ஒரு குடியசுத் தலைவரின் மாளிகைக்கும்-
ஒரு உப குடியரசுத் தலைவரின்
மாளிகைக்கும்-
தோராயமாக முப்பது
ஆளுநர் மாளிகைகளுக்கும் -
முதல்வர் மந்திரி பரிவாரங்கள்
அவர்கள் சுற்றம் கொற்றம் என்று
பெருங்கூட்டம்
இவர்களுக்கான மாளிகைகளுக்கும்-
எப்போதெல்லாம் ஆட்சி
மாறுமோ
அப்போதெல்லாம் புதிய மோஸ்தரில்
மறு நிர்மாணத்திற்கும்-
அவர்களின்
கிலோமீட்டர்கள் கணக்குகளில்லாத
பயணத்துக்கான இலவச எரிபொருளுக்கும்-
ஸெட்-ஒய்-எக்ஸ் என்ற பாதுகாப்பு
வளையங்களுக்கும் அவர்கள் பின்தொடரும்
வாகனங்களின் எரிபொருளுக்கும்-
திடீர் உடல் நலமின்மையைச் சமாளிக்கப்
பின் தொடரும் மருத்துவர்களின் எரிபொருளுக்கும்-
அவர்களின் மாளிகைகளில் உள்ள
பெயர் தெரியாத பூச்செடிகளுக்கும்-
நாய் வகைகளுக்கும்-
வெண்மை மாறாத சலவைகளுக்கும்-
மன அழுத்தம் ஏற்படுகையில்
இளைப்பாற
தன் செலவில் தங்கி
இளைப்பாறும் பொதுஜனத்தைத்
துரத்தியடித்து இளைப்பாறும்
விருந்தினர் மாளிகைகளுக்கும்-
அவர்களின் “அலுவல்” நேரத்தில்
குடும்பத்தினர் காரோட்டி
பொருத்தப்பட்ட வாகனங்களில்
சவாரி செய்து கடைகண்ணிகளுக்குச்
சென்று மகிழ்வதற்கும் -
கணக்கற்ற வெளிநாட்டுப் பயணத்தின்
செலவுகளுக்கும்-
உள்நாட்டில் வான் தரை நீர் மார்க்கமாக
எங்கும் எப்போதும் ஓசியில் பயணிப்பதற்கும்
கிழிக்கிற கிழிப்புக்கான
ஐந்திலக்கச் சம்பளம் அலவன்ஸ் வகைகளுக்கும்-
வெளிநாட்டின் உயர்தர
அறுவை சிகிச்சைகளுக்கும்-
ஓய்வுக்குப் பின் ஓய்வூதியத்துக்கும்
செத்த பின்
அரசு மரியாதையுடன்
சவத்தைப் புதைக்கவோ
எரிக்கவோ ஆகும் செலவுக்கும்
வருடத்தின் முந்நூத்து அறுபது நாளும்
காக்கைகளின் கழிவறையாய் மட்டும்
உபயோகமும்
போக்குவரத்து நெரிசலுக்கு
இடைஞ்சலாகவும் வெட்டியாய்
நிற்கும் ஆயிரக்கணக்கான
கற்சிலைகளின் பிறந்த நாள்
செத்த நாள் கருமாந்தரங்களுக்கு
மேடை அமைக்கவும்-
கேமிராவின் திசையில்
மாலையிட்டபடி சிரிக்கவும்
ஷாமியானா சர்வ மத
பிரார்த்தனைகளுக்கான
செலவினங்களுக்கும்-
முக்கியமான மக்களின்
பிரச்சனைகளுக்காக
எப்போதாவது உண்ணாவிரதம்
இருக்க நேரின் அதற்கான
திடீர் மேடை கழிவறை செலவுக்கும்-
மேற்சொன்ன சொல்லாமல்விட்ட
உங்களின் எல்லா இலவசங்களுக்கும்-
காப்பீடு செய்யத் தேவையில்லாத
இருபது வருஷப் புராதன
டிவிஎஸ் 50க்கு பெட்ரோல் போடுவதன்
மூலம் தெரியாமலே வரிகட்டும்
கோடிக்கணக்கான சாமான்யர்களின்
தலையில் மேலும் மூணு ரூபாய்
ஏற்ற உங்களுக்கு வெட்கமாயில்லை?
அம்பானிக்கும் ஒரே விலை
பெயரில்லா எனக்கும் ஒரே விலை.
நல்ல பொருளாதார சிந்தனை
உங்களது.
தான் போதித்த படி வாழ்ந்துகாட்டி
வாழ்வின் இறுதிநாட்களில்
மன வருத்தத்துடன்
உயிர் துறந்த மஹாத்மா
மோகன் தாஸின் எளிமை -
அவரின் சிலையின் கீழ்
நின்று எளிமை குறித்து
போதிக்கும் உங்களில்
ஒருவரையுமா
அந்த ஆன்மா ஊடுருவவில்லை?
ஆண்டு பூராவும் கூவுகிறீர்களே
ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று
அந்த இழப்புக்குச் சமமாய்
தண்ணீராய்ச் செலவிடும்
நாட்டின் வரிப்பணம்
நீங்கள் கட்டாமல் ஏமாற்றுவது
போலல்ல.
நாங்கள் ஒவ்வொரு முறை
செலவிடும் போதும்
ஒவ்வொரு முறை
சம்பாதிக்கும் போதும்
ஒவ்வொரு முறை
சேமிக்கும் போதும்
ஒவ்வொரு முறை
சேமித்ததும் திவாலாகாமல்
திரும்பப் பெறும்போதும்
கட்டும் வரிப்பணமய்யா அது.
எம் கண்களில்
பெருத்த அலையின்
எழுச்சி
பார்வைக்குத் தப்பிய
தொலைவில் எழுகிறது.
எம் சிந்தையில்
புது மாற்றங்கள் தரவுள்ள
நவ இளைஞர்களின்
வரவைக் கட்டியம்
சொல்கிறான் கால தேவன்.
உங்களின் இருப்பும்
இல்லாமையும்
தீர்மானிக்கப் பட இருக்கிறது.
உங்களின்
சுவடும் கபடும்
நசுக்கப் படவும் பொசுக்கப்படவும்
இருக்கிறதென
எச்சரிக்கிறது காட்டுச்சுடராய்
என் எழுத்து.
22 கருத்துகள்:
//எம் சிந்தையில் புது மாற்றங்கள் தரவுள்ளநவ இளைஞர்களின் வரவைக் கட்டியம் சொல்கிறான் கால தேவன்.உங்களின் இருப்பும்இல்லாமையும் தீர்மானிக்கப் பட இருக்கிறது.உங்களின் சுவடும் கபடும்நசுக்கப் படவும் பொசுக்கப்படவும்இருக்கிறதெனஎச்சரிக்கிறது காட்டுச்சுடராய் என் எழுத்து//
வெந்து தணிந்தது காடு.. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
ஒரு லட்சம் பேர் நாடு முழுமைக்கும் அணி திரண்டால் போதும்.. பார்த்து விடலாம்.. ஒரு நல் மாற்றத்தை..
சுந்தர்ஜி
உங்களின் காட்டுச்சுடர் நீண்டு வளரட்டும். உங்களின் கோபம் நிறைய சொற்களில் நீர்க்கிறது. இன்னும் சுருக்கென்று தையுங்கள்..
சிந்தித்து ,சிந்தித்து மனம் வாடி உள்ளத்தில் பீறிடும் எண்ணங்க்ளுக்கு வடிகால் தேட இந்த வயதில் எழுத்தை உபயோகிகக துவங்கி உள்ளேன். என் பதிவுகளைப் பார்த்தால் புரியும். என் ஆதங்கமே எழுத்துகள் எல்லோரிடமும் சென்றடைவதில்லை. தாக்கமும் பாதிப்புமேற் படுவதில்லை. இருந்தாலும் ஒத்த சிந்தனை உடையவர்கள் நிறையவே இருக்கவேண்டும், உங்களைப்போல என்று தெரியவரும்போது, சற்றே ஆறுதலாக உள்ளது.வாழ்த்துக்கள்.
படித்து முடித்தவுடன், கண்களை குளிர் நீரால் கழுவிக் கொண்டேன்.ஆம்
எழுத்து அவ்வளவு சூடு!
அவர்களுக்கு நம்மைப் பற்றி என்ன கவலை.
பதினான்காம் லூயின் மனைவி கேட்டாளாம்: அரண்மனை வாசலில் என்ன கலாட்டா?
காவலன்: மக்கள் BREADக்காக கூச்சலிடுகிறார்கள்..
ராணி; ஏன்?
காவலன்: BREAD எங்கேயும் கிடைக்கவில்லை..
ராணி: IF THEY DON'T HAVE BREAD, LET THEM TAKE CAKES!!
அவளின் அந்த பேச்சும் ப்ரென்ச் புரட்சிக்கு ஒரு காரணமாய் அமைந்தது!
இந்த படா ஊதாரித்தனத்தினை தனைத்தனியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் மொத்தமாகக்கூட்டிவைத்துப்பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது.காக்கைகளின் கழிப்பறையாவதற்குத்தான் எவ்வளவு ஆசைப்படுகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்.
என் தேசத்து இளரத்தம் சூடேறக்கிடைக்கிற கனல் வரிகள்,அவர்களின் கானற் பொழுதுகளை திசை மடக்கவேண்டும்.மடங்கும்.
இது போக கணக்கில் வராத, கணக்கிட முடியாத வரவு, செலவுகள். எதையும் தாங்கும் இதயம், அஞ்சா நெஞ்சம் போன்ற பட்டங்கள் கூட மக்களுக்கு மிச்சமில்லை. பொறுமையாய் வாசிக்க முடியாத கோபமே எழுகிறது. எப்படித்தான் எழுதுனீங்களோ?
yen neraya peraal parka pada villai intha pathivu...
payamo??
nanraga irunthathu pathivu...
இணைந்து கொள்கிறேன்
நானும் உங்களுடன்
மாற்றம் ஒன்றுதான் மாறாத ஒன்று!மாறட்டும்!
'கடும் பயணம்' என்ற எண்ணமே பல சமயம் முதலடியைத் தடுத்து விடுகிறது. அப்படித் தொலைத்த பயணங்கள் எத்தனை! "எனக்கென்ன ஆச்சு" என்றே பெரும்பாலும் இருக்கிறேன் - கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது உங்கள் கோபம்.
ரௌத்ரம் , கேள்வி ,முனைப்பு ,புதிய பாதை வழி வகுக்கும் ..வாழ்த்துக்கள்
முதல் மழையாய் உங்கள் பின்னூட்டம் ரிஷபன். பெருத்த தெம்பைக் கொடுத்தது.
தெளிவாய் சிந்திப்பவர்களின் சக்தியெல்லாம் வார்த்தைகளிலும் கோபமான விமர்சனங்களிலுமே விரயமாகிவிடுகிறது.
இதைப் பயன் படுத்துவோம்.
சில விஷயங்கள் கோயிலின் சுடர் போலவும் சில விஷயங்கள் காட்டுத் தீ போலவும்.
எழுதாவிட்டால் புரியாது அமுங்கிபோய்விடும் ஹரணி.
இவர்களின் சம்பாத்யத்தை எண்ணி எண்ணி எழுதி முடிப்பதற்குள் எனக்கே அயர்ச்சியாக இருந்தது.
உங்களின் ஆலோசனைகளும் முதிர்ச்சியும் என்னை வழிநடத்தும் ஊன்றுகோலாய் உணர்கிறேன் பாலு சார்.
கடைசி வரை உங்களிடம் வருவேன்.
ஆர்.ஆர்.ஆர்.சார். இப்படியெல்லாம் வெறும் விமர்சனத்தோட விட்டுவிட மாட்டேன்.நிறைய நாம் செய்ய வேண்டியதிருக்கிறது.
கானற் பொழுதுகளை நமதாக்குவோம் காமராஜ்.
இன்னும் விடுபட்டதும் நிறைய இருக்கிறது. எழுத வேண்டியதும் செய்ய வேண்டியதும் நிறைய இருக்கின்றன.
கை கோர்த்துக் கொள்வோம் காமராஜ்.
வேடிக்கை என்னவென்றால் சட்டத்துக்குப் புறம்பான செலவுகளும் சேமிப்புகளும் இதைவிடப் பெரிய லிஸ்ட் இந்த ஸ்பெக்ட்ரம் காமன்வெல்த் இதுமாதிரில்லாம் படா படா பட்ஜெட்லாம்தான் அவங்க முழுநேர வேலையே சைக்கிள்.
எல்லாவற்றையும் மாற்றுவோம்.
இந்தப் பதிவு கல்லுக்குள் தேரை போல.
தவிர எனக்கு இண்ட்லி தமிழ்மணம் இடுகைக்கு ஓட்டுப் போடுவது இதிலெல்லாம் விருப்பமில்லை.
மெல்லப் பரவும். பரவட்டும். அவசரமில்லை.நல்லவற்றை நீங்கள் மற்றவருக்குச் சொல்லுங்கள் தங்லீஷ்பையன். அது படரும் உறுதியாய்.
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான். நீங்களில்லாமலா சிவா? தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
மாற்றமுடியாத இந்தக் கருத்தை உங்கள் வாழ்த்தாக ஏற்றுக்கொள்கிறேன் அருணா. நன்றி.
என் வாழ்க்கையே அப்படித்தான் அப்பாதுரை.கடும் பயணங்களை நான் விரும்பி ஏற்பவன்.
கடும் என்பது நாம் உருவாக்கிய சொல்.அதனால் என்னை பயமுறுத்தமுடியாது.
எனக்கென்ன ஆச்சு என்று இனிமேலும் பொறுக்கமுடியவில்லை.இருக்கும் நாட்களுக்குள் ஏதாவது செய்தாகவேண்டும் அப்பாதுரை.
முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அப்பாதுரை.
நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு நன்றி பத்மா.
போன வாரம் உங்களோடு தொலைபேசும்போது சொன்னதன் தொடர்ச்சிதான் இது.
மாற்றத்தை உண்டாக்குவோம்.தார்மீகமான துணை வேண்டும் உங்களைப் போன்றோரிடமிருந்து பத்மா.
கருத்துரையிடுக