25.12.10

கடவுளின் குழந்தைகள்.


குழந்தைகள் எதையுமே யோசிக்காமலோ காரணமில்லாமலோ சொல்வதோ செய்வதோ இல்லை.

அவர்கள் கையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் அநேகமாக அவர்கள் சொல்வது கவிதையாகவோ உண்மையாகவோ இருக்கிறது.

ஒரு பொய்யை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையுண்டு.உண்மையை மறந்து விடலாம் என்பதையே குழந்தைகளை நினைவில் வைத்துச் சொன்ன வாக்கியமாக இருக்குமோ தெரியவில்லை.

இன்று தஞ்சாவூர்க்கவிராயர் தொலைபேசியில் ஒரு கவிதை வாசித்துக் காட்டினார்.

வானத்தில் வசிப்பது
யார் என்று
கேட்ட குழந்தையிடம்
கடவுள் என்றேன்.
இல்லை
காகம் என்று
திருத்தியது குழந்தை.

இது அவருக்கும் அவரின் இரண்டு வயதுப் பேரனுக்கும் நடுவில் நடந்த சம்பாஷணையில் பிறந்த கவிதை. இதே தஞ்சாவூர்க்கவிராயருக்கு இருபத்திஐந்து வருடங்களுக்கு முன்னால் மகன் பிறந்தபோது அவன் அவரிடம் கேட்ட கேள்வியும் இன்னும் என்னிடம் இருக்கிறது. “அப்பா! தண்ணீலயே நீஞ்சிக்கிட்டு இருக்கே இந்த மீன்லாம் ராத்திரீல எப்படீப்பா தூங்கும்?”

ஸென் தத்துவம் சொல்வதும் இதைத்தான்- “எது அநுபவமோ அது கவிதை.”

குழந்தைகளின் கண்களைப் பாருங்கள். அவை பொய் சொல்வதில்லை. அன்பைப் பூசுகின்றன. அவற்றில் கர்வமோ அகம்பாவமோ அலட்சியமோ இல்லை. இவையெல்லாம் ஒரு குழந்தை யோசிக்கத் துவங்கும் வரைதான். அது கண்ணெதிரே ஒரு கடவுளைப் பார்க்கும் போது கடவுளையும் காட்டுமிராண்டியைப் பார்க்கும்போது காட்டுமிராண்டியையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாய் இருக்கிறது.

தினமும் செய்தித்தாள் வாசிப்பவனின் குழந்தைக்கு அந்தப் பழக்கம் தானாய் வந்து அதன்பிறகு தகப்பனால் சுடச்சுட செய்தித்தாள் வாசிக்க முடிவதில்லை என்று சந்தோஷமாய் அலுத்துக் கொள்ள முடிகிறது.புத்தகக் கண்காட்சிக்குப் போகத் துவங்குகிறது.

ஓவியம் தீட்டவும் பாட்டுக்கள் பாடவும் தெரிந்தவளின் குழந்தைக்குத் தொற்றுவியாதி போலத் தானாய்த் தொற்றிக்கொள்கிறது. பாட்டி சொடுகு போட்டபடி இருப்பதைக் காணும் பேத்தி சொடுகுவின் நுணுக்கங்களை இயல்பாய்க் கற்கிறாள்.

அதே போல அப்பாவின் பேச்சு ஒரு வீட்டில் எல்லோரையும் ஆட்டுவித்தால் அதே பாணியில் பேசவும் நகலெடுக்கவும் அந்தக் குழந்தை கற்றுக்கொள்கிறது. விரும்புகிறது. தாயைப் போலப் பிள்ளையும் நூலைப் போலச் சேலையும்.

எழுதிக்கொண்டிருக்கும்போது ஒஷோ சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஆசிரியை வகுப்பின் குழந்தைகளிடம் ஏசுவின் படத்தை வரையச் சொல்ல எல்லாக் குழந்தைகளும் தங்கள் மனதிலுள்ள ஏசுவை வரைந்துகொண்டிருக்க என்னைப் போலிருந்த ஒரு குழந்தை மட்டும் விமானத்தின் படத்தை வரைந்து மூன்று இருக்கைகளுடன் முடித்தது. ஆசிரியை என்னமுயன்றும் குழந்தையின் மனதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் கேட்க குழந்தை சொன்னது:

”முதல் இருக்கையில் ஏசு. இரண்டாவது இருக்கையில் அவருடைய அம்மா.”
”சரி. மூன்றாவது இருக்கை காலியாக இருக்கிறதே அதில் யார்?”
“அதுதான் பைலட்டுக்கு. அவரில்லேன்னா ப்ளேன் கீழ விழுந்துடும்ல”

ஆக குழந்தைகளின் மனது தர்க்கங்களுக்கு விடையை நேரடியாகச் சொல்வதாகவும் மற்றொரு பார்வையில் மிக எளிமையானதாகவும் இருக்கிறது.

குழந்தைகள் பூட்டாத கதவுகளுக்குச் சாவியைத் தேடுவதில்லை. தேவையற்ற இடங்களில் நம்பிக்கை கொள்வதிலை. தேவையான இடங்களில் சந்தேகம் கொள்வதில்லை. ஒரு ஊதுவத்தியின் சுழலும் நறுமணப்புகை போல-வெற்றிடங்களையெல்லாம் நிரப்பும் ஒப்பில்லாத இசை போல- இருக்குமிடங்களை தெய்வீகமானதாய் சுகந்தமானதாய் மாற்றுகிறார்கள்.

என்றும் உங்களின் உற்சாகத்தையும் இளமையையும் காத்துக் கொள்ள இரண்டு காயகல்பங்கள் உள்ளன. அதில் ஒன்று குழந்தைகளின் சகவாசம். கரைந்து
போய்விட்ட என் குழந்தைமையைத் தேடியலைகிறேன் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தையின் பின்னும்.

24 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

மிக அருமை.பல மாதங்களாக எழுத நினைத்த விஷயம்.சிரிப்புக்கான எந்த சந்தர்ப்பத்தையும் தவற விடாத எளிய, அரிய குட்டி மனிதர்கள்...அவர்களை எண்ணுதலும் இனிமை, வாசித்தலும் இனிமை.

G.M Balasubramaniam சொன்னது…

குழந்தைகளின் உலகமே தனி.அவர்களின் எண்ணங்களை ஊகிக்க முடியாது. நாம் எதைச்சொன்னாலும் நம்பும் அவர்களுக்கு வாழ்ந்து காட்டுதலே வழிகாட்டியாக இருக்கும் என்பதால் நம் பொறுப்புகள் கூடுகின்றன.சந்ததிகள் நன்றாக விளங்க நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பது முக்கியம். அழகாக கூறியுள்ளீர்கள்

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி..

கவிதை சிறுகதை எழுதும் பல சமயங்களில் குழந்தையாயிருந்த பருவத்திற்கு சென்றுவிடுவது வழக்கம். அந்த உலகம் அற்புதமானது. தாகூர் சொன்னார் ஒரு குழந்தையைப் பார்த்து என்னால் இதுபோன்ற ஒரு கவிதையை எழுத முடியவில்லையே என்று.

பாசாங்கு அற்றது. கள்ளங்கபடமற்றது. எதார்த்தமானது. எந்த கல்மிஷமும் இல்லாதது. இயல்பானது. எவ்வித கவலையுமற்றது குழந்தை. இப்படித்தான் கவிதையும் என்பதை உணர்த்தியவர் தாகூர்.

என்னுடைய மனைவியின் சகோதரியின் மகன் மிகச்சிறிய வயது. அவன் பேசும் ஒவ்வொரு சொல்லும் மாறுபட்ட சிந்தனையை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. ஒரு சான்று மட்டும். அவனிடம் வாழ்க வளமுடன் என்று சொன்னவுடன் வீழ்க வளமுடன் என்றான். காபி ஆற்றுவதைப் பார்க்கும்போது கேட்டான் ஏன் காபி கீழே விழுது. இப்படி பல ஞானங்களைக் குழந்தைகள் உலகத்திடமிருந்து கற்றுக்கொள்ளலாம். பல சமயங்களில் நமக்கு ஆசானாகவும், பல பண்புகளைக் கற்றுத் தரும் நிலையிலும் பல வாழ்க்கைப் பாடங்களையும் குழந்தைகள் கற்றுக் கொடுத்து மறந்துபோகின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் குழந்தைகள் பற்றி எழுதுவேன் சுந்தர்ஜி. நன்றி. மேன்மையான பதிவிற்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

குழந்தைகள் உலகம் தனி தான்.
அவை எதையும் சொன்னால் நம்புவதில்லை...உரசிப் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளும் அறிவு ஜீவிகள் அவை!

dineshkumar சொன்னது…

மழலை பேச்சும் வார்த்தை வீச்சும் நம்மையே புரட்டிபோடும் கேள்விக்கணைகளால் பதில் கூற முடியாமல் பதரிவிடுவோம் சில சமயம்..
கண்கண்ட கடவுளாயிற்றே அவர்கள்

பத்மா சொன்னது…

நல்ல பகிர்வு சுந்தர்ஜி ....
குழந்தைகள் உள்ள இடம் மகிழ்வின் ஊற்று ......
எந்த சமயத்திலும் ஒரு ஒன்றரை வயது குழந்தை கூடவே இருந்தால் எந்த ஒரு வேண்டாத உணர்வுகளும் அருகில் இல்லாமலே போகும் ..நான் கூட சில சமயம் மனம் சோர்வுற்று இருக்கும் சமயம் ஒரு குழந்தையை கொஞ்சினால் சோர்வு ஓடிவிடும் என நினைப்பேன்.அதை விட மேல் நம்மில் உள்ள குழந்தையை சாகடிக்காமல் இருப்பது சாலச் சிறந்தது ...யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என நான் அதற்கு தீனி போட்டு கொழுக்க விடுகிறேன் ..
கொஞ்சம் புன்னகைக்கவும் முடிகிறது அதனால், அவ்வப்போது ...

Matangi Mawley சொன்னது…

Beautiful-aa ezhuthiyirukkenga sir!
ennoda amma appa- romba cautious parenting panninaanga. ippo atha paththi enkitta sollum pothu enakka puriyarathu. desmond morris- nu oru human psychology expert sollaraar- kozhantha porantha 15 mins laye starts learning by imitation-nu. 75% growth oru kozhanthaikku surroundings-lernthu thaan varuthu. 7 vayasu varaikkum naama enna mould kodukkaromo- athu thaan varum-nu en appa solluvaar. avar sollarathu nijam thaan-nu enakku ippo thonuthu.

as a person grows- he loses touch with his inner child. proximity with the inner child is very essential. for sometimes- inner child becomes highly essential to be creative!

brilliant write-up sir!

காமராஜ் சொன்னது…

நான் திரும்பவும் குழந்தையாக ஆசைப்படுவதுண்டு.
ஆனால் அதற்கான காரணகாரியங்கள் யோசித்ததில்லை.இந்த இடுகை என்னையும் குழந்தையினையும் ஒரு சேரப்புரியச்சொல்லுகிறது.நன்றி சுந்தர்ஜி.திரும்பத்திரும்ப படிக்கிறேன்.

kashyapan சொன்னது…

வையாபுரி பிள்ளை என்று ஒரு தமிழரிஞர் இருந்தார்.குழந்தைகள் பார்வையில் உலகத்தைக் கேள்விகளாக்கி அதற்கானபதிலையும் குறிப்பிட்டு நூல் எழுதியுள்ளார்.அந்தக் காலத்தில் புதுமணத்தம்பதியினருக்கு பரிசாகக் கொடுப்பேன்.அற்புதமான புத்தகம். ---காஸ்யபன்

ஹேமா சொன்னது…

குழந்தைகளின் உலகமே தனியானதும் உண்மையானதும் அன்பானதும் இயல்பானதும்கூட !

சுந்தர்ஜி சொன்னது…

எண்ணும்போதும் எண்ணாத போதும் இனிக்க வைப்பவர்கள் குழந்தைகள்.நன்றி சைக்கிள்.

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்ந்து காட்டுவோம் பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

சிலர் பாடும்போது ச்சே. இவர் பாடியிருக்கலாமோ என்று தோன்றும். அது போல இந்தப் பதிவை நீங்க எழுதியிருந்தா இன்னும் அது அழகா இருந்திருக்குமோ எனத் தோன்றவைத்தது உங்கள் பின்னூட்டம்.

சீக்கிரம் எழுதுங்க ஹரணி.

சுந்தர்ஜி சொன்னது…

நிஜம்தான் சார் நீங்க சொலவ்து.அவர்களிடம் நாம் திறந்த மனதோடு இருந்தால் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன ஆராரார் சார்.

சுந்தர்ஜி சொன்னது…

பாத்த உடனேயே குழந்திகளைத் தூக்கிட்டு வந்துடற ஆளாச்சே தினேஷ் நீங்க.

உங்கள விடவா நான் குழந்தைகளைப் புரிந்துகொண்டு விடப் போகிறேன்.

சொல்லுங்கள் சபையோரே.

சுந்தர்ஜி சொன்னது…

ஆழ்ந்த ரசனையும் முதிர்ச்சியும் கொண்ட உங்களின் வார்த்தைகளில் எழுதிமுடித்த அயற்சி புது உருக் கொள்கிறது.

ரொம்ப சந்தோஷம் மாதங்கி.அடிக்கடி வாங்க.

சுந்தர்ஜி சொன்னது…

வெளிப்படையான நேர்மையான கருத்துக்களின் மறுபெயர்தான் கமராஜோ?

நன்றி நண்பரே.

சுந்தர்ஜி சொன்னது…

வையாபுரிப் பிள்ளையை வாசிக்க அகப்பட்டபோது தவறவிட்டேன்.சீக்கிரம் வாசித்துவிடவேண்டும்.இல்லா
விட்டால் உங்களிடமிருந்து எனக்கான கருத்தை வாங்கமுடியாதுன்னு நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி காஸ்யபன் சார்.

சுந்தர்ஜி சொன்னது…

சுவாரஸ்யமானதும் கூட ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

வழக்கமா நாலஞ்சு பேரோட நம்ம இடுகையும் பின்னூட்டமும் முடிஞ்சுபோயிடும்.

இந்தத் தடவை ஒரு பத்துப் பின்னூட்டமா யாரு என்னன்னு கண்டுபிடிச்சு கூட்டத்தெல்லாம் விலக்கிப் பின்னூட்டத்துக்கு மறு ஊட்டம் போட்டுட்டுத் திரும்பிப் பாத்தா உங்களுக்குப் போட்ட மறுமொழி மிஸ்ஸாகிப் போச்சு பத்மா.தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்.

நல்ல ஆழமான பார்வை பத்மா.

நாம சாகிற வரைக்கும் நமக்குள இருக்கிற குழந்தை சாகாதிருந்தால்தால்தான் நாம் வாழ்ந்ததாக அர்த்தம்.

யூ டோன்ட் வொர்ரி பத்மா.நல்லாத் தீனி போடுங்க. கொழுக்க விடுங்க.

Harani சொன்னது…

குழந்தைகளைப் பற்றி மறுபடியும் எழுதவேண்டும் என்று வற்புறுத்துகின்றன. உங்கள் பதிவும் குழந்தைகளும். நிறைய குழந்தைகளுடன் வெவ்வேறான தருணங்களில் வெவ்வேறான அனுபவங்களில் கரைந்து இருக்கிறேன்.

பல சமயங்களில் ஒரு கற்பனையை நினைப்பதுண்டு சில விபத்துக்களும் இயற்கை சீற்றங்களும் நடைபெறும்போது ஆண்டவன் இதனைப் பார்ப்பதில்லை என்றால் அவன் குழந்தைகளிடம் பொழுதைக் கழிக்கச் சென்றிருப்பான் என்று நினைத்துக்கொள்வேன். குழந்தைகள் வடிவில்தான் பல அவதாரங்களைக் கடவுள் கொள்வதற்கு அவனுக்கு குழந்தை பிடித்திருக்கிறது என்று மட்டுமல்ல அந்த வடிவத்தில்தான் பக்தியின் சுவையை அனுபவித்து வரத்தை அளித்துவிட சுகமாக இருக்கும்.

குழந்தைகளின் கோபத்தை ரசிக்கலாம். அழுகையை ரசிக்கலாம். ஆர்ப்பாட்டத்தை ரசிக்கலாம். அட்டகாசத்தை ரசிக்கலாம். நம்மால் தாங்க முடியாத வலியுடன் பளிச்சென்று பிஞ்சு கை வீசி அடிக்கும்போது அந்த வலியை ரசிக்கலாம். வாழ்வின் எத்தனையோ முக்கிய தருணங்களின் வேரைப் பிடுங்கி குழந்தைகள் சிரித்து விலகும்போதுகூட நமக்கு வரும் எல்லையைற்ற இயலாமையை மறந்து மன்னித்திருக்கிறோம் குழந்தைகளால்.

கலைந்து கிடக்கும் வீட்டில் குழந்தைகள்தான் கடவுளை அழைத்து வருகிறார்கள். வாழ்வின் உச்சக்கட்ட நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நிறைத்து வைக்கிறார்கள்.

நாட்டுப்புற வழக்கில் நிலவை குழந்தை வீசியெறிந்த தட்டென்றும் அதிலிருந்து சிதறிய சோற்றுப் பருக்கைகளை நட்சத்திரங்கள் என்றும் தாலாட்டு பாடுவார்கள்.

பிள்ளையில்லாமல் இருக்கும் பலரிடம் பேசினால் குழந்தைகளின் அருமைகளை அவர்கள் தான் தெளிவாகவும் நிறையவும சொல்லுவார்கள்.

குழந்தைகளின் பல அருமைகளைப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் பேசும். குழந்தைகளிடம் தனி மொழியும் சொற்களும் கிடைக்கும்.

குழந்தைகள்

மனித வாழ்வின் ஈடேற்றம்.

மகிழ்ச்சியின் வேர்.

அன்பின் கரு.

நிம்மதியின் திறவுகோல்.

ஆசையின் கரை.

நமது இளமையின் பெட்டகம்.

துன்பத் தாகத்தின் தண்ணீர்.

சத்தியஜோதியின் சுடர்.

உலகின் வேதம்.

உயிர்த்திருத்தலின் ஞானம்.

நம்மைக் கிறங்கவைக்கும் இசை.

மொழியின் தாய்.

தாய்மையின் அடையாளம்.

குழந்தைகளின் வழியாக நாம் எல்லாவற்றையும் மீட்டுக்கொள்ளலாம். நன்றி சுந்தரஜி.

சுந்தர்ஜி சொன்னது…

சொன்ன உடனேயே எழுதிட்டீங்க.நான் சொல்லாததையும் எழுதிட்டீங்க ஹரணி.

//கலைந்து கிடக்கும் வீட்டில் குழந்தைகள்தான் கடவுளை அழைத்து வருகிறார்கள். வாழ்வின் உச்சக்கட்ட நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நிறைத்து வைக்கிறார்கள்.//

குழந்தைகளின் யார் என்று வரையறுக்க ஒரு மஹாவாக்கியம் சொல்லவேண்டுமானால் மேலேயுள்ள வாக்கியத்தைச் சொல்லிவிடலாம்.

காலங்கள் கடந்த நட்புக்கும் அன்புக்கும் நன்றி என்னுயிர்த் தோழா!

Nagasubramanian சொன்னது…

"எப்பொழுதும் ஏதோ ஒரு குழந்தையிடம் பழகிக் கொண்டே இரு. உன்னால் ஒரு போதும் குழந்தைகளை புரிந்துக் கொள்ளவே முடியாது. ஆனால் புரிந்துக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டே இரு. அது தான் உன்னை நீ புதுப்பித்துக் கொள்ள மிகச்சிறந்த வழி" என்று எங்கோ படித்தேன். அது உண்மை என அனுபவத்திலும் உணர்ந்தேன்

சுந்தர்ஜி சொன்னது…

குழந்தைகள் பற்றிய உங்கள் வாசிப்பும் அனுபவமும் அற்புதம் நாகசுப்ரமணியன்.

முதல் முறை வருகிறீர்கள்.அதற்கு என் தனி நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...