரம் கரைய அழு.

என்ன பசி என்றாலும் இரை தேடப் பழகு.

காதலிக்க வாய்த்தால் காதலி.
காதலில் தோற்றால் தாடி வளர்த்து
புல்புல்தாரா வாசி.

என்னதான் ஆனாலும்
தயவு செய்து கவிதை மட்டும் எழுதாதே
கொஞ்ச காலத்துக்கு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...