3.5.11

ஒரு மரணத்துக்குப் பிந்தைய காலை




















அவன் இறுதியாய்
என்ன பேசினான்
என்றறியவும்-

அதற்கு முந்தைய நாள்
நடவடிக்கைகளில்
மாறுதல் ஏதும்
தெரிந்ததா என அறியவும்-

உணவருந்தியபோது
குறிப்பாய் எதையும் தவிர்த்தானா
என்றறியவும்
ஆர்வமாய் இருந்தார்கள்.

அவனின் இறுதி
மூச்சு பிரிவதைப்
பார்த்ததாகச் சொன்ன அவள்
கண்களில் ஒருவித
சாந்தம் தெரிந்ததாகவும்
சொன்னாள்.

இன்னும் சிலர்
அவன்
உறங்கிக்கொண்டிருப்பது
போல்தான் தெரிவதாகவும்

யாருக்கும் தொந்தரவு
தராமல் போய்விட்டதையும்
கவனமாகச் சொன்னார்கள்.

அவன் இறுதிநாள்
அணிந்த உடையின்
நிறம் குறித்தும்

காலணி அணியாதபடிக்குத்
தெருவில் காலையில்
சென்றது குறித்தும்

பேசியபடியே இருந்தார்கள்.

வினோதமாய்
ஒற்றைக் காக்கையின்
கரைதலும்-

எதிர் வீட்டு நாயின்
ஊளையும்-

இன்னும் சிலரின்
வார்த்தைகளில்.

எப்போதோ அவன்
இறந்து போயிருக்க
இப்போது மரணம்
வாழ்ந்துகொண்டிருந்தது.

2.5.11

ஓர் அறிமுகம்-கமலாதாஸ்
















எனக்கு அரசியல்
தெரியாது.
ஆனாலும்
அதிகாரத்திலிருக்கும்
அவர்கள் பெயர்களை
அறிவேன்.
நேருவில் தொடங்கும்
அவர்களை-
வாரத்தின் கிழமைகள்
போலவோ-
மாதத்தின் பெயர்கள்
போலவோ-
மீண்டும் மீண்டும்
சொல்வேன்.

நான் ஒரு
இந்தியன்(ள்).
பழுப்பு நிறம்.
மலபாரில் பிறந்து
மூன்று மொழிகளில்
பேசி-
இரண்டில் எழுதி-
ஒன்றில் கனாக்
காண்கிறேன்.

“ஆங்கிலத்தில்
எழுதாதே.
அது உன்
தாய்மொழியல்ல”
எனச் சொன்னார்கள்
அவர்கள்.

விமர்சகர்களே-
நண்பர்களே-
எனைப் பார்க்கவரும்
மருமகன்களே-
நீங்கள் எல்லோரும்
என்னைத் தனியே
விடக் கூடாதா?
ஏன் நான் விரும்பும்
மொழியில்
என்னைப் பேசவிட
மறுக்கிறீர்கள்?

நான் பேசும் மொழி
எனதாகிறது.
அதன் வடிவங்கள்-
வினோதங்கள்
எல்லாம் எனதே.
எனது மட்டுமே.

பாதி ஆங்கிலத்திலும்
பாதி இந்திய மொழியிலும்
பேசுவது
வேடிக்கையென்றாலும்
அதுதான் உண்மையானது.
என்னைப் போல
அதுவும்
இருக்கிறதைப்
பார்த்ததில்லையா?

என் மகிழ்ச்சிக்கும்
என் செயல்களுக்கும்
என் நம்பிக்கைகளுக்கும்
அது குரல் கொடுக்கிறது.

காக்கைக்குக்
கரைதல் போலவும்-
சிங்கத்திற்குக்
கர்ஜனை போலவும்
எனக்கு அது.

அது மானுட மொழி.
வேறெங்கும்
காண இயலாத
பார்க்கிற கேட்கிற
விழித்திருக்கிற
மனதின் மொழி.

புயலில் சிக்கிய
மரத்தினுடையது போலவோ-
பருவகால மேகமூட்டங்களுடையதைப்
போலவோ-
மழையினுடையதைப் போலவோ-
நிலைத்த முணுமுணுப்புடன்
பற்றி எரியும்
மயானத் தீயினுடையதைப்
போலவோ-
செவிட்டு குருட்டு
மொழியில்லை.

நான் சிறுமியாய்
இருந்தேன்.
நான் உயரமான போது
என் பாகங்களும்
வளர்ந்ததாலும்
ஓரிரு இடங்களில்
மயிர் முளைத்ததாலும்
நான் வளர்ந்துவிட்டதாகச்
சொன்னார்கள் அவர்கள்.

வேறென்ன கேட்க எனத்
தெரியாமல்
அன்பைக் கேட்ட போது
ஒரு
பதினாறு வயது
இளைஞன்
என்னைப்
படுக்கையறையில்
தள்ளிக்
கதவைப் பூட்டினான்.
அவன் என்னை
வீழ்த்தாவிட்டாலும்
என் துயரமான பெண்ணுடல்
வீழ்த்தப்பட்டு விட்டதாகவே
எண்ணியது.
என் மார்பகங்களின்-
பிற உறுப்புகளின் பாரம்
நோகடித்தது என்னை.
வருத்தகரமாய்
குறுகிப் போனேன்
நான்.

பின்னால்
ஒரு சட்டையையும்
என் சகோதரனின்
கால்ச்சட்டையையும்
அணிந்து
என் முடியைக் குட்டையாக
வெட்டிக்கொண்டு
என் பெண்மைத் தன்மையை
மறந்தேன்.
’புடவையை உடுத்து.
பெண்ணாக
மனைவியாக இரு.
பூ வேலைப்பாடுகள் செய்.
சமைப்பவளாக-
வேலைக்காரர்களுடன்
சண்டையிடுபவளாக இரு.
அடங்கிப் போ என்னவளே’
-சொன்னார்கள்.

‘சுவர்களில் உட்காராதே.
திரை போட்ட ஜன்னல்களின்
வழியே எட்டிப்பார்க்காதே.
அமியாகவோ கமலாவாகவோ
அல்லது
இன்னும் நல்லதாக
மாதவிக்குட்டியாகவோ இரு.’
பாத்திரத்தையும்
பெயரையும் காலம்தான்
தீர்மானிக்கவேண்டும்.

‘எல்லோரையும் ஏமாற்றும்
விளையாட்டுக்கள்
விளையாடாதே.
*ஒன்றொடொன்று
தொடர்பில்லாத
பைத்தியத்தோடோ-
அடக்கமுடியாத
*பெண்பித்துப் பிடித்தவனோடோ-
அலையாதே.
காதலால் கைவிடப்பட்டால்
கடுமையாக அலறாதே’.
-சத்தமிட்டார்கள்
பிரிவினையாளர்கள்.

நான் ஒருவனைச்
சந்தித்தேன்.
காதலித்தேன்.
அவனை ஏதும்
பெயர் கொண்டு
அழைக்காதீர்.
காதலுக்காய் அலைகிற
என்னைப் போல
பெண்ணுக்காய் அலைகிற
சராசரி ஆண்தான் அவன்.
அவனில்
பசி கொண்ட ஆறுகளின்
பரபரப்பு.
என்னில் சோர்வற்ற
சமுத்திரத்தின் காத்திருப்பு.

நான் பார்க்கிற
எல்லோரிடமும்
யார் நீ? எனக் கேட்டால்
நான்தான் என்ற பதில்.
எந்த இடத்திலும்
எல்லா இடத்திலும்
தன்னையே நான்
என
அழைத்துக்
கொள்கிறவர்களைத்தான்
பார்க்கிறேன் இந்த
பூமியில்.

அவன்
உறையில் இறுக்கமாய்ப்
பொருந்திய வாளைப் போல
அடைக்கப்பட்டிருக்கிறான்.
வினோதமான
நகரங்களின் தங்குமிடங்களில்
நள்ளிரவில் தனியாய்க்
குடிக்கும் ’நான்’தான் அது.
சிரித்ததும் நான்.
காதலித்ததும் நான்.
பின்பு வெட்கியதும்
தொண்டையில் ஏதோ
குறுகுறுக்க
செத்துக்கிடந்ததும் நானே.

நானே பாபி.
நானே யோகி.
நானே விரும்பப்பட்டவளும்
வெறுக்கப்பட்டவளும்.
எனக்கு உங்களுடையதல்லாத
மகிழ்ச்சியில்லை.
வலிகளுமில்லை.
நானும் என்னை
’நான்’ எனச் சொல்வேன்.

*Schizophrenia-எண்ணத்திற்கும் செயலுக்கும் உணர்விற்கும் தொடர்பற்ற மூளைவியாதி.

*Nympho-பெண்பித்தன்.

இந்த தடவை ப்ரசுரமாகாமல் தோற்றுப்போன வெற்றிகரமான மொழிபெயர்ப்புக்கவிதை உங்களின் ரசனைக்காய்.

கமலாதாஸ் கேரளாவின்-இந்தியாவின் பெண்குரலாய் ஒரு ஆண்குரலின் மொழியில் ஒலித்த ஒரு மாறுபட்ட சிந்தனாவாதியும் கவிஞரும்.

இவரின் இந்தக் கவிதையை 1986ல் மொழிபெயர்த்து எல்லா இதழ்களுக்கும் அனுப்பி வெற்றிகரமாய் பூமராங் போலத் திரும்பி வந்து என்னிடமே போத்தலில் அடைபட்ட பூதமாய் உறங்கியபடிக் கிடக்க இக்கவிதையை உங்களின் வாசிப்பனுபவத்துக்காக இங்கே தந்திருக்கிறேன்.

இந்த மொழிபெயர்ப்பை சிலாகித்து ப்ரகாஷ் எனக்கு ரெண்டு பால் சர்பத்துகள் வாங்கிக்கொடுத்த இனிமை என் நாக்கின் சுவைநரம்புகளில் இன்னமும்.

நீங்களும் படிக்கிறீங்கதானே இதை ப்ரகாஷ்?

ஒரு ஒப்பிடுதலுக்காக இதன் மூலமும் இணைத்திருக்கிறேன்.

I don’t know politics but I know the names
Of those in power, and can repeat them like
Days of week, or names of months, beginning with Nehru.
I amIndian, very brown, born inMalabar,
I speak three languages, write in
Two, dream in one.
Don’t write in English, they said, English is
Not your mother-tongue. Why not leave
Me alone, critics, friends, visiting cousins,
Every one of you? Why not let me speak in
Any language I like? The language I speak,
Becomes mine, its distortions, its queernesses
All mine, mine alone.
It is half English, halfIndian, funny perhaps, but it is honest,
It is as human as I am human, don’t
You see? It voices my joys, my longings, my
Hopes, and it is useful to me as cawing
Is to crows or roaring to the lions, it
Is human speech, the speech of the mind that is
Here and not there, a mind that sees and hears and
Is aware. Not the deaf, blind speech
Of trees in storm or of monsoon clouds or of rain or the
Incoherent mutterings of the blazing
Funeral pyre. I was child, and later they
Told me I grew, for I became tall, my limbs
Swelled and one or two places sprouted hair.
WhenI asked for love, not knowing what else to ask
For, he drew a youth of sixteen into the
Bedroom and closed the door, He did not beat me
But my sad woman-body felt so beaten.
The weight of my breasts and womb crushed me.
I shrank Pitifully.
Then … I wore a shirt and my
Brother’s trousers, cut my hair short and ignored
My womanliness. Dress in sarees, be girl
Be wife, they said. Be embroiderer, be cook,
Be a quarreller with servants. Fit in. Oh,
Belong, cried the categorizers. Don’t sit
On walls or peep in through our lace-draped windows.
Be Amy, or be Kamala. Or, better
Still, be Madhavikutty. It is time to
Choose a name, a role. Don’t play pretending games.
Don’t play at schizophrenia or be a
Nympho. Don’t cry embarrassingly loud when
Jilted in love … I met a man, loved him. Call
Him not by any name, he is every man
Who wants. a woman, just as I am every
Woman who seeks love. In him . . . the hungry haste
Of rivers, in me . . . the oceans’ tireless
Waiting. Who are you, I ask each and everyone,
The answer is, it is I. Anywhere and,
Everywhere, I see the one who calls himself I
In this world, he is tightly packed like the
Sword in its sheath. It is I who drink lonely
Drinks at twelve, midnight, in hotels of strange towns,
It is I who laugh, it is I who make love
And then, feel shame, it is I who lie dying
With a rattle in my throat. I am sinner,
I am saint. I am the beloved and the
Betrayed. I have no joys that are not yours, no
Aches which are not yours. I too call myself I.

1.5.11

அதன் ப்ரஹாரம்




















இல்லாத சோறெடுத்துத்
தன் குழந்தைக்கு
வறுமையை ஊட்டிடுவாள்
நொண்டிப்
பிச்சைக்காரி.

வௌவால் இடும்
புழுக்கையையும்-

காற்றுடன் மோதும்
வெளிச்சத்தையும்-

தாங்கிக்கொண்டு
வேர்வையோடு
முறைப்பார்

தக்ஷிணாமூர்த்தி
தினந்தோறும்.

தெருப்பயல்கள்
த்வம்சித்த
சொறிநாயொன்று

ஒளிந்துகொள்ள
இடம் தேடும்
அதிகாரநந்தியின்
பின்னே.

தான் செய்த
நைவேத்யத்தைத்

திருட்டுத்தனமாய்
ருசிபார்ப்பான்
பக்ஷிராஜன்

மடப்பள்ளிக்கும்-

கை அலம்பும்
கிணற்றிற்கும்-
தெரியாமல்.

சந்தனக் காப்பிட்ட
மூலவருக்குக்

கற்பூரம் கொண்டு
குருக்கள்
முகம் காட்ட

ப்ரஹாரம் தெரியும்
ப்ரகாசமாய்.

கணையாழி-அக்டோபர், 1986.

என் 20ம் வயதில் ப்ரசுரமான எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. எனக்கு மிகவும் த்ருப்தி அளித்த- ஒரே தடவையில்- திருத்தமில்லாமல் எழுதப்பட்ட கவிதை.

அந்த இதழில் விக்ரமாதித்யன்,என் நண்பன் பொன்.சந்தானகிருஷ்ணன்(மதுமிதா),உமாமகேஸ்வரி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.

ப்ரகாஷ் படித்துவிட்டு இதை எல்லோரிடமும் காட்டி தமிழுக்கு இன்னொரு ப்ரமாதமான கவிஞன் ரெடி அய்யா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டது நினைவிலுண்டு.

1989க்குப் பின்னால் எழுதுவதையே நிறுத்திவிட்டு அவர் சொன்னதை நிரூபிக்காமல் ஒதுங்கிவிட்டேன். இப்போது வரையிலும் நான் வருந்தக்கூடிய ஒரே தவறு என்று இதைச் சொல்வேன்.

மறுபடியும் தஞ்சாவூர்க்கவிராயருடன் மீட்கப்பட்ட என் உறவு 2009 பெஃப்ருவரிக்குப் பின் என்னை எழுத வைத்தது.

என்னை மீட்டெடுத்துக்கொடுத்த த.க.வுக்கும் தூண்டுதலாய் இருந்த மறைந்த புத்தகன் செல்லத்துரை கவிஜீவன் முதலியோருக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.

வேர்களுக்கு நீர்விட்டும் வளராது பட்டுப்போய்விட்டதே இந்தக் கொடி என்று வருத்தத்துடன் மறைந்த தஞ்சை ப்ரகாஷுக்கு என் கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.

30.4.11

மொழியற்றவனின் துயர்

















தீயினும் கொடியது
தேவையற்ற பொழுதில்
சந்தேகமும்-

தேவையான தருணத்தில்
அவநம்பிக்கையும்.

பனியினும் குளிர்ந்தது
மன்னிப்பின் தண்மையும்-
பரிவற்றவர்களுக்கு அன்பும்.

பூமியினும் பளு நிறைந்தது
பழி சுமப்பவனின் மௌனமும்-

விட்டுக் கொடுப்பவனின்
பெருந்தன்மையும்.

சகிக்கவும் தீராதது
இளமையில் இறத்தலும்
நெடுநாள் வாழ்தலும்.

அடைய முடியாதது
திட்டமிடா இலக்கும்
நட்டமில்லா அனுபவமும்.

காணச் சகியாதது
பகிர வழியற்றவனின்
இரவும்-

நிமிர மொழியற்றவனின்
துயரும்.

27.4.11

அஸ்தமன காலம்


















நீ

எனக்குச் செய்த
உபகாரங்கள்
எல்லாவற்றையும்

தொலைக்கடித்துவிட்டது
மறதி.

என்னைச் செலவழித்துச்
சேகரித்தவைகள் எல்லாம்

கையை விட்டுப்
போய்க்கொண்டிருக்கின்றன.

உதயமும் அஸ்தமனமும்
கடிகார முள்ளுக்குள்.

கோயில் மணியின்
நாதம் தரும்
அனுபவம்
இனி பயமே.

என்னை நீ பார்த்தாய்.

நீ காட்டிய கலக்கம்
என் நம்பிக்கையைத்
தளர்த்துகிறது.

காலம் கொடுத்த
பரிசாய்
இத்தனை நாளும்.

இனி என் கஷ்டம்
ஒவ்வொரு விடியலும்.

(மார்ச்-ஏப்ரல்,1988-கணையாழி.)

இநத இதழில் ந.முத்துசாமி நா.விச்வநாதன் நகுலன் விக்ரமாதித்யன் தஞ்சை ப்ரகாஷ் ஆகியோரின் படைப்புக்களோடு இந்தக் கவிதையும் வெளியாகி இருந்தது  என் பாக்கியம்.

இந்த இதழில் ப்ரகாஷ் மொழிபெயர்த்த ஜோஸஃப் ப்ராட்ஸ்கியின் குறுக்குவிசாரணை மொழிபெயர்ப்பு அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கையில் ஆஸ்ட்ரோமைலட்டிஸ் என்கிற கட்டியுடன் உருவெடுத்து எழுதமுடியாமல் சிகிச்சை எடுத்த போது மொழிபெயர்த்து வாயால் சொல்லச்சொல்ல நான் எழுதி கணையாழிக்கு அனுப்பி அது ப்ரசுரமானது.

ப்ரகாஷுக்கு அப்போது கிடைத்த அனுபவமும் த்ருப்தியும் பின்னால் கள்ளம் என்கிற நாவலை இதுபோலவே வாயால் சொல்லி நான் எழுத ஒரு புது முயற்சிக்குக் காரணமாக அமைந்தது. 

26.4.11

மழைக்காலம்


























இப்போது
மழை வந்ததை
யாரும்
எதிர்பார்க்கவில்லை.

சில பேர்
கூரைகளுக்கடியிலும்

சில பேர்
வானத்தின் கீழுமெனப்
பிரிந்து கொள்ள

மழை வலுத்தது.

யாரையும் பேசவிடாமல்
வாயை அடைத்தது
மௌனம்.

மழை வாசனை
மண்ணோடும்
மண்ணில் கிடந்தவற்றோடும்
கரைந்து புதுக்கலவையானது.

என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.

நிர்வாணம் தவிர்த்து
மற்றெல்லாவற்றையும்
கரைக்கும் மூர்க்கத்துடன்

மழை இன்னும்
வலுத்தது.

மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.

மழை எப்போது பெய்யுமெனக்
காத்துக்

கடைகளுக்குக் குடையை
விரித்துப் போகும்
குழந்தைகளைப்
பார்க்கமுடியவில்லை.

இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை.

இந்தக் கவிதையின் முதல்வரி போலவே எதிர்பாராது இன்றும் மழை பெய்தபடி இருந்த இந்தக் காலையில் நினைவுகள் பின்பக்கமாய்ப் பயணித்தன.

23 வருஷங்களுக்கு முன்பு இந்தக் கவிதை ஜூன் 1988 கணையாழியில் வெளிவந்திருந்தது.அப்போது எனக்கு 22 வயது.

அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் என்று நிதானிக்க அவகாசம் வேண்டியிருந்தது.அசோகமித்திரன் கௌரவ ஆசிரியராக இருந்தார்.

தொடர்ச்சியாகக் கணையாழி-முன்றில்-இன்று-கனவு-பாலம்-காலச்சுவடு ஆகியவை என் கதை-மொழிபெயர்ப்பு-கவிதைகளை வெளியிட்டு எனக்குக் கிறுக்குப் பிடிக்க வைத்திருந்தன.

இந்தக் கவிதையை இப்போது திருப்பிப் படிக்கும்போது ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் என்னைத் தேடுவதாய் இருக்கின்றன நினைவுகள்.

இன்றைய ஒப்பனைகள் எதுவும் இல்லாத என் 22 வயதுக் கவிதை எனக்கு வசீகரமாகவே தெரிகிறது.

வேறு வழியில்லை.படித்து வையுங்கள். 

24.4.11

ஒன்றெல்லாம் ஒன்றல்ல.




















1.
சொற்கள்
ஒன்று கூடக் கவிதை.
கவிதையைக் கலைத்தேன்
பொருள்
தேடித் தவித்தேன்.

2.
கற்கள்
ஒன்று கூடக்
கட்டடம்.
கட்டடத்தைத்
தகர்த்தேன்.
கற்களைத்
தொலைத்தேன்.

3.
துளிகள்
ஒன்று கூடிக்
கடல்.
கடலை
வடித்தேன்.
துளியின்றி
மலைத்தேன்.

4.
ஒன்றாய் இருந்தால்
வேறு.
ஒன்று கூடினால்
வேறு.
ஒன்றாய்க்
கூடிப் போனபின்பு
மீண்டு
கிடைப்பதும்
வேறு.

23.4.11

சுவடு



உறவும் உணவும்
பகிராது அழியும்.

நினைவும் நெருப்பும்
அழியாது வளரும்.

நிலவும் சிலையும்
வளராது தேயும்.

கல்வியும் நேர்மையும்
தேயாது வாழும்.

பகையும் பழியும்
வாழாது வீழும்.

அன்பும் துணிவும்
வீழாது வெல்லும்.

அகந்தையும் சூழ்ச்சியும்
வெல்லாது மாளும்.

பெயரும் புகழும்
மாளாது நீளும்.

22.4.11

பந்தயம்
















பகடைக்காய்களின்
குலுங்கிக்கொண்டிருக்கும்
பக்கங்களில்-

சுண்டப்படும்
நாணயங்களின்
முடிவில்லா
சுழற்சியில்-

பாய்ந்து செல்லும்
குதிரைகளின்
கால்களுக்கு
இடைப்பட்ட
தொலைவுகளில்-

மையப்புள்ளிக்கும்
நோக்கி எறியப்படும்
அம்புகளுக்கும்
இடையே-

நிமிர்தலுக்கும்
கவிழ்ந்திருக்கும்
மூன்று சீட்டுக்களுக்கும்
நடுவே-

காத்திருக்கிறது

சாகசங்கள் கசியும்
-கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்-
எனும் வாக்கியத்தில்
ஒளிந்திருக்கும்
திடுக்கிடல்.

21.4.11

மறுபக்கம்


















முடிந்த பின்னும்
துவங்குகிறது
ஒரு பயணம்.

பருகிய பின்னும்
தவிக்கிறது
தீராத தாகம்.

அணைந்த பின்னும்
எரிகிறது
மனதின் தீபம்.

அழிந்த பின்னும்
பிறக்கிறது
ஆரவார ஆக்கம்.

விழுந்த பின்னும்
வீறிட்டெழுகிறது
விடா முயற்சி.

கலைந்த பின்னும்
உருவாகிறது
காணா வேஷம்.

ஒழுகிய பின்னும்
நிரம்புகிறது
ஞானத்தின் குவளை.

வாடிய பின்னும்
மிஞ்சுகிறது
சூடிய வாசம்.

தொலைந்த பின்னும்
கிடைக்கிறது
கேளாப் புதையல்.

வெட்டிய பின்னும்
துளிர்க்கிறது
பசும் நம்பிக்கை.

பிரிந்த பின்னும்
இணைகிறது
இறவா உறவு.

மரித்த பின்னும்
வாழ்கிறது
நீங்கா நினைவு.

20.4.11

இரு பக்கம்

















1.
முன் சக்கரம்
பின் சக்கரத்தை
இழுத்துச் செல்கிறது.

முன் சக்கரத்தின்
பின்னே
பின் சக்கரம்
ஓடுகிறது.

அல்லது

பின் சக்கரம்
முன் சக்கரத்தைத்
தள்ளுகிறது.

முன் சக்கரமும்
பின் சக்கரமும்
ஓடிக்
கொண்டிருக்கின்றன

அல்லது

நிற்கின்றன.

நான்
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.

அவ்வளவுதான்.

2.
வென்றது நான்.
தோற்றது நீ
என்றான் சின்னவன்.

தோற்றது நீ.
விட்டுக் கொடுத்தேன்
நான் என்றான்
பெரியவன்.

சில ஆட்டங்களில்
மட்டும்

இப்படி
ஆகிவிடுகிறது

இருவருமே தோற்பதும்
இருவருமே வெல்வதும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...