
ஒரு குடியசுத் தலைவரின் மாளிகைக்கும்-
ஒரு உப குடியரசுத் தலைவரின்
மாளிகைக்கும்-
தோராயமாக முப்பது
ஆளுநர் மாளிகைகளுக்கும் -
முதல்வர் மந்திரி பரிவாரங்கள்
அவர்கள் சுற்றம் கொற்றம் என்று
பெருங்கூட்டம்
இவர்களுக்கான மாளிகைகளுக்கும்-
எப்போதெல்லாம் ஆட்சி
மாறுமோ
அப்போதெல்லாம் புதிய மோஸ்தரில்
மறு நிர்மாணத்திற்கும்-
அவர்களின்
கிலோமீட்டர்கள் கணக்குகளில்லாத
பயணத்துக்கான இலவச எரிபொருளுக்கும்-
ஸெட்-ஒய்-எக்ஸ் என்ற பாதுகாப்பு
வளையங்களுக்கும் அவர்கள் பின்தொடரும்
வாகனங்களின் எரிபொருளுக்கும்-
திடீர் உடல் நலமின்மையைச் சமாளிக்கப்
பின் தொடரும் மருத்துவர்களின் எரிபொருளுக்கும்-
அவர்களின் மாளிகைகளில் உள்ள
பெயர் தெரியாத பூச்செடிகளுக்கும்-
நாய் வகைகளுக்கும்-
வெண்மை மாறாத சலவைகளுக்கும்-
மன அழுத்தம் ஏற்படுகையில்
இளைப்பாற
தன் செலவில் தங்கி
இளைப்பாறும் பொதுஜனத்தைத்
துரத்தியடித்து இளைப்பாறும்
விருந்தினர் மாளிகைகளுக்கும்-
அவர்களின் “அலுவல்” நேரத்தில்
குடும்பத்தினர் காரோட்டி
பொருத்தப்பட்ட வாகனங்களில்
சவாரி செய்து கடைகண்ணிகளுக்குச்
சென்று மகிழ்வதற்கும் -
கணக்கற்ற வெளிநாட்டுப் பயணத்தின்
செலவுகளுக்கும்-
உள்நாட்டில் வான் தரை நீர் மார்க்கமாக
எங்கும் எப்போதும் ஓசியில் பயணிப்பதற்கும்
கிழிக்கிற கிழிப்புக்கான
ஐந்திலக்கச் சம்பளம் அலவன்ஸ் வகைகளுக்கும்-
வெளிநாட்டின் உயர்தர
அறுவை சிகிச்சைகளுக்கும்-
ஓய்வுக்குப் பின் ஓய்வூதியத்துக்கும்
செத்த பின்
அரசு மரியாதையுடன்
சவத்தைப் புதைக்கவோ
எரிக்கவோ ஆகும் செலவுக்கும்
வருடத்தின் முந்நூத்து அறுபது நாளும்
காக்கைகளின் கழிவறையாய் மட்டும்
உபயோகமும்
போக்குவரத்து நெரிசலுக்கு
இடைஞ்சலாகவும் வெட்டியாய்
நிற்கும் ஆயிரக்கணக்கான
கற்சிலைகளின் பிறந்த நாள்
செத்த நாள் கருமாந்தரங்களுக்கு
மேடை அமைக்கவும்-
கேமிராவின் திசையில்
மாலையிட்டபடி சிரிக்கவும்
ஷாமியானா சர்வ மத
பிரார்த்தனைகளுக்கான
செலவினங்களுக்கும்-
முக்கியமான மக்களின்
பிரச்சனைகளுக்காக
எப்போதாவது உண்ணாவிரதம்
இருக்க நேரின் அதற்கான
திடீர் மேடை கழிவறை செலவுக்கும்-
மேற்சொன்ன சொல்லாமல்விட்ட
உங்களின் எல்லா இலவசங்களுக்கும்-
காப்பீடு செய்யத் தேவையில்லாத
இருபது வருஷப் புராதன
டிவிஎஸ் 50க்கு பெட்ரோல் போடுவதன்
மூலம் தெரியாமலே வரிகட்டும்
கோடிக்கணக்கான சாமான்யர்களின்
தலையில் மேலும் மூணு ரூபாய்
ஏற்ற உங்களுக்கு வெட்கமாயில்லை?
அம்பானிக்கும் ஒரே விலை
பெயரில்லா எனக்கும் ஒரே விலை.
நல்ல பொருளாதார சிந்தனை
உங்களது.
தான் போதித்த படி வாழ்ந்துகாட்டி
வாழ்வின் இறுதிநாட்களில்
மன வருத்தத்துடன்
உயிர் துறந்த மஹாத்மா
மோகன் தாஸின் எளிமை -
அவரின் சிலையின் கீழ்
நின்று எளிமை குறித்து
போதிக்கும் உங்களில்
ஒருவரையுமா
அந்த ஆன்மா ஊடுருவவில்லை?
ஆண்டு பூராவும் கூவுகிறீர்களே
ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று
அந்த இழப்புக்குச் சமமாய்
தண்ணீராய்ச் செலவிடும்
நாட்டின் வரிப்பணம்
நீங்கள் கட்டாமல் ஏமாற்றுவது
போலல்ல.
நாங்கள் ஒவ்வொரு முறை
செலவிடும் போதும்
ஒவ்வொரு முறை
சம்பாதிக்கும் போதும்
ஒவ்வொரு முறை
சேமிக்கும் போதும்
ஒவ்வொரு முறை
சேமித்ததும் திவாலாகாமல்
திரும்பப் பெறும்போதும்
கட்டும் வரிப்பணமய்யா அது.
எம் கண்களில்
பெருத்த அலையின்
எழுச்சி
பார்வைக்குத் தப்பிய
தொலைவில் எழுகிறது.
எம் சிந்தையில்
புது மாற்றங்கள் தரவுள்ள
நவ இளைஞர்களின்
வரவைக் கட்டியம்
சொல்கிறான் கால தேவன்.
உங்களின் இருப்பும்
இல்லாமையும்
தீர்மானிக்கப் பட இருக்கிறது.
உங்களின்
சுவடும் கபடும்
நசுக்கப் படவும் பொசுக்கப்படவும்
இருக்கிறதென
எச்சரிக்கிறது காட்டுச்சுடராய்
என் எழுத்து.









